வெள்ளி, 26 ஜனவரி, 2007

மானுடம் என்பது...மானுடம் என்பது ஆதிக்க சக்திகளுக்கு ஏற்ற வகையிலேயே பாதுகாக்கப் படுகிறதா? நாகரீக வளர்ச்சியில் உலகம் நடை போட்டுக் கொண்டிருக்கும் இந்த நாட்களில், மானுடம் பற்றி எல்லாவிடத்திலும் எல்லோரும் பேசுகிறார்களே! புலம்பெயர் ஈழத் தமிழர்களாகிய எங்களுக்கு இவை வேதனைச் சிரிப்பைத் தரவில்லையா? பிறந்து, வளர்ந்து, வாழ்ந்த மூதாதையர் பூமியில், இனவாதப் பேய்களின் ஆதிக்கத்தால் மனிதம் மறுக்கப்பட்டு, ஆயுத முனைகளால் உறவுகள், உடலங்கங்கள், வாழ்விடங்கள் இயல்பு நிலை இழந்து வாழ்வுக்கான தேடலில் பூமித் திசையெங்கும் அகதியெனும் முகத்துடன் அவலப்படும் ஒவ்வொரு ஈழத்தமிழருக்கும் மனிதத்தின் பெருமையும், பெறுமதியும் புரியாமலா இருக்கும்?
மானுடம் பேசும் ஆதிக்கசக்திகள் மனிதப் புதைகுழிகளை உற்பத்தி செய்தவர்களோடே கைகுலுக்குகிறார்களே! மானுடம் என்பது ஆதிக்க சக்திகளுக்கு ஏற்றவகையிலேயே பாதுகாக்கப் படுகிறதா?அல்லது புலம்பெயர்ந்து வாழும் எம்மினத்தின் தாயகப்பற்று பலவீனமாகி விட்டதா?
கந்தகம் விற்கும் கனவான் தேசங்களுக்கு கருகி சிதையும் எங்கள் இனத்தின் வலிதெரிய நியாயமில்லை. பேரம் பேசி விற்கும் ஆயுதவளங்கள் எங்கள் மண்ணில் நிறைக்கப்போகும் பிணக்குவியல்களைப்பற்றி விற்பனையாளர் அறிய ஆர்வப்படவா போகிறார்கள்?

