ஞாயிறு, 13 டிசம்பர், 2009
வணிகம் பேசினாலே மனிதம் பேசுவார்களா?
ஒரு “தேசத்தின் குரல்” சர்வதேசத்தின்
செவிப்பரைகளில் மோதி மோதி
இந்து சமுத்திரத்தில்,
ஈழத்தமிழினத்தின் விழிகரித்த உப்புகடலில்
குருதி கொப்பளித்துக் கிடக்கும் ஈழத்தின் இருப்பை
உரைத்துரைத்து ஓய்ந்து போனது.
கண் மறைந்து போன கால நீட்சியில்
கற்றுக் கொண்டதும், கண்ணீர் விட்டதும்,
கனக்கும் இதயக்கூட்டின் கணக்கில் அடங்காமல்
நீண்டநெடும் பயணத்தில் இன்னும் தொடர்கிறது.
வேர் மடியின் தாகம் கொண்டு எத்தனையோ உன்னதங்களை,
வேதனையைச் சுமந்து சுமந்து உலகிற்குக் காட்டியாயிற்று.
தர்மத்தின் தலையில் சூது இல்லை என்பதையும் உணர்த்தியாயிற்று.
நீறிட்டுக் கிடக்கின்றன நெருப்பின் முகவரிகள்
ஊதிச் செல்கிறது காலக்காற்று
காலநீட்சியில் நீளும் கோலங்களில்,
கண்ணீரின் உலர்ச்சியை எழுதியபடியே
பூமிக்கரியம் புலன்களை உலுக்கிறது.
முள்ளி வாய்க்காலின் ஓலங்கள்
எங்கள் மூச்சுக் காற்றைத் தவிர
அத்தனையையும் அள்ளிச் சென்று ஆறு மாதங்கள் கடந்தாயிற்று,
எனினும் அவலம் ஆறவில்லை, ஆற்றப்படவுமில்லை
முன்னரைக் காட்டிலும்,
மூச்சின் உணர்வில் வெம்மை அதிகரித்துக் கிடக்கிறது.
இன்னும் மயக்கம் கோர்த்து உருளும் உலகம்
ஊமையாய், செவிடாய், கூரிய பார்வையற்ற குருடாய்
விற்பனைக்கோ அடகு வைக்கவோ எதுவுமற்ற
எங்களைப் பார்க்கப் பஞ்சிப்படுகிறது.
இருக்கட்டும் இதுவும் பழகி விட்டது.
மீட்பின் தேடல் ஓயாதவரைக்கும்
நித்திய வாழ்விற்குள் விட்டொதுங்க முடியாது.
ஓசோவின் தத்துவம் போல் தொலைத்த இடத்தில்
தேடுவதற்கும் அனுமதியற்று அவலமுறினும்
உயிர்ப்பின் ஒலி மட்டும் உயர்வெய்தவே செய்கிறது.
காட்சி மாறி விட்டது.
தட்டாமாலை சுற்றிவிட்டு தொப்பென்று போட்டுவிடும் என்று
அன்றொருநாட் சொன்னதுபோல் சம்பவத் தொடர்கள்
ஆரம்பக் கோட்டுக்குள் ஆயத்தமாகி விட்டன.
எலுமிச்சை எடுத்து எல்லோரும் ஒரு முறை
உச்சந்தலைகளில் உரசிக் கொள்ளுங்கள்.
போதைக்கான மருத்துவம் அல்ல பித்தத்திற்கான வைத்தியம்.
முள்ளி வாய்க்காலின் ஓலங்கள் முகவரியற்றவையாகவும்,
வணிகம் பேசினாலே மனிதம் கணக்கெடுக்கப்படுவதாகியும்,
அன்பற்றுப் போய்க் கிடக்கிறது அகிலம்
இருக்கட்டும் பாடுகளே எம்மைப் பலப்படுத்தும்
பட்ட வடுக்களே எம்மை வளப்படுத்தும்.
செவ்வாய், 4 ஆகஸ்ட், 2009
நீங்கள் என்னதான் குத்துக்கரணம் போட்டாலும் எங்களின் தாயக மீட்பை ஆதிக்கக் கூப்பாடும் ஆலகால விடமும் பாதிக்க முடியாது.
Fri, 03/11/2006
அழைக்கின்றீர்கள்.... மதிப்பளிக்கிறோம்....
மனிதம் செத்திருக்கும் அனைவரிடமும்
இன்னும் மானுடத்தை எதிர்பார்த்தபடி....
மென்மேலும் எங்களுக்குள்
இன்னல்களைச் சுமந்தபடி....
