வியாழன், 27 நவம்பர், 2008

ஆண்டுக்கொருமுறை வந்து உங்களை ஏக்கக் கூண்டுக்குள் அடைக்க இனியும் எம்மால் முடியாது.
உயிர் முட்டி எழுகிறது உணர்வு.
காதுமடலை உராயும் காற்றின் வழியே
உங்கள் மூச்சின் இளஞ்சூடு படர்கிறது.
அருவமாய் வந்தெங்கள் அருகிருக்கிறீர்கள்...
உப்பேரி கரையுடைக்கும் எங்கள் விழிகளுக்குள்
உக்கிர நெருப்பை தேடுகிறீர்கள்.

உமக்கான மொழியெடுத்து
உம்மோடு பேச முடியாது, ஊமையாகி,
தலை குனிந்தே உங்கள் முன்
குற்றக் கூண்டேறி நிற்கிறோம்.

வெற்று வார்த்தைகளால் கவிபாட முடியவில்லை
பொய் கலந்தென் புனைவிருப்பின்
சத்திய நெருப்பு சுத்தி வந்து தீய்க்கிறது.

கார்த்திகை 27, 1982
முதல் மாவீரன் மண்ணில் சரிந்து
இன்றுடன் ஆண்டு 27 ஆகிவிட்டது.

காலநதி என்னவோ ஈழவர் வாழ்வைக்
கரைத்தபடி வேகமாய் நகர்கிறது.
இளமை தேய்ந்து, முதுமை எங்கள்
காதோரக் கேசங்களில் கடிதம் எழுதுகிறது.

கார்த்திகைத் திங்கள் என்றாலே
கனக்கும் இதயத்திற்கு
கல்லறைப் பாடல்தான்
உயிர் உந்தும் விசையை
உள்ளெடுக்க வைக்கிறது.
ஒவ்வொரு வரிகளுக்குள்ளும்
உயிர்துளிகள் உருகி
உறுதி மொழி எடுக்கும் வரை
ஓர்மமின்றி நலிகிறது.

உங்களைத் தரிசிக்கவரும் ஒவ்வொரு கணமும்
நேற்றைய நாட்களின் தோழமைச் சிரிப்பும்,
எங்கள் மீதான உங்களின் நம்பிக்கைத் துளிர்ப்பும்
ஆழப்பரவி எங்கள் சுயத்தை எரிக்கின்றன.

ஆலய தரிசனம் ஆன்மாவிற்கு நிம்மதி
அதிலும் உன்னத தோழர்களின்
உயிர்ப்பூவனத்தில்அந்தி சாய்கையிலே
அமர்தலே பேரின்பம்.

தேவரீர்!,
உங்கள் கோபுர வாசலுக்குள்
பாதம்பதிக்க வழியற்ற
புலம் பெயர்வின் பெருவாழ்வு...
அருவருப்புப் பிண்டம்போல்
அகத்தில் நெளிகிறது.

உங்கள் உயிர்க்கொடையின் செறிவு
உள்ளப்புண்களில் அமிலம் அள்ளிச் சொறிகிறது.

ஒவ்வொரு வருடமும்
ஏதோ புலம்பலுடன் உங்களைக் காணவந்து,
ஆவி துடித்திருக்கும் உங்களின்
ஆவலை முடக்கிவிட்டு,
'மறுபடியும் வருவோம்,
தாயக விலங்கறுத்த தேமதுரச் சேதி கொண்டு
தித்திக்க பேசுவோம்" என்றும் வாக்களிக்கிறோம்.

அடுத்த வருடம்...
இன்னொரு சாட்டு சொல்லி
உங்கள் வாய்களுக்குப் பூட்டுப்போட்டுப்
புறப்பட்டு விடுகிறோம்.
ஈழவர் விதி இதுவென்றாகிக் கிடக்கிறது.

இன்றும் வந்துள்ளோம்...

மௌனப்பதில்களை மட்டுமே சுமந்தபடி,
வல்லாண்மைச் சதி எங்கள்
வாழ்வு அள்ளிக் கருக்குவதை
உணர்வீர்கள் என்ற பெரு நம்பிக்கை
கொண்டே உங்கள் முன்றலில் கூடியுள்ளோம்.

ஏக்கத்தோடு பார்க்கும் உங்களிடமே
நிமிர்ந்தெழும் சக்தி கேட்க
செங்காந்தள் அள்ளிவந்து
சிரம் தாழ்த்தி நிற்கிறோம்.

எங்களைப் பார்த்து ஏமாற்றம் அடையாமல்
புன்னகைப் பூவெறிந்து நிற்கிறீர்களே,
இன்னும் அறியாமையில் துவளும் எங்கள் மேல் உங்களுக்கு இவ்வளவு பற்றுதலா?

ஏளனப்பட்டதாய் ஈழவள் ஆகலாகாதென்று
அக்கினிச் சிறகெடுத்த அவதார புரசரே!
இயலாமை எங்களின் இருப்பாகக் கூடாதென்று
கல்லறை மேனியராய் கருக்கொண்டோரே!

பெருந்தாய்த் தமிழகத்தின் உறவுக்கொடியெலாம் அணிதிரண்டு எமை அரவணைக்கும் ஒரு செய்தி இன்றுங்கள் காதுபாயும் முதல் மதுரம் ஆகிடுக.

களத்துலவும் தோழர்கள் கட்டாயம்
வெற்றிச் செய்தியோடு விரைந்தோடி வருவார்கள்.
கல்லறைத் தேவரீர்!,
உங்கள் ஏக்கத்தைத் தீர்க்கும் பெருவரம் பெற்றவர்கள் நாங்களல்ல அவர்கள்தான். - எனினும்,
புலம்பெயர்வின் மோகத்தில் அள்ளுண்டு போகாமல்இன்றுங்கள் முன்னிலையில்
மீண்டெழும் வரங்கேட்டு நிற்கிறோம்.

எங்கள் நெஞ்சக் கூட்டிற்குள்ளும்
ஆழப் புதையுண்டிருக்கும் விடுதலைப் பொறியை
உங்கள் மூச்சுக் காற்றில்
மூசும் எரிமலையாய் ஏற்றுக.

சாட்டுரைத்தே கேடுற்றர் தமிழச் சாதியென்று
எங்கள்சந்ததி சரிதம் எழுதக்கூடாது.

ஆண்டுக்கொருமுறை வந்து உங்களை
ஏக்கக் கூண்டுக்குள் அடைக்க
இனியும் எம்மால் முடியாது.
உங்கள் தாகம் தீர்க்காது ஊமைக் காயங்களுடன்
உமைவிட்டுச் செல்வது இதுவே இறுதியாகட்டும்.

அடுத்த வருகை உங்களைக் காணவெனில்
அன்னை திருமுடி தரித்த பின்னர்தான்.
இளைய தேவரீர்!
இன்றுங்கள் கோட்டத்தில் எடுக்கும்
உறுதிமொழி இதுதான்.

செவ்வாய், 25 நவம்பர், 2008

வீரத்தின் வனப்பிற்கு உவமை தந்த வரலாறே!
காரிருள் போர்த்தி நிலம்
கண்விழித்துக் காத்திருக்க,

கறுப்பு முகில் தான்கவிந்து
காணவென்று பூத்திருக்க,

ஆழிமகள் அணைக்கவென்று
ஆர்ப்பரித்து அலை எறிய,

வந்துதித்த ஆதவனே!
வாழிய நீ பல்லாண்டு.

புற்றீசல் மெட்டெடுத்துப்
புதுப்பாடல் இசைத்திருக்க,

புவி நனைத்து வர்ணமகன்
பன்னீரை வார்த்திருக்க,

நறுமலர்கள் வாடாத
நனிதிங்கள் கார்த்திகையில்

பிறப்பெடுத்த பெருமகனே!
வாழிய நீ பல்லாண்டு.