இயற்கை எழில்கொஞ்சும் எங்கள் பூமியின் மரஞ்செடியெல்லாம் பரட்டையாக மெல்ல மெல்ல உயிர்ப்பைத் தொலைத்துக் கொண்டிருப்பது பற்றி….. எங்கள் தேசத்தின் மண்ணினை ஆய்வு செய்தால்..... அது தன்னுள் கலந்திருக்கும் கந்தக அமிலத்தின் கனதியைச் சொல்லுமென்பது எனக்கும், உனக்கும் மட்டும் தெரிந்தால் போதுமா?எப்போது உலகப்பரப்புகளில் சிங்கள இனவாதிகளுக்கு ஆயுதங்களையும், நிதியுதவிகளையும் கொடுக்காது நிறுத்தக்கோரி கிளர்ந்தெழப் போகிறோம்?
வடக்கிலும், கிழக்கிலும் தமிழினத்தின் மேல் போரையும், பொருளாதாரத் தடையையும் விதித்து சிறுகச் சிறுக எம்மினத்தைச் சாகடித்துக்கொண்டிருக்கும் இதேவேளை மற்றைய பகுதிகளில் வெளிநாட்டு உல்லாசப்பயணிகளின் களியாட்டங்களில் உண்மைகளை மூடிமறைத்து வேசம் போட்டு விவேகமாக வெளியுலகை நோக்கும் இலங்கை அரசின் முகமூடியை எப்போது கிழித்தெறியப் போகிறோம்?அரச பயங்கரவாதம் நிறைந்த நாட்டிடையே பெரும்பெரும் முதலீடுகளை செய்து எம்மினத்தின் அழிவுக்கு ஆதரவுத்தோள் கொடுக்கும் உண்மைநிலை புரியா அந்நிய அப்பாவித்தனங்களுக்கு எப்படிப் புரியவைத்து எம்மினத்தை பாதுகாக்கப் போகிறோம்?
பட்டிக்குள் அடைபட்ட மந்தைகளைப்போல் யாழ்குடாநாட்டிற்குள்ளும், வாகரைப் பிரதேசத்தினுள்ளும் மக்கள் அவலப்படும் இன்றையகாலங்கள் எப்படி உலகத்தின் கண்களுக்குத் தெரியாமல் போகிறதோ? உண்ண உணவின்றி ஒரு பிடி அரிசிகூட பெற வழியின்றி நஞ்சை உண்டு உயிரை மாய்த்த குடும்பம் உனக்கும், எனக்கும் சொன்னது என்ன? ஊர்ப்புதினமா?உக்கிரமான இராணுவ வக்கிரத்தின் மத்தியில் புசிக்க ஒருவாய் ஊணின்றி ஒட்டி உலர்ந்து சாவதைக் காட்டிலும் விசத்தை உண்டு உயிரை மாய்ப்பது விவேகம் என்பதையா? இது எதை உணர்த்துகிறது? புலம்பெயர் உறவுகளான எங்கள் மேல் ஏற்பட்ட அவநம்பிக்கையை அல்லவா.. குறிப்பெடுத்துக் காட்டுகிறது.
களத்தில் நின்று எங்களைக்காக்க வீர்ப்புதல்வர்களும், “அதே சமயம் வெளிப்புலத்திருந்து எங்களைக் காக்க எங்களின் விடியலுக்காய் ஒவ்வொரு தேசத்தின் மனக்கதவங்களையும் திறந்து எங்கள் தேசத்தில் எங்களுடைய வாழ்வுக்கான அங்கிகாரத்தை வழங்கச் சொல்லி சிங்களத்தின் செருக்கடக்குவீர்கள் நீங்கள் உள்ளீர்கள்! நீங்கள் உள்ளீர்கள்!”
என்ற எம்மினத்தின் எதிர்பார்ப்பை உடைத்தெறிந்து விட்டோமா?
நீயும், நானும் நேற்றைய இரணங்களை மறந்துவிட்டோமா? கல்வியைப் பறிகொடுத்தோம், கட்டிளம் பருவத்தில் இராணுவக்கரங்களில் சிதைவுற்றோம், உறவுகள், அயலவர், கண்ணெதிரே துடித்திறந்த காட்சியெல்லாம் காலாவதியாகி நினைவு பதிவிலிருந்து காணாமல் போய்விட்டதா? ஷெல் தந்த தழும்புகளையும், குருதிச் சுற்றோட்டத்தில் குலவித்திரியும் கந்தகத் துகளையும் காலம் மறக்கடித்து விட்டதா? அல்லது புலம்பெயர் வாழ்வியல் தந்த சுகம் இருட்டுக்குள் தள்ளிவிட்டதா?
பட்டியில் அடைபட்ட விலங்குகளுக்குக் கூட உணவு போடுவார்கள் ஆனால்… எங்களினத்திற்கு?
இராணுவக் குண்டர்களுக்கு மத்தியில் அவர்களைக் காக்கும் கேடயமாக மாற்றப்பட்டிருக்கும் மக்களுக்கே உணவைத் தடை செய்யும் சிறிலங்காவின் உற்பத்திப் பொருட்களை நானும் நீயுமாவது புறக்கணிக்கலாம் அல்லவா!எங்களின் இருப்பை, எங்களின் உறவுகளுக்கும், இந்த உலகத்திற்கும் உறுதிப்படுத்த வேண்டிய காலத்தில் நானும் நீயும் பயணிக்கிறோம். எங்களின் இருப்பு என்பது ஒருநாள் எழுச்சியல்ல… பெரும் தொடருந்தாய் நானும் நீயும் நகரவேண்டும். அடுத்தடுத்து சிறிலங்காவின் உற்பத்திப்பொருட்களுக்கும், உல்லாசப் பயணத்துறைக்கும், பாரிய முதலீடுகளுக்கும் தடைகளை உருவாக்கும் அதே நேரத்தில் இலங்கை வங்கிகளில் கிடக்கும் தமிழரின் பெரும் சேமிப்புப் பணங்களையும் மீளப்பெற்றும், சிறிலங்காவிற்கு பெரும்வருமானத்தை ஈட்டிக் கொடுக்கும் எயர்லங்கா விமான சேவைகளைத் தவிர்ப்பதாலும் உலகளாவிய ரீதியில் சிங்கள அரசுக்கு தமிழர்களாகிய எங்களால் பாரிய தடையை உருவாக்கமுடியும். அதற்கான முன்னெடுப்பை நானும் நீயும்தான் உருவாக்க வேண்டும். எங்களின் இந்த செயற்பாட்டின் மூலம் புலம்பெயர் தமிழரின் விடுதலை வேட்கையின் கனதியை சிங்கள இனவாதம் மட்டுமல்ல எங்களின் அவலங்களை கணக்கெடுக்காமல் ஆயுதவளங்களை அள்ளி சிங்களத்திற்கு வழங்கும் அண்டை நாடுகளோடு அனைவருக்கும் ஈழத்தமிழினம் புரியவைக்க வேண்டும்.
என்ன… என்னினத்தின் விடியலின் ஒளிதேடி நான் இறங்கிவிட்டேன். நீ…… இன்னும் உறங்குகிறாயா?.... இல்லை உணர்வற்று எம்மினத்தை அழிக்கும் அரசுக்குச் சாமரம் வீசுகிறாயா? வா!..... என் பதில்போல் உன்பதிலும் தாயகமண்ணுக்கு தலைநிமிர்வைக் கொடுக்கட்டும்.