கரங்களோடு எங்கள்...
கண்ணீரையும் கட்டுப்படுத்தி...
இன்னும் உங்களுக்கு மதிப்பளித்து வருகிறோம்.
எம் உறவு...
எம் வீடு...
எம் ஊர்...
எம் தேசம்..
எங்களுக்கானதை எம்மிடம் சேர்க்க
ஆவன செய்ய உங்களால் இயலுமா?
எங்களை நாங்களே காத்திடத் துணிந்ததை
பயங்கரவாதப் பட்டியலில் இடுகிறீர்!
நசியுண்ட எறும்பும் தனைக் காக்கக் கடிக்கும்
அது உங்கள் பார்வையில் பயங்கரவாதமா?
உயிர்வலி எங்களுக்கு...
உணர்வுகளைத் தூக்கிலிட்டு
எங்கள் சாவிற்கு...
எமனுக்கு வரவெழுத எமக்கென்ன தலைவிதியா?
மறுபடியும், மறுபடியும் மரணத்தின் ஓலம்தான்
மண்ணிடையே எமக்கான விதியாக்கப்படுகிறதே.
கண்ணிருந்தும் குருடான கதை உங்களதா?
உலக நாடுகளே!
உங்கள் எவராலும் விதி மாற்ற முடிந்ததா?
தடை போட்டீர்கள்..
காரணக் கதைகள் ஆயிரம் உரைத்தீர்கள்.
அல்லைப்பிட்டி, வங்காலை, வல்லிபுனம், சம்பூரென
எள்ளி நகைக்கிறதே உங்கள் காரணங்கள்
அவை உங்களுக்குப் புரிகிறதா?
வாழ்வுக்காய் எங்கள் போராட்டம்
கொடிய கந்தக நெடியிடையே எம் வாழ்வோட்டம்
புனர் வாழ்வும் முடக்கப்படும் பூமியிலே
ஏதிலிகளாய் எம் வாழ்வும் தொடரும்
புரிகிறதா?......
அல்லது புரியாமலே இன்னும்
உண்மையொளி காணாக் குகையில்
இருள் மூடிக் கிடக்கின்றீர்களா?
கிழக்கு முகம் கறுப்பதில்லை
காலதேவன் கிறுக்கலிலே
சூரியன் இருண்டதில்லை.
கோல விளக்கொளியில் கூறுகெட்ட வாழ்வெமதல்ல..
கந்தகப் பிழம்பிடையே.. களமாடும் புதல்வர்களைக்
கொண்டெழுந்ததே எமது வாழ்வு.
திசைவெளிகள் எங்கெனும் இசைவாக்கம் என்பது
எம்மினத்தின் அசையாத வாழ்வுக்கான தவம்.
உயிரெடுத்து உரம் தொடுத்த
எங்களின் தாயகத்து மண்மீட்பை...
ஆதிக்க கூப்பாடும், ஆலகால விடமும்
பாதிக்க முடியாது
ஆதலால்....
இன்னும் உங்களுக்கு மதிப்பளித்து வருகிறோம்.
உயிர் வலிகளை எடுத்துரைக்க...,
உங்களின் மானுட உயிர்ப்பை அளவெடுக்க..
மென்மேலும் எங்களுக்குள்
இன்னல்களைச் சுமந்தபடி....
கரங்களோடு எங்கள்...
கண்ணீரையும் கட்டுப்படுத்தி...
இன்னும் உங்களுக்கு மதிப்பளித்து வருகிறோம்.
இரண்டரை ஆண்டுகளுக்கு முன்னர் எழுதப்பட்ட வரிகள். இன்னும் முன்னிலும் அதிகமான இன ஒடுக்குமுறைக்கு உள்ளாக்கப்பட்டு, பட்டிகளுக்குள் முடக்கப்பட்டதான வாழ்வு???? வல்லாண்மைகளின் பெருவிருப்பு சிங்கள் இனவாத முகங்கொண்டுள்ளதை இன்றைய நாட்கள் உணர்த்தியபடியேதான் நகர்கின்றன. நீங்கள் என்னதான் குத்துக்கரணம் போட்டாலும் எங்களின் தாயக மீட்பை ஆதிக்கக் கூப்பாடும் ஆலகால விடமும் பாதிக்க முடியாது. பார்த்திருங்கள் மடுவினில் தேங்கும் தாயக மீட்பலை மலைகளைத் தகர்த்து எழும். நேற்றைய நாட்களின் இவ்வரிகளை மீண்டும் மீண்டும் மீட்பித்து எதுவரை நாங்கள் உலகிற்கு மதிப்பளித்தோம் என்பதை பறை சாற்றியபடியே தடுக்கும் சக்திகள் அனைத்தும் உடைப்போம். இது தாயை மீட்கும் யாகம் அணையாது.