கிழக்கு முகம் சிரிக்க
எழும் ஒளியின் அடர்வே!

செம் பொன் அள்ளி
வீசிவரும் சூரியச்சுடரே!

இலக்கெடுத்துச் சுயம்
ஒடுக்கும் மானிடத்திருவே!

இலங்குபுகழ் தலைமகனாய்
வாழிய நீ பல்லாண்டு.

தாயகத்தை நெஞ்சில்
ஏற்ற தலைமைவேளே!

தனித்துவப் பண்பாட்டு
ஒழுக்கநெறிக் கோவே!

வாயோதும் நாமம் உறை
வல்லவர் வடிவே!

வரும் பகை வென்று,
வாழிய நீ பல்லாண்டு.

சீர் பூத்த படைசெய்யும்
சிருஸ்டி பிரம்மனே!

சின்னச் செம்மழலை
சிரம் காக்கும் தேவனே!

ஊழிப் பகை அழிக்கும்
உக்கிரச் சிவனே!

உலமெலாம் உனை வாழ்த்த
வாழிய நீ பல்லாண்டு.

வீரத்தின் வனப்பிற்கு
உவமை தந்த வரலாறே!

வாழ்வெடுத்துத் தமிழ் நிமிர
வழி சமைத்த வல்லமையே!

காலமகள் எமக்களித்த
காவியப் பெருந்தேவே!

கவி நெய்து வாழ்த்துகிறோம்
வாழிய நீ பல்லாண்டு.

சனி, 8 நவம்பர், 2008

நீர் ஊற்றி நிறைத்தாலும், பாலூற்றும் ஒளி நிறைத்துப் பனிநிலவு அணைத்தாலும், கார் காற்று மேனியதைக் தழுவிக் குழைந்தாலும், அணையாது அணையாது எரிகிறது..என்னரும் மொழியே! எழில் நிறை கிளியே!
புன்னகை அழகே! பொதிகையின் அரசே!
விண்ணவர் தேவன் விரும்பும் தமிழே!
நின்னடி பணிந்தேன். தாயே!... என்னுளம் நுழைக.

முத்தாய்த் தாங்கி முன்னூறு நாட்சுமந்து
இத்தரையில் எனை ஈன்ற பெத்தவளை,

மெத்தை மடிவிரித்தென் தத்துநடை பார்த்து,
தள்ளாடி நான் விழுந்தால் தாங்கி இரசித்தவளை,

சித்தமெலாம் எனையாளும் சித்திரையின் நாயகியாம் உலக சக்தியவள் பெருந்தாயை,

நான் செத்தழிந்து போனாலும் என் சாம்பல்கூடத் தலைவணங்கும் மாவீரத் தோழர்களை,
பத்திரமாய் தொழுது,

எந்தன் தமிழுக்கு நிமிர்வு தந்த
தானைத் தலைவன் வழியதைச் சிரமேற்று,

உயிர்ப்பின் வலி உரைக்க,
எனை வனைந்த என்குருவிற்குத் தலைவணங்கி,

தாயின் மணிவயிற்று பசியென்னும் தீயணைக்க
சிறங்கை பொருள் கொடுக்கும் செந்தமிழ உறவுகளே!
சிரம் தாழ்த்தி வணங்குகிறேன்.

இது புதுவரவு.
கல்லி எடுக்கவும், களைகள் பிடுங்கவும்,
நன்னீர் பாய்ச்சி, நற்பயிர் வளர்க்கவும்
களத்து மேடு தேடிக் கால்கள் வந்துள்ளன.

கார் சூழ்ந்த பொழுதிடையே கவிவிளக்கு ஏற்றியுள்ளோம்.
ஒளி காட்டும் திசை நல்ல வழிகாட்டும் உணர்ந்திடுக.

ஏர் பூட்டி வந்துள்ளோம்.
விடுதலைத் தேரிழுக்க ஊர்கூட்ட வந்துள்ளோம்.

கார்காற்றில் தீ மூட்ட கவி நெருப்பேந்தி,
இக்களத்து மேட்டிடையே..
கண்ணீர் வைரங்களில் கனல் ஏற்றி வந்துள்ளோம்.

ஆர் ஆற்றுவார் எங்கள் ஆழ்மனதின் தீப்பிழம்பை?

நீர் ஊற்றி நிறைத்தாலும்,
பாலூற்றும் ஒளி நிறைத்துப் பனிநிலவு அணைத்தாலும்,
கார் காற்று மேனியதைக் தழுவிக் குழைந்தாலும்,
அணையாது அணையாது எரிகிறது என் தாய்மூச்சு.

எந்தையும் தாயும் கூடிய எம்மண்ணிலே
எத்தர்கள் நுழைந்தது எப்படி?

கந்தகம் தினம் தினம் காற்றிலே பூத்து
காலனை அழைத்தது எப்படி?

வந்தேறு குடியென்று வந்தவன் விரட்டிட
வேர் நொந்து போனது எப்படி?

அந்தரித்து அந்தரித்து அவலத்தைச் சுமந்து
அகிலத்தில் பரந்தது எப்படி?

வந்தரை ஏற்று விருந்தோம்பி நின்றதில்
வந்தது தந்தது வேதனை.

எந்தையர் விரட்டியே எம்நிலம் பிடித்திட
திணித்தனர் இனவாதத் தீதினை.

சிங்களத்தரசுகள் செந்தமிழ் தீய்த்ததில்
கந்தகம் விழுந்தது எம் கைகளில்.

நின்றாடும் துணிவின்றி நம் வட்டம் சிறுத்ததனால் அந்தரித்துலகினில் தலைவதாய் வாழ்வணை.

முடிந்ததா நம்மால்?....
வேர் பிடுங்கி எங்களை வேற்றுநிலம் நட்ட பின்பும்..
ஊர் நினைப்புதானே உள்ளுக்குள் எரிகிறது.

அன்னை திருமேனி அந்தரிக்க அந்தரிக்க
கண்ணை அயரவிட எண்ணங்கள் மறுக்கிறதே...

போர் மூசும் பெருங்காற்றில் ஊர்கிழித்து விழுகிறதாம்
ஒரு மூச்சில் நாற்பது செல்கள்.

கார் கிழித்து வான் வெளியில் கரணங்கள் போட்டு,
வண்டி பருத்தவரும், வாய் முகப்பு நீண்டவரும்
குந்தி எழும்பினாலே...
ஆழக் கிணறு வெட்டும் வேலை மிச்சமாம்.

நச்சரவம் ஒருபுறம்,
நாசத்திரவம் மறுபுறம்...
எத்தனை நாள் தாங்குவர் எம் உறவுகள்?

காட்டு வெளிகளிலே காஞ்சோண்டி செடியிடையே, நாயுருவி முத்தமிடும் நாணற்புதரிடையே,
பாறிச் சரியுதடா பாசத் தோள்கள்.

ஈரவயிற்றுள்ளே கோரப்பசி விழிதிறக்க,
பித்தச் சுனையிடையே எரிமலைகள் குமுறுதடா.

சேறெடுத்த மண்ணிடையே பாய் விரிக்க முடியுமா?
தோள் சாயும் இடந்தானே படுக்கையாய் கிடக்கிறது.

ஈரவிழிகளெல்லாம் இலக்கேந்திக் கிடக்கின்றன.
ஓரவிழி கசிய....
தூரத்து வெளிகளிலே துயர் துடைக்கும் உறவுண்டு எனும் பாரிய நினைவோடு உயிர் வலிக்க நிமிர்கின்றன.