புதன், 24 ஜனவரி, 2007

செய்! செருக்கை மற!!

செய்! செருக்கை மற!!
செய்! அல்லாவிடின் செத்துமடி!!
இது போரியல் வேதம்! தமிழீழ விடுதலை வேண்டிக்களத்தில் நிற்கும் வேங்கைகளின் உயிர்வாக்கு! தானை நடாத்தும் தலைவனின் உறுதியுள்ள ஆணை. தமிழீழத்தின் கம்பீரமே இந்த அத்திவாரத்தில் இருந்துதான் ஆரம்பமாகிறது. இக்கம்பீரம் பொருளாதாரத்தால் நலிவடையலாமா? மக்கள் வாழ்வும், மனநலமும் ஏழ்மைக்குள் மாய்ந்துபிடி அரிசிக்காய் வேகும் நிலைக்கே இன்றைய உலகம் ஈழத்தமிழினத்தை தள்ளிச் செல்கிறது. புலம் பெயர்ந்து வாழும் நாம் என்ன செய்யப்போகிறோம்? எங்களை நோக்கி இக்கேள்வி பூதாகரமாக எழுந்து நிற்பது எண்ணங்களை அசைக்கவில்லையா? போரை விதைத்து, சிங்கள இனவாதம் எங்கள் பூமியின் வளங்களைச் சிதைத்து, எங்கள் வாழ்வியலை வறுமையென்னும் கோரப்பிடிக்குள் தந்திரமாகத் திணித்து, தங்கள் காலடியில் போட்டுமிதிக்கலாம் என்று கனவு காணுகிறது. எங்கள் பிரச்சினைகளைத் தீர்க்கப் பொருளாதாரம் தடையாக இருக்கிறதென உலகமெல்லாம் கையேந்தி, தம் தரப்பை வலுப்படுத்தி, இன்னும் எம்மை நலியவைத்து நாடாள நினைக்கிறது. போர் உப கரணங்களாலும், இராணுவ அணிகளாலும் கடந்த காலங்களில் அரச பயங்கரவாதம் பலப்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கும் வேளைகளை அறிந்திருந்தும் சுதந்திரகாலம் பற்றிய சுகமான கனவுகளோடு புலம்பெயர் நாடுகளில் அமுக்கவேளைகளை அமைதி நாட்களாக காட்சிப்படுத்திய மாயவலைக்குள் மயக்கத்தில் கிடந்து, இப்போது இடியோசை கேட்டு நடுங்கிப் பேதலித்து நாளைநோக்கி நகரும் திராணியற்று விக்கித்து நிற்பதால் ஏதும் மாறிவிடப் போவதில்லை. வன்னிப் பெருநிலத்தில் ஆரம்பிக்கப்பட்ட அரச கட்டமைப்பு, தமிழீழம் எங்கும் விரிவுபடுத்தி நிலைப்படுத்தக்கூடிய உடல், உள வளங்கள் தமிழீழ மக்களிடம் நிறையவே இருக்கிறது. ஆனால் பொருளாதார வளம் அவர்களை ஏளனப்படுத்தி நகைக்கிறது. உதவுவதற்கு யாருமில்லாத இத்தகைய காலப்பகுதியில் புலம் பெயர்ந்து வாழும் எங்கள் உறவுகள் குறுகிய மனப்பான்மை கொண்டவர்களாக நான் என்றும், எனது ராசாங்கம் என்றும் தங்களுக்காக தனியே ஒரு குழு என்ற சிறு வட்டத்திற்குள் தத்தம் விவேகங்களைத் தொலைத்து விட்டு திணறிக் கொண்டிருக்கிறார்கள். "என்னை முன்நிறுத்தி மதிப்புத் தா! எல்லாம் செய்கிறேன்." என்பது போன்ற எண்ணங்களும், வாதங்களும் இன்றைய காலகட்டத்தில் வேண்டாதவை. நான், நீ எவருமே பெரிதல்ல, நாம் என்ற எங்கள் இணைப்புத்தான் பெரியது. தாயகத்தை மனதில் பூசிக்கிற எவருமே தனக்கு என்ற குறுகிய வட்டத்திற்குள் நிற்கமாட்டார்கள். பெற்றவள் புண்பட்டு இற்றுக்கொண்டிருக்க உற்றிருக்கும் பிள்ளைகட்குள் பேதங்கள் எழாது. பாசத்துடிப்பு கைகளை இணைத்து அன்னையைக் காக்கும் வலிமையாய் மாறும். செய்! பின்னர் செய்தேன், செய்தேனென்று செருக்கடையாதே! இன்னும் நீ செய்ய வேண்டியவை அளப்பெரியன. தேசத்தின் தேவை விசாலமானது. ஒருவரால், இருவரால் பூர்த்திசெய்யக்கூடியதல்ல. எல்லோரும் இணைந்து நிரவவேண்டிய பள்ளம். எனக்கும், உனக்கும் போட்டி என்பதை இன்றோடு விட்டுவிடுவோம். நான் உனக்கும், நீ எனக்கும் தோழர்கள் ஆவோம். இறுக இணைக்கும் எங்கள் கரங்களால் தேசத்திற்கு வலிமை சேர்ப்போம்.
செய்! செருக்கை மற!! இதை உனக்கும் எனக்கும் உரிய வேதமாக மாற்றுவோம்!