வியாழன், 23 ஜூலை, 2009
ஒப்பாரிக்கு மேல் ஒன்றேதும் உண்டென்றால்.....
கண்ணீர், செந்நீர்
ஒப்பாரி, நடைபிணம்
காட்சிப்படுத்தலின் உச்சம்.
தென்னிலங்கைத் தெருக்களில்
இனவாதப் பேய்களின் பிணக்கூத்து.
விழி பறிக்க ஒரு கூட்டம்
வீதியிலே மொழி கேட்டு
முடமாக்க ஒரு கூட்டம்.
கடை நொறுக்க ஒரு கூட்டம்
குடி பறித்துக் களவாட ஒரு கூட்டம்.
பெண்மை சீண்ட ஒரு கூட்டம்.
பின் புணர்ந்து பிணமாக்க ஒரு கூட்டம்.
தார் கொதியத்தில் குழவியிட,
கொதிக்கும் குறியிழுக்க,
கொங்கைகள் அறுத்தெறிய…
மிதிக்கும் காலடியில்
மென் மழலை துடித்தலற,
தாய்மையிடும் ஓலத்தையும்
இரசிப்பதற்கு ஒரு கூட்டம்.
நிர்வாணப் படுத்தியதும்
உயிர்விதையில் மிதித்து
ஓலமிட வைத்ததுவும்
பெற்றவன் உற்றவன்
பெற்றெடுத்த மக்களின் முன்
எத்தனை பெண்களை?
எத்தனை மிருகங்கள்?
ஓர் உயிர் சிதைக்க
ஒரு நூறு இனவாதியர்
பேதைத் தமிழனைப்
பிய்த்தெறிந்த வரலாறு.
ஒப்பாரிக்கு மேல்
ஒன்றேதும் உண்டென்றால்
அதுவே அன்றெம் தமிழர் நிலை.
புலம் பெயர் உறவுகளே!
தமிழர் விழி பறிப்பால்,
கொதிக்கும் குறியிழுப்பால்,
பெண்மையுற்ற பெரு வலியால்,
பிஞ்சுகளின் உயிர்ப் பிசைவால்,
மொழியுற்ற கலியால்,
இனவாதப் பிணக்கூத்தால்,
உடல் பிய்ந்து துடிதுடித்து
உயிர் துறந்த உறவுகளால்
வாழ்வெடுத்து வந்தவர் நாம்
இன்று நினைவுபடுத்தலின் உச்சம்.
வாழ்வெடுத்து வந்து விட்டு
வலி மறந்து போனோமா?
ஆள்பவரில் மாற்றமில்லை
மாள்வு ஈழத்தமிழர் மேல்
மாலையிட்டே நிற்கிறது.
வாழ்ந்த மண், சூழ்ந்த கலி
வந்த மண்ணில்ச் சொல்லி
ஆழ்ந்த துயர் களை!
அகிலம் என்னும் கரம் பற்றி
அன்னை விழி துடை!
இனவாதப் பேய் தின்ற
உறவுகள் சாந்தி பெற
இனம்வாழ உடன் இயங்கு!
இன்று நினைவுபடுத்தலின் உச்சம்.
எத்தனை ஆண்டுகள்?
எத்தனை வாதைகள்?
இன்னும் செத்தவர் பட்டியல்
தொடர்கதை ஆகுது.
குடிமனை இழப்பதும்,
குறவர்போல் அலைவதும்
உறவுகள் சரிவதும்,
உதிரத்தில் குளிப்பதும்,
கருணையே இல்லையா?
சர்வ தேசங்களே!
விழி அகலத் திறந்தெங்கள்
வேதனையைப் பாருங்கள்!
மெய் அறிய வாருங்கள்!
இனவாதம் குதறும் எம்
வாழ்வியலை கணக்கெடுங்கள்!
போர் எங்கள் கைகளிலே
திணிக்கப்பட்ட நிலை உணர்வீர்!
தடை என்னும் தராசினிலே
தாழ்ந்திருக்கும் தவறறிவீர்!
ஒப்பாரிக்கு மேல்
ஒன்றேதும் உண்டென்றால்
அதுவே இன்றுமெம் தமிழரின் நிலை காண்பீர.;
இது நினைவுபடுத்தலின் உச்சம் மட்டுமல்ல
நிகழ்வுகளின் வலி உரைப்பு.