ஓரவிழி கசிகிறதா?
ஈரக்குலை அசைய உள்ளிழுக்கும் மூச்சில்
ஆழத்து அகம் விரித்து அழுகை எழுகிறதா?

உறவுக் கொடியெல்லாம் ஓடிவந்து அணைப்போமென்று ஊர் போகும் காற்றிடையே உறுதி மொழி சொல்லிவிட பாவி மனம் கிடந்து பாடாய் படுகிறது.

வாருங்கள்.....
ஆவி துடிக்கும் இக்கவி கேட்டு தாவி உறவெல்லாம் நாமுள்ளோம், நாமுள்ளோம் என்றுரைத்தால் போதும்.
எம்மினம்.... போரின் அனலிடையே வேகாது.
விதியென்று சாகாது.

எண்திக்கு உறவுகளும் வேர் மடிக்கு நீர் பாய்ச்சும்
எனும் வீச்சில் மூசியெழும்.

தற்காப்பு நிலையென்று உட்கார்ந்த நிலை உடைத்து
உக்கிர மூச்செடுத்து உலைக்களத்தில் நிமிரும்.

படலைக்குள் நின்றாடும் யுத்தச் சாத்தானைப்
பந்தாடிக் காலிடையே பிழியும்.

ஊர் போகும் காற்றிடையே.....
'நாமுள்ளோம் அஞ்சற்க.. நாமுள்ளோம் அஞ்சற்க' எனும் உறுதி மொழி சொல்ல... உரத்து கூறுக.
நாமுள்ளோம் அஞ்சற்க..... நாமுள்ளோம் அஞ்சற்க.

செவ்வாய், 21 அக்டோபர், 2008

கால்களுக்கு அடியில் முட்களின் விரிப்பு.... மெளனங்கள் கலைகின்றன - 2


கால்களுக்கு அடியில் முட்களின் விரிப்பு. அகற்ற நினைத்தல் பாவம் அல்ல.... காலக்கடமையை உணர்ந்து நிமிர்தல் கட்டாயம் ஒவ்வொரு பெண்ணுக்கும் தேவை. வாழ்க்கையின் ஒவ்வொரு விளிம்பிலும், ஈழப்பெண்களின் வாழ்வியல் உலகெங்கிலும் இல்லாத வேதனைகளைச் சுமந்ததாக உள்ள யதார்த்தநிலைகளைப் பேசத் தவறும் ஒவ்வொரு பெண்ணும் தன்னினத்தின் அழிவிற்கு தானும் உடந்தையாகிறாள் என்பதே உண்மை.


இச்சம்பவம் இரு தசமங்களுக்கு முந்தையகாலம்... பிற்பட்ட காலத்தில் தமிழ்ப்பெண்கள் என்ற நிலையில் எங்கள் பெண்கள் சந்தித்த வலிகளும் அவமானங்களும் ஏராளம். மலை நிகர்த்த பெண்மையின் துன்பத்தில் ஒரு மண்ணின் அளவே இப்பதிவு.
முட்டிய விழிகளும், முதல்வலியும்வெண்ணிலவும், விண்மீன்களும் வெட்கமின்றிப் பார்க்கக் கூரை ஆடையின்றி, அம்மணமாகவும், கரிய அழுக்குடனும் தங்கமண் தாம்பாளத்தில் என்வீடு. அப்பப்போ மேகங்கள் வடிக்கும் கண்ணீரில், வானம் பார்த்த என்னில்லம் இல்லாத ஒட்டடையையும், தன்மேல் படிந்திருக்கும் கரியையும் கழுவிக் கொள்ளும். எரிகாயங்கள் வடுக்களாக காலடியில் மேடுபள்ளமாக நவீன ஓவியங்கள்போல் சிந்தனைகள் பலவற்றைத் தூண்டும். அதே நேரம் மேகத்தின் கசிவை இந்தப்பள்ளங்கள் நான், நீ என்று போட்டிபோட்டு ஏந்தி ஜதியிடும். கதிரவனுக்குக் கோபம் வந்தால் பாதங்களைத் தொப்பளிக்கவே படைக்கப்பட்டதுபோல் நான் தவழ்ந்த அந்த உள்வீட்டுத் தரை சூரிய அடுப்பாக மாறிவிடும்.
ஒரு ஆறுதல் இன்னும் இடியாமல் வெடிப்புகளுடன் நிமிர்ந்து நிற்கும் பிளாட், கொஞ்சம் இயற்கையிடம் இருந்து எல்லா நேரமும் என்றில்லாவிடினும் பல சமயங்களில் பாதுகாப்புத்தரும் தேவதையாகத் இன்று வரைக்கும் திகழ்கிறது.
அன்றிரவு மட்டும் அந்தக் காலநிலைக் குழப்பம் அந்த பெருமழையைத் தோற்றுவிக்காது விட்டிருந்தால் என்னினத்தின் வலியை நான் முதன்முதலாக உணரும் காரணி வேறு ஏதாவதாக இருந்திருக்கும்.
எப்போதுமே வாழ்வில் ஏற்படும் முதல் அனுபவம் என்பது பசுமரத்தாணிபோல் மனக்கூட்டுக்குள் பதிந்துவிடும். இதுவும் அப்படித்தான்...
முதல் காதல், முதல் முத்தம் என்று இன்பியல் பக்கம் போவதற்கு முன் நிறையவே விடயங்களை இங்கு எழுத இருக்கிறது.

கிளுகிளுப்புக் கதைகளை வாசித்த பலர் இங்கு வாசிக்கக்கூடும். இவ்வனுபவப் பகிர்வில் கிளுகிளுப்புத் தேடவேண்டாம். பெண்மையின் பருவமாற்றங்கள்கூட இன்றைய தமிழீழப் பெண்களுக்கு எவ்வளவு சோதனையாக அமைகிறது என்பதற்கு ஒரு சாட்சியம் அவ்வளவுதான். இது அந்நாள் வலி. இந்நாளில் இதன் வடிவம், வலி எல்லாம் பேசப்படாப் பொருளாக ஒவ்வொருவருக்குள்ளும் ஆழப்புதையுண்டபடி....., எம்மினம் வாழ்விற்கான யாசிப்பையே பிரதானமாகக் கொண்டதாக நகர்கிறது.

ஆகாயம் பார்த்துக்கிடந்த என்வீட்டின்மேல், அந்த நடுச்சாமத்து மழை அனுமதியின்றி நுழைய நடுவீட்டில் குளம் ஒன்று தன்னை உருவமைக்க, அடங்கமாட்டேன் என்று நாலாபக்கமும் தண்ணீர் கட்டுடைத்துப் பாய்ந்தது, அப்பப்போ பாதுகாப்புத்தரும் பிளாட் பகுதியின் நிலமெல்லாம் புனல் விரிந்து பரவி வழிதேடி ஓடியது.
நான் படுத்திருந்த பாயை நனைத்து ஓடிய நீரில் மட்டும் செம்மை தன்னை கரைத்தோடி சற்றுத் தள்ளிப் படுத்திருந்த என் தாய், தந்தையையும் நனைத்து நகர்ந்தது. பூப்படைந்த இருநாள் பருவமகளாக அனுபவமில்லா அணிகளுடன் அந்த எரிந்தவீட்டின் ஓரத்தில் உறங்கிக்கொண்டிருந்த என்னை நனைத்த மழைநீர் என் பருவமாற்றத்தின் உதிரத்துளிகளைக் கரைத்து என் பெற்றேரை நனைத்த அந்தப் பொழுது, அவமானம் பிடுங்கித் தின்ன முட்டிய விழிகளுடன் முதன்முதல் என்னினத்தின் வாழ்வை எண்ணி என்னுள்ளம் முதல்வலி ஏந்தியது.