நில்!
நீயும், நானும் குறுகிய வட்டத்திற்குள் மறுபடியுமா? புரியவில்லையா?

செய்! செருக்கை மற!
இது புலம்பெயர்ந்த ஈழத்தமிழரின் வேதமாகட்டும்.

செவ்வாய், 23 ஜனவரி, 2007

மர்ம மயானம்.

எங்கள் எட்டுப்பேர்களுக்குள்ளும் இன்னும் கருத்தாடல்களும், கலக்கங்களும், கடந்த கால ஏக்கங்களும் தொடர்கதையாகிக் கொண்டிருந்தன. அந்த வேர் முட்டிய இலுப்பை மரம் நூற்றாண்டு தாண்டிய முதிர்ச்சியுற்றிருந்தாலும் அந்தக் கானல் பிரதேசத்தில் வேரூன்றிய காரணத்தால் வளர்ச்சியில் செழுமை குன்றி குற்றவாளியைப்போல் குறுகி நின்றது. அதன் அடிப்பரப்பு வேர்த்திட்டுக்களில் அமர்ந்தபடி அலறலாய் வெளிவந்த எங்கள் புலம்பல்களை இந்த மரம் எத்தனையோ தடவைகள் கேட்டாயிற்று. இருந்தாலும் மனதிற்குள் வெம்பியபடி இன்னும் மௌனமாகவே நிற்கிறது. அதைப் பார்க்கப் பார்க்க எனக்குக் கோபம் கோபமாய் வந்தது. ஏய் மரமே! உனக்குக் கூடவா எங்களைத் தெரியவில்லை?....... எத்தனைபேர் இவ்வழியால் வருகிறார்கள், போகிறார்கள். எங்கள் இருப்பை