வியாழன், 9 ஜூலை, 2009
"பூப்பூவாப் பறந்து போகும் பட்டுப்பூச்சியக்கா - நீ பளபளன்னு போட்டிருப்பது யார் கொடுத்த சொக்கா.?"

அகரத்தில் ஆரம்பிப்பதுதானே முறை.
வியாழன், 17 மே, 2007
சாலக்கட்டமைப்பின் சீர்வலு

புலத்திடை வந்து புத்துணர்வு ஊட்டியோன்
கலையெனும் அழகுடன் கதிரொளி வீசியோன்
காலனைப் பற்றிக் கரைந்தது எப்படி?
மாதம் ஒன்று மந்தமாய் ஆனது.
பாதைகள் வகுத்தவன் பயணப்பட்டது – எம்
காதடியில் இன்னும் கனத்துக் கிடக்கிறது.
ஆளுமை கொண்ட அறிவொளி மைந்தனே!
நீள நெடும் பயணம் நிறைவுகாணும் வேளையிலே
காலக்கரை பற்றி கண்மறைந்து போனதென்ன?
ஆழச் சுழியோடி அகிலத்தின் திசையெங்கும்
சீலப் பணியாற்றி சிந்தைகளை வென்றவனே!
பாலமிட்டுப் பற்பலரை பக்குவமாய்ப் பண்படுத்தி
சாலக்கட்டமைப்பில் சீர்வலுவாய் சேர்த்தவனே!- உனை
ஓலமிட்டு ஒளி சிதறும் கந்தகக் காவாலி
மாளவைத்த கதை மறையாமல் உயிர்க்கிறது.
கலையழகா!,
வீணாகப் போனவன் வந்துன்னை
விரைந்து அள்ளிப் போய்விட்டான்.
காணாமல் போனவர்கள், கடத்தப்பட்டவர்களென
எதிர்காலம் அறியாமல் ஏதேதோ பேசினோமே..
காலன் வந்துன்னைக் கடத்திப் போனானே
நான் இப்போது கட்புலன் அறியாக்
காற்றுக்குள் உனைத் தேடுகிறேன்.
காலனை ஒரு முறை என்
கண்ணெதிரே அழைத்துவா!
அவன் குரல்வளையைக் கடித்து
கோமாவில் போட குமுறுகிறது
என்னுள் மாபெரும் ஆத்திரம்.
அகிலத்தின் புரையான
ஆணவஅரசெல்லாம் எம்
அன்னையவள் ஈழமண்ணை
அலங்கோலப் படுத்துகையில்
உலகெலாம் பரவிய உறவுக் கொடிகளை
திரட்யெடுத்து திண்மையூட்டிய
உன்னையவன் பறித்தது
உலக மகா பாதகம்.
“கவிஞர்கள் மகாப் பொல்லாதவர்களோ?”
எக்கருத்தால் என்னிடத்தில்
இக்கணை தொடுத்தாய் அறிகிலேன்.
பொல்லாத்தன்மை கூடப்பிறப்பெடுத்து
வருவதில்லை வாழ்வுரிமை மறுக்கப்படும்
வல்லூறுகளுக்கு மத்தியிலே
வலிப்பட்டு, வதைபட்டு வாழும் எச்சீவனும்
பொல்லா முகம் கொண்ட
போர்ப்புலியாய் மாறும் என
இன்றில்லா உந்தனுக்கா புரியாது?
விழவிழ எழுகின்ற வேதத்திற்கு உரியவனே,
வெல்லும் தமிழீழத் தாகத்தை உடையோனே,
காற்றிலாடும் விழுதனைத்தும்
வேர்மடியில் பிணைத்ததுடன்
ஆற்றியது போதுமென்றா
கூற்றுவன் பின் சென்றாய்?
மாற்றமது கூறும் காலக்கருவாகி
மண்மீட்பில் புலம்பெயர்வேர்களின்
பலம் ஏற்றி பயணிக்கத் தூண்டி,
ஓய்வின்றி மீதி வழிபயணிக்கும்
பாதை காட்டி சென்றவனே,
ஓயமாட்டோம் - இனி எவ்
இன்னல் வரினும் சாயமாட்டோம்.
மாயமான் எம்மிடையே மருண்டோடும் காலமிது.
தாயக மடிசாய்ந்த தளராத தோழனே!
ஓய்வெடுத்து நீ உறங்கு.
உன் உறுதி எங்களிடம் உயிர்க்கும்.