திங்கள், 20 அக்டோபர், 2008

தாயின் மடியில் தமிழ்ப்பாலுண்ட கோடி நெருப்பொன்றாய் தகிக்கக் கண்டோம்.
கருணைப் பெருங்கடலே!
கன்னல் சுவையூறும் தமிழ் பூத்த திருநாடே!
உண்மை ஒளி குன்றா உறவின் பெருங்கொடியே!
திண்மை கொண்டெழுந்த உங்கள் திடல் தோளில்
சிறிது சாய்ந்து இளைப்பாறிக் கொள்கிறோம்.

தாயின் மடியில் தமிழ்ப் பாலுண்ட
கோடி நெருப்பொன்றாய் தகிக்கக் கண்டோம்.
வீசும் தமிழ் காற்றும், உணர்வின் அலையும்
தீய்ந்து கருகும் எங்கள் வாழ்வை ஆற்றும்.

உக்கித் தனிமரமாய் துயர் சுமந்த எங்களுக்கு
உயிர்ப்பின் கொடி பிடித்து அரவணைக்கும் உறவுகளே!
தெக்கும் உணர்விடையே உயிர்ப்பூ கசிகிறது.
தேம்பும் விம்மலொலி சிறிதடங்கிக் கிடக்கிறது.

பால் வாசம் வீசும் மார்பிடையே அணைத்தவளே!
பனித்த விழிகளால் பாசத்தைப் பொழிபவளே!
மனித்த பிறவியதன் மாபெரும் தத்துவத்தின்
தனித்துவம் காக்கும் மா.. தாய் நீயல்லவா.

தொப்புள் கொடி உறவு துணை வந்து நிற்கிறது.
தொய்வின்றி எம் பயணம் விடுதலைக்காய் தொடரும்.
அர்ப்பணிப்பு எங்களதாய், அரவணைப்பு உங்களதாய்
காலமகள் இணைத்துவிட்டாள்...
சற்றுக் களிக்கின்றோம் உறவுகளே.

வள்ளுவன் வாழ்ந்த வானளந்த தமிழகமே!
உள்ளிருந்து எழுகின்ற எம் நன்றிக்கு அளவில்லை
உப்புக் காற்றுரசும் ஊமைக்காயங்களுடன்
அக்கினி வீச்சுகளை மென்றுமென்று நீர் குடித்தோம்.

கோடிக்கரையிருந்து கொடியொன்று தெரியாதா?வான்முட்டும் உறவுகளின் வல்லமைக் குரல்கேட்டு வாரணம் வழி விடாதா?
ஆனமட்டும் ஏங்கியது நேற்றைய கதையாக, இன்று
நெக்குருகி கொஞ்சம் இளைப்பாறும் வரம் பெற்றோம்.

ஈரக்குலை பிழிய உயிர் இன்னும் துடிக்கிறது
காரணம் பலவுண்டு கடந்த காலம் நகைக்கிறது
பூரணப் பிரசவமே வேண்டும் எங்கள் வலிகளுக்கு
புன்னகையைக் கடனாக புதுப்பிக்க முடியாது.

தேமதுரம், பால், பழமும் தெவிட்டாத தெள்ளமுதும்
நாவுக்கு வாழ்வு தரும், நலத்திற்கு மீள்வு தரும்.
பாவியர் ஏவும் சாவுக்கு மாள்வு தர
பனிக்கும் உறவுகளே!.. பாரினில் வழி செய்க.

காலப் பெரு வெளியில் கடந்தவைகள் எத்தனையோ..
கண்ணில் நீர் வழிய, இழந்தவைகள் எத்தனையோ...
விழி கசியும் உறவுகளே!.. வாழக் கேட்கின்றோம்
வழி மறிக்கா நிலை ஒன்றை வனைந்து தருக.

வியாழன், 28 ஆகஸ்ட், 2008

காப்பினைத் தந்திடா உலகமும் விழிக்கட்டும் காப்புக் கரங்களால் துயர் துடை.


எழு! எழு! பெண்ணே!! எழு எழு.
எதிரிகள் மனபலம் உன்னடி விழ விழ
எழு! எழு! பெண்ணே!! எழு எழு.

காப்பினைத் தந்திடா... உலகமும் விழிக்கட்டும்
காப்புக் கரங்களால் துயர் துடை.
சாக்களம் மீதினில் சரித்திரம் பிறக்கட்டும்
ஆக்கப் பலத்தினை நீ படை.

களங்களில் நின்று கலிகளை முட்டும்
காரிகை வெல்லப்பலம் கொடு.
உளங்களை வென்று பூமகள் முன்றலில்
புலம்பெயர் பெண்ணென வளங்கொடு.

பிஞ்சினை பிய்த்தரை வஞ்சியை வதைத்தரை
வெஞ்சினம் கொண்டு அவர் நெஞ்சுடை.
நஞ்சினை அணிந்தவர் நாட்டைக் காப்பரின்
நெஞ்சுரம் ஊட்டும் ஆற்றல் படை.

கனல் விழி வீசு! கவிஞனின் கோல்கள்
கர்வம் ஏற்றி எழுதட்டும்.
புனலாய்க் கிடந்தவள் கனலாய்ச் சிவந்திட
காலம் காட்டிய பாதையிது.

எழு! எழு! பெண்ணே!! எழு எழு.
எதிரிகள் மனபலம் உன்னடி விழ விழ
எழு! எழு! பெண்ணே!! எழு எழு.

திங்கள், 11 ஆகஸ்ட், 2008

மெளனங்கள் கலைகின்றன.

கடந்துவந்த வாழ்வியலை மீட்டிப் பார்க்கும் ஒரு தொடர்பதிவு இந்த மௌனங்கள் கலைகின்றன. எனக்குள் புதையுண்டு கிடக்கும் அனைத்தையும் வரிகளாக்கி இந்த பதிவை படைக்க உள்ளேன்.

முகட்டு ஓடு

பத்து வயது தாண்டினாலே பெண்பிள்ளைகளை வீடுகளில் அடக்க ஒடுக்கமாக இரு என்று பெரியவர்கள் முணுமுணுக்க ஆரம்பித்து விடுவார்கள் என்பது தாயகத்தில் வளர்ந்த அனைவருக்கும் விளங்கும். எங்கள் வீட்டிலும் அப்படித்தான். ஆனால் ஆண்சகோதரர்களுடன் பிறந்து வளர்ந்ததாலோ... அல்லது ஆண்பிள்ளைகள் போன்றே அரைக்காற்சட்டை சேர்ட்டையே அதிகம் அணிவித்து வளக்கப்பட்டதாலோ என்னவோ இந்தப் பெண்பிள்ளையின் அடக்க ஒடுக்கம் என்பது எனக்கு என் சுதந்திரத்தை முடக்குவதாக இருந்தது. இருந்தாலும் வீட்டில் நான் கடைக்குட்டியானதாலும், ஒரே பெண்பிள்ளையானதாலும் நான் செல்லப் பிள்ளையாகியிருந்தேன். அதுவே பெண் என்ற விம்பத்திற்கு திணிக்கப்படும் ஒடுக்கங்களை எனக்கு இல்லாமல் ஆக்கியது. சமூகம் எதிர்பார்க்கும் அடக்க ஒடுக்கங்கள் என்னிடம் இல்லாததால் அயலவர்கள் ஆண்சிங்கி என்ற பட்டத்தையும் எனக்கு வழங்கியிருந்தார்கள். இதை ஏன் எழுதுகிறேன் என்றால் என் 'முகட்டு ஓடு" நினைவுகளை உங்களுடன் பகிரும் போது சில யதார்த்தங்கள் அதனை வாசிக்கும் உங்களைத் துணுக்குறச் செய்யும்.

வாடைக்காற்று வீசும் காலம், நானும் என் இளைய அண்ணனும் நாளில் முக்காலவாசி நேரம் குடியிருப்பது வீட்டின் முகட்டு ஓட்டில்தான். பன்னிரண்டு பதிமூன்று வயதில் நான் மட்டுந்தான் என்வீட்டு முகட்டு ஓட்டின் அரசி. அண்ணன்மார் வெளியே உலாவப் போய்விடுவார்கள். எனக்கு விளையாட வழியில்லை அதனால் முகட்டு ஓடு எனக்கு பிரியமான தோழியாக மாறியது.

கிணற்றடி மூலை மதிலில் பாய்ந்து ஏறி கப்பித்தூணில் காலூன்றி தண்ணீர் தாங்கியில் ஏறி மினசார வயர்களின் கீழாக புகுந்து பிளாட்டிற்குத் தாவினால் வீட்டு ஓட்டிற்கு ஏறிவிடலாம்.

முகட்டு ஓட்டில் நின்று சூழ உள்ளவற்றை பார்த்து ரசிப்பது ஒரு சுகமான அனுபவம்.வீட்டைச் சுற்றிலும் தென்னை மரங்களும் அதன் ஓலைகளில் நர்த்தனமிடும் காற்றும், மாமரத்தில் இருந்து துணைகளைத் தேடிக் கூவும் குயில்களும், பட்டதென்னம் பொந்தில் குடியிருக்கும் கிள்ளைக் குடும்பங்களும், ஒரு திசையில் நிறைந்த வாழைகளும், பிரிதொரு பக்கம் கண்சிமிட்டும் மலர்ச்சோலையும் அதில் தேனெடுக்கும் சிட்டுக்களும், பிளாட்டில் படந்த மல்லிகைகொடியின் மலர்களில் மயங்கிய வண்டுகளும், இன்னொரு திசையில் வான் முட்டும் கடலும் பார்க்கப் பார்க்கத் தெவிட்டாத காட்சிகள். கோயிற்கோபுரம், வாசிகசாலை, வீதிவெளி என்று ஓரிடத்தில் நின்றே ரசிக்க வரந்தந்ததுதான் இந்த முகட்டு ஓடு, அதிலும் வாடைக்காற்றுக் காலமென்றால் வெளவால் ஏற்றுவது எனக்குப் பிரியமானது. அம்மாவின் தையல் இயந்திரத்தில் கொழுவியிருக்கும் இருக்கும் நூல் காற்றில் பறக்கும் வெளவாலுக்கும் எனக்குமான உறவுக் கொடியாக மாறியிருக்கும். வாடைக்காற்று அற்ற காலத்தில் முகட்டு ஓடு கடலையும், வானையும், முகிலின் ஓவியங்களையும் நான் இருந்து ரசிக்கும் சிம்மாசனமாக இருந்தது.
இவையெல்லாம் என் பதின்ம வயதின் ஆரம்ப நாட்கள்.

ஒரு நாள் அதிர்ந்த பெருவெடியின் ஓசை கேட்டு அகதிகளாக ஓடிவிட்டோம். இருவாரங்களாக எங்கள் வீட்டை வந்து பார்க்கமுடியா நிலை.... எங்கள் அயலில் உள்ள வீடுகளை இராணுவம் எரித்துவிட்டதாகத் தகவல்கள் காதிற்கு எட்ட எட்ட அம்மா அரற்றத் தொடங்கி விட்டார். அம்மாவை ஆசுவாசப்படுத்த எங்களுடைய வீட்டுக்கு ஒன்றும் நடக்கவில்லையாம் என்று அப்பாவும் , அண்ணன்மாரும் பொய் புனைந்தார்கள் தற்காலிகப் பொய் எத்தனை நாளைக்கு?

வீட்டிற்கு வந்தோம்....வீட்டைப்பார்த்ததும் அம்மா கதறி அழுதார்.அப்பாவும் , அண்ணன்மாரும் கண்கள் கலங்கக் கலங்கத் துடைத்தபடி நிற்க, நான் மட்டும் உறைத்துப் போனேன். பிளாட்டில் படர்ந்த மல்லிகைக் கொடி கருகிக் கிடந்தது. என் வீட்டின் மலர்சோலையும் கரிய புகைபடிந்து பச்சையத்தைத் தொலைத்திருந்தது. தென்னோலைகள் தீயால் எழுந்த வெம்மையில் பொசுங்கி இருந்தன.

என்னுடைய சிம்மாசனம்.....
எரிந்த வீட்டின் சாம்பலுக்குள் தன் செம்மையை இழந்து கரிக்கட்டிகளாகச் நொறுங்கிக் கிடந்தது...எரிந்த வீட்டில் மெல்லக் கால் வைத்து நடந்தபோது காற்பதிவுகளில் வெம்மை தன்னை உணர்த்தியது. நொறுங்கிய என் சிம்மாசனத்தைத் தொட்டுத் தடவி கைகளில் தூக்கிய போது அதன் அடியில் எனது பாடசாலைப் புத்தகங்களும், வெள்ளைச் சீருடையும் பாதி எரிந்தும், கருகியும் தீக்காயங்களுடன் என்னைப் பரிதாபமாகப் பார்த்தன. உறைத்துப் போன எனக்கு அவற்றின் பரிதாபப்பார்வை புரியவில்லை.
என் முகட்டு ஓட்டுச் சிம்மாசனம் தகர்ந்ததோடே என் பள்ளிவாழ்வும் என்னிடமிருந்து பறிக்கப்பட்டுப் போனது. அன்று இராணுவத்தால் எரியூட்டித் தகர்க்கப்பட்டது என்முகட்டு ஓட்டுச் சிம்மாசனம் மட்டுமல்ல, என் கல்விக் கண்ணின் கனவுகளுந்தான்.

சனி, 14 ஜூன், 2008

கங்குல் கரைய, அதிகாலை வெளிக்க, செங்கதிர் வீசும் சூரியன் சிரிக்க, தங்களர் வலுவில் தமிழ்மண் துளிர்க்கத் தாம் தீம் தோமென தமிழே பொங்கு!என்னரும் மொழியே! எழில் நிறை கிளியே!
புன்னகை அழகே! பொதிகையின் அரசே!
விண்ணவர் தேவன் விரும்பும் தமிழே!
நின்னடி பணிந்தேன்... தாயே!... என்னுளம் நுழைக!

கங்குல் கரைய, அதிகாலை வெளிக்க,
செங்கதிர் வீசும் சூரியன் சிரிக்க,
தங்களர் வலுவில் தமிழ்மண் துளிர்க்க
தாம் தீம் தோமென தமிழே பொங்கு!

எங்கனும் தமிழின் ஓசை சிறக்க,
ஏதிலி எனும் பேர் காற்றினில் பறக்க,
வங்கப் பரப்பதில் வரிப்புலி சிரிக்க
வண்தமிழ்கொடியே! வனப்புடன் பொங்கு!

மங்கல ஒலியில் மண்மகள் குளிர,
சிங்களச் சேனைகள் செருக்களம் சரிய,
அங்கையற்கண்ணிகள் அரியணை செய்ய
அன்னைத் தமிழே! அமிழ்தெனப் பொங்கு!

வான் புலிச் சிறகுகள் வல்லமை வகுக்க,
தேன்கவிராயர்கள் தீந்தமிழ் செதுக்க,
கூன்படு முதுகுகள் கோணல் நிமிர்த்த
கொற்றவைத் தமிழே! நற்றுணை பொங்கு!

ஈழவர் சேனை இருளது கிழிக்க,
காலர்கள் வேற்றிடம் கதறி ஒழிக்க,
வீழ்ந்தது பகையென முரசுகள் ஒலிக்க,
ஆளும் தமிழே அகிலத்தில் பொங்கு!

வேங்கைகள் மார்பினில் வாகைகள் சூட,
வெற்றித்திருமகன் மகிழ்ந்து உறவாட,
மாங்கனித் தீவுனுள் மகுடம் ஏற்கும்
மண்மகள் போற்றி என்மொழியே பொங்கு!

ஆண்டுகள் பலவாய் ஒடிந்தே கிடந்து,

மீண்டனர் தளையை மிதித்தே எழுந்து,
ஆண்டனர் தமிழச்சாதியென்றே
ஆவி சிலிர்த்திட அமிழ்தே பொங்கு!

வேரும், விழுதுமாய் வீரமண் மீட்பில்
ஏறுபோல் வலுவும், வளமும் இணைத்து
பாரும் இக்கணம் திகைத்திடத் திகைத்திட
பைந்தமிழ் ஈழமே பொங்கு நீ பொங்கு!

கூறு கெட்டவர் கோட்டை ஆள்வதா?
ஊறு செய்பவர் எம் நாட்டை ஆள்வதா?
வீறுகொண்டு எழும் வேங்கை மூச்சிலே
தீர்வெழுதிடும் திறமையே பொங்கு!

கார் எழுதிடும் வாழ்வு விதியென
கவிந்த தலைகள் உயர்ந்து நிமிர்கவே!
போர்வலியது எம் ஊர் குதறவோ...?
தீர்வெழுதிட உலகின் திசைகள் எழுகவே!

ஈழமண்ணதில் கலிகள் பொங்குது
இளைய வேனில்கள் கனலில் வேகுது.
சாகத் துணிந்தவர் தீரம் இன்னமாய்
சமர்க்களங்களில் சரிதம் எழுதுது.

புலம் பெயர்விலே புரட்சி பொங்குக!
நிலத்தைக் காக்கும் நீட்சி பொங்குக!
விரித்த பூமியில் உரத்த குரலிலே
உரைக்கும் செய்தியில் உணர்வு பொங்குக!

கனத்த பொழுதுகள் கிழித்து எறிந்திட,
கவிந்த மாயைகள் விலகிக் கலைந்திட,
தனித்த வாழ்விலும் தமிழர் மிளிர்ந்திட
தாயே! தமிழே!! பொங்கு நீ பொங்கு!

சனி, 24 மே, 2008

ஈழக்கருவறையைக் காத்து வளர்த்தவன்


ஆர்த்தெழுந்து தமிழ் தொடுத்துத் தாலாட்டுப் பாடிடவும்,
அனல் கொட்டும் வீரத்தின் மிடுக்கெடுத்து வனையவும்,
போக்கற்ற புரட்டனைத்தும் எழுத்தீயில் எரிக்கவும்,
எழுந்த என் எழுத்தாணி... இன்றுமட்டும்,
இலக்கு விட்டு.. ஏன் அழுது நிற்கிறது?

புறம் படைக்கும் தமிழ் மகளின் போர்க்குணத்தை மொழியவும்,
புனை கவியில் எழுகை எனும் பெருநடப்பை விதைக்கவும்,
இணையில்லா விடுதலையில் வனப்பெடுத்துப் புனையவும்
இலக்கெடுத்த என் பேனா இன்றேன் நலிகிறது?

ஒப்பாரிப் பாடல்களை எப்போதும் பாடாத
என் இதயம்....
இப்போதேன் அழுதபடி ஒப்பாரி உரைக்கிறது?

அன்னை மண்ணிலே குருதியாறுகள்
காயவில்லையே, உறையவில்லையே...
இலக்கெடுத்த நம் தாயின் வேதனை
ஆறவில்லையே,.. அழியவில்லையே...

வழக்கெடுத்தவன் காலனா உன்னிடம்...
என்ன விளக்கக் குறைவோ..
இறைவா!..
உன் விசமத்திற்கு அளவிலையோ?

கந்தகம் சரிக்காத களவீரனை,
செந்தமிழ் ஈழத்தின் சமர் வேந்தனை,
எந்தநேரம் பார்த்து எமைவிட்டுப் பறித்தாய்?
சிங்களம் ஏவிடும் பேய்களின் கைகளில்
தங்கமண் தவித்திடும் தருணத்தில் அல்லவா!
பைந்தமிழ் ஈழத்தின் பிரசவக் குருதியில்
எங்களர் அனைவரும் நனையும் கணத்திலல்லவா!

இறைவா!... ஈழக்கருவறையைக்
காத்து வளர்த்தவனை காவெடுத்து விட்டாயே!
பார்த்தவன் கண்பனிக்க, கையெடுத்து முத்தமிட
சேர்க்க மனமின்றி இடைபிரித்த வஞ்சகன் நீ!

அண்ணனே!...... பால்ராஜ் எனும் அற்புத வீரனே!
அந்தகாரம் உனைச் சூழ்ந்ததெப்படி?
உன் உதிரப்பூ உறைந்தது எங்ஙனம்?

எதிரியைப் பொருதும் களங்களெல்லாம்
உன்பேர் உச்சரிக்குமே!
எதிரியை எச்சரிக்குமே!
வரும் பகை காலூடே வடிக்கின்ற நீர்த்துளிகள்
உன் தீரம் பெரிதுரைக்குமே!
திசையெங்கும் எதிரொலிக்குமே!

உன் உறுதி வாகை சூட,
அணங்குதமிழும்,
அன்னை நிலமும் மதர்ப்புடன் நிமிர்வரே!
மார்தட்டி தம் மகவின் மிளிர்வில் மகிழ்வரே!
இனி எப்போதய்யா?
இனி எப்போதய்யா?

உன் செல்லமொழி கேட்க அன்னை தமிழாளும்,
தவழ்ந்து தாவினும், தடுக்கி விழுந்தாலும் தாங்கும் நிலமகளும்,
ஆருக்கு ஆரென்று ஆறுதலைச் சொல்வரோ?

அணைத்து அருகமர்த்தி அன்புரைக்கும் அண்ணனும்,
அரவணைத்து நீ வளர்த்த தீரமிகு தம்பியரும்,
தனித்து போயினரே அய்யா!
தமிழீழ தேசமே தேற்றுவார் இன்றித் தேம்பிக் கிடக்கிறதே.

கந்தகத்தால் உனை காவு கொள்ள முடியாக் காலன்
உன் செங்குருதிப் பூமீது பாசக்கயிரெய்து,
மெய்விட்டு உயிர்ப்பூப் பறித்து
எம்மினத்தின் கை எடுத்துப் போனானோ? - அய்யா
எம்மினத்தின் நம்பிக்கை எடுத்துப்போனானோ?

இன்னும் முடிவெய்யவில்லையே....
தாயகத்தின் விலங்குடையவில்லையே...
ஆராரோ வந்து ஆயுதமும் கொடுத்து
எம் தாயின் பேச்சிறுக்கி,
மூச்சிறுக்கி...
ஆய்கினைகள் செய்திருக்க...
காக்க என்று பிறப்பெடுத்த காவல்வேளே!
காலனை இழுத்துக் கன்னத்தில் அறையாமல்
கைகோர்த்து அவனோடு கவலையின்றிச் சென்றனையோ?

ஆற்றுவார் இன்றி அரற்றுகிறோம் அண்ணலே!
தோற்றமாகாளிகூட தொய்ந்தழுது நிற்கின்றாள்.
கூற்றுவ கூத்தொன்று அரங்கேறி ஆடுதற்கு
வேற்றுவர் வன்னிமையின் வாசலிலே அலைகின்றர்.

அண்ணலே!.... நீ வளர்த்த வலியோரின் அகத்தில்
ஆணையிட்டு வழிநடத்த நீ வருவாய்;! நீ வருவாய்!
இலக்கொன்று பாதியென்று இலங்கும் நிலை உடைக்க
கட்டாயம் புரியாத வடிவிலே களத்திலே நீ வருவாய்!
இது தாய் மீட்கும் போர் வெளி....
அண்ணனைத் தனித்துவிட எண்ணாத உன் ஆவி
நிட்சயம் காக்கும்.
தாய் மண்ணை மீட்கும்.

ஞாயிறு, 27 ஏப்ரல், 2008

செவ்வாய், 22 ஏப்ரல், 2008

மானிடக் கருணையே!
ஆண்டகை அகதியாக

அல்லலுறும் பூமியிலே

மாண்ட அடிகளே!

மானிடக் கருணையே!

நீண்டதொரு சரித்திரத்தின்

நிதர்சனச் சான்றென்று

நீசர்கள் வைத்தகுறி

நேசரும்மைப் பறித்ததுவோ?

சனி, 19 ஏப்ரல், 2008

உயிர்த்துளியின் ஓரத்தில்

மனப்பையில் வார்த்தைக் கோலங்கள் பொங்கி வழிந்து, உணர்வுத் தீயின்மேல் குதித்துத் தீய்ந்து கருகி மறைய, அவற்றில் பீனிக்ஸ்களாக தவிப்புகள் பிறப்பெடுக்கின்றன. நரம்புகளின் மூலை முடுக்கெல்லாம் தாகம் பிறக்கிறது.

கண்களை மூடிக் கொண்டேன். மெல்லிய இளங்காற்று என் மேனியைத் தழுவிட, புலன்களால் இனங்காணமுடியாத ஒரு அமானுஸ்ய உணர்வு என்னை ஆக்கிரமித்தது.கவிந்த இமைகளுக்குள் நிலைத்த விழிகளுக்குள் தவிப்பும், தாகமும் விரிந்தன. மூடிய கயல்களின் ஓரங்களில் மெல்லிய ஈரக்கசிவு.எங்கோ பசுமையைச் சுமந்தபடி என் வரவிற்காய் ஏங்கியபடி காத்திருப்பதாய், எனக்குள் உணர்த்தியபடியே, புன்னகையை வீசி என்னைத் தனக்குள் ஈர்த்தது பாசம்.

அக்கினித் தகிப்பில் உடலும், உள்ளமும் எரிந்தன. பனிக்கரங்கள் அணைத்துக் குளிர்ச்சி தரும் வெளிகளில் இருக்கும் என்னிருப்பின் உணர்வுகள் காலநிலைகளைத் தாண்டி முரண்பட்டுக் கிடக்கின்றன. அடையாளங் காணப்படாத பிணங்களைப் போன்று எண்ணங்கள் அவலமுறுகின்றன.

எல்லாமே என்னிடத்தில் இருக்கின்றன. மானிடத்தின் உணர்வுகள் அடங்கிய பெரும் படைப்பு நான். உலக வாழ்வியலின் கதம்பக் கோர்வை என்னுள் வியாபித்து வாசம் வீசுவதாக எனக்குள் ஒரு மிதப்பு. இருப்பினும் ஏதோ.... ஏதோ ஒன்று

அம்மா மடியில் முகம் புதைத்து எதற்காகவோ அழவேண்டும் போல் அடிக்கடி என்னுள் ஏக்கம் வளர்கிறது. அந்த மடிக்குத்தான் என்னைப் புரியும் என்பதுபோல் எனக்குள் ஒரு பட்டிமன்றம் ஒவ்வொரு நாழிகையும் காரசாரமாக நிகழ்ந்து கொண்டிருக்கிறது. ஏன் என்ற கேள்விக்கு என் எழுதுகோலாலும் பதில் சொல்ல முடியவில்லை. எப்போதுமே கம்பீரமாக நிமிர்ந்து கர்வத்தோடு என்னை நோக்கும் இந்த எழுதுகோலும் இன்று ஏனோ என்னைப் புரிந்து கொள்ளமுடியாமல் திண்டாடித் திண்டாடி பதிவிட இயலாமல் கனத்துப் போகிறது. மனதை வசீகரிக்கும் ரம்மியமான கனவுகளும் கடன்தர மறுக்கின்றன.

மனப்பையில் வார்த்தைக் கோலங்கள் பொங்கி வழிந்து, உணர்வுத் தீயின்மேல் குதித்துத் தீய்ந்து கருகி மறைய, அவற்றில் பீனிக்ஸ்களாக தவிப்புகள் பிறப்பெடுக்கின்றன. நரம்புகளின் மூலை முடுக்கெல்லாம் தாகம் பிறக்கிறது.

இது என்ன?...
என்மனதிற்குள் புதையுண்டு கிடக்கும் பிரமாண்டம் என் மூச்சின் வெளிகளை நிரவி வானளாவ வளர்கிறது.

என் அம்மா என்னை அழைக்கிறாள். நான் போக வேண்டும். அதோ அம்மா என்னை மறுபடியும், மறுபடியும் அழைத்துக் கொண்டிருக்கிறாள் நான் போக வேண்டும். ஐயோ!.... என் தாயின் குரல் ஏன் இவ்வளவு தீனமாக ஒலிக்கிறது?...

என் தாயின் குரலில் பெரு வலி தெரிகிறது. திடீரென்று முளைத்த தற்கால வலியாகத் தெரியவில்லையே... நீண்டகால ரணத்தின் ஒலியெழுப்பல் போலல்லவா படுகிறது.

இதென்ன?..... அண்டை அயலெலாம் உற்சாகப்படுத்த என் தாயை ஒரு கோரப்பிசாசு தன் பற்களினாலும், கோர நகங்களினாலும் காயப்படுத்தி, ஊனையும், உதிரத்தையும் சுவைத்துக் கொண்டிருக்கிறது. என்ன நடக்கிறது அங்கே?அம்மாவை ஏன் வதைக்கிறீர்கள்? வேதனையுடன் கதறுகிறேன். ஆ... அங்கே என் சகோதரன் நிற்கிறான்..... அவனாகிலும்..... சீ.... மானங்கெட்டுப் போனானே..... அன்னையின் துகிலுரிப்பில் அவனுக்கும் ஒரு பங்கா?...... மனதிற்குள் கோரப்பேயைக் காட்டிலும், அன்னை முலையில் எச்சில் பாலுண்ட கருவறைத் தோழன் கருகிப்போனான்.

எனக்குள் சீற்றம் பொங்கப் பொங்க கண்ணீரோடு கத்திக் கொண்டு என்னைச் சுமந்தவளை நோக்கி, கைகளை நீட்டி ஓடுகிறேன்.
ஆ....... குதிக்காலில் எங்கிருந்தோ வீசப்பட்ட கற்கள் தாக்க, நிலைகுலைந்து வீழ்ந்தேன் சுற்றும் பார்த்தேன். கவன்களைச் சுழற்றியபடி மனித முகமூடி அணிந்த மிருகங்கள் எக்காளமிட்டுச் சிரித்தன.

அம்மாவின் அழைப்பில் இப்போது சீற்றம் பொங்குகிறது.'வா.... மகவே!எழு!.... வா....மகவே!இது பேய் விரட்டும் நேரம் வா!.." என்று அவளின் குரலில் ஓங்காரம் ஒலிக்கிறது.

சித்திரைப் பறுவம் அம்மாவிற்கான நாள் என்று நோன்பின் விளக்கம் வானொலியில் ஒலிக்கிறது.

ஐயோ!.... வாதைகளின் மையத்திருந்து அம்மா என்னை அழைக்கிறாள். நான் போகவேண்டும்... நான் போகவேண்டும்.

'விழுதென்று என்னை வீசி எறியாது இழுத்து அரவணைத்து முந்தானைத் தொங்கலினால் முகம் திருத்தும் மனம் பெருத்த அன்னையடி நான் மாசுற்றுப் போவது எப்படி?அழுதிருக்கும் வேளையிதை அறியாது நிற்பேனோ?அன்னாய்! அணைத்துந்தன் வலி தீர்க்கும் ஓர் மகவாய்,உன் உயிர்த்துளியின் ஓரத்தில் நானிருப்பேன்."

வெள்ளி, 11 ஏப்ரல், 2008

நேசிப்பின் நிலாவரையல்ல.. நெருப்பின் உலாமுகமே நிகழ்காலத்தேவை.


கொடுங்குலத்தின் கூர்ப்புடைக்கும் மடுத்தலத்தின் மத்தியிலே
தடுத்தாட் கொள்ள என்று தமிழருக்கு இருந்த தாய்
அடங்காச் சினங் கொண்ட அநியாயச் சிங்களத்தின்
நெடுங்காலத் திட்டமதில்
மடுத்தல மாதாவும் இப்போது இடப்பெயர்வு அகதி

பரம்பொருளே!....
தடுத்தாட் கொள்ள யார் உள்ளர் உலகில்?

இருதயநாதரும் இராணுவ ஷெல்வீச்சில் சிதைவுற்று போனாராம்.
சீர்தூக்கி இறைமகனை காக்க ஒரு கையின்றி,
கட்டிட சிதைவுக்குள் கருணைக்கடல் நிற்கிறாராம்
கண்கொண்டு பார்த்து கனக்கும் இதயமெங்கே?

ஆருக்கும் எம்மினம் அவதியைக் கொடுக்கவில்லை
ஆனால் போர் வித்தை கற்கவரும் வல்லாண்மைகளின்
மானுட நேசிப்பு எம் மண்ணைக் குதறுகிறது

மானுட புதைகுழிமேல் மல்லாக்கும் ஓணான்களே!
சாணாடா?, முழமாடா சாவுக்கு இருக்கிறது?
ஏவுகணை முதல் எல்லா பரீட்சையையும்
எங்கள் மண்ணிலே கந்தகத்தால் எழுதுங்கள்.
காலன்தான் எங்கள் கண்ணெதிரே தெரிகிறானே.

கார்காலம், கனத்தமழை, போர்த்தெழுந்த பெருவெள்ளம்
சேறேற்றி புதைக்கிறது சனத்தை...
போர்வாழ்வு ஒரு பக்கம், பொல்லாத உலகத்தின்
சுண்ணாம்புத் துப்பல்கள் சுவாசத்தின் மறுபக்கம்.
பாரெங்கும் நிமிர்தெழும் பனங்கூடல்களே!
வேர்மடியின் உடலெங்கும் பரந்தோடி உறைகிறது ரத்தாறு,
உயிர் கரைக்கும் வாசகங்கள் எவருக்கு வேண்டும் சொல்!

நாளாந்த மரணமல்ல, நாழிகையே மரணமென
சாவாழ்வு சரசமிட, பாதாள நரகமடா பைந்தமிழ் வாழ்வு
தாளாத வீரமடா தாங்கி நிற்கிறது.
தமிழ் மகவே!... உயிர் அகவே!
தேம்பாதே! தேங்காதே!...
விரி திசையின் மையத்தை தாங்கு!

நேசிப்பின் நிலாவரையல்ல...
நெருப்பின் உலாமுகமே நிகழ்காலத் தேவை.

வெள்ளி, 4 ஏப்ரல், 2008

குருதி பெருக்கெடுக்கும் இறுதிவேண்டுகை தாயே!

உலகத் திசையெங்கும் உழலும் தமிழ் விழுதுகளின் வேர்மடிக்கும் தாய்மடியே!

உறுதி குலையாத உரம் அன்றுதந்து, விடுதலையின் பொறி வளர்த்த பெருந்தாய் தமிழகமே!

ஊற்றுவாய் பிளந்தாற்போல் உணர்வோட்டம் பொங்கக்காற்று வழி கேட்கும் வள்ளுவக் கோட்டமே!

எம்திசை பார்த்தொருகால் உன் பூந்தாழ் திறவாயோ?
வார்த்தெடுத்துப் புனைந்து கவி சொல்ல வரவில்லை
வற்றாத வரலாற்று வரைவுகளால் இவ்வழி வந்தோம்.

ஆர்த்து, அணைத்து, ஆர்ப்பரித்துப் பேசிடவும்,
பார்த்துப் பசியாறி, பல்லாங்குழி ஆடிடவும்,
கோர்த்துக் கைகுலுக்கிக், கொவ்வையிதழ் விரித்திடவும்,
ஈர்ப்பு இருக்கிறது,....
எனினும் இப்போது முடியவில்லை.

கண்ணீர் பெருக்கெடுக்க,
உப்புக் காற்றின் உறவோடு தனித்தபடி,
கூப்பிடு தொலைவில்த்தானே...
எம்தேசம் கும்மிருட்டில் கிடக்கிறது.

ஆற்ற ஒரு நாதியின்றி, - எம்மினத்தின்
அவலத்தைத் தேற்ற ஒரு தேசமின்றி,
அம்மா!.......உன் கையணைக்கும் தூரத்திலல்லவா...
எம்பூமி காயம்பட்டுச் சிதைகிறது.

வாதைகள் பல சுமந்து,
கந்தகக் காலனின் குடியிருப்பில்,
குடி சுருங்கி,
கொப்பளிக்கும் குருதிவழி குலைசிதற,
இடிதாங்கி, இடிதாங்கி.... அடிதாங்கும் நிலை கூட...
இன்னும் உன் கண்களுக்குத் தெரியாமல் மறைப்பதென்ன?
உன் விழிமணிகள் மீதமர்ந்த வெண்சவ்வா?
இல்லாவிடின் வேண்டா உறவென்ற விளங்காக் கொள்கையா?

கட்டாய வலி வந்து,
கால் அகட்டிக் கிடக்கையிலே
ஆடைச் சரிவிற்குள் அந்நியர்கள் பார்வை...
எங்கள் தொப்புள் கொடிக்கான தொடர்பந்தம் நீதானே....
எப்படித் தனிக்க விட்டாய்?
ஏதிலியாய் தவிக்கவிட்டாய்?

சாவின் விளிம்பினிலே,
கூவிக் குளறி எம்தேசம் அழுகையிலே,
ஆவி துடித்தெழுந்து...
தாவி அணைக்கும் தாய்மடி நீதானே!

வாரியணைத்தெம் புவியின் வண்ணமுகம் பார் தாயே! - எவ்
வல்லமையும் உடைக்க முடியாத் தாய்மைவேதம் நீதானே!

தாயே!......
குமுறும் எம் உள்ளக் கோபுரத்தை வருடி எப்போது ஆற்றுவாய்?
தனித்த எம் வேர்மடிக்குத் தாங்கும் வலுவாய் தோற்றுவாய்?

அம்மா!
இது குருதி பெருக்கெடுக்கும் இறுதிவேண்டுகை தாயே!
பாராமுகம் வேண்டாம்.
வா!... பக்கத்துணையாய் இரு!

வேற்று மருத்துவச்சி வேண்டவே வேண்டாம்.
எம்புவியின் பேற்று மருத்துவச்சியாய்
நீயே பிள்ளைக் கொடி அறு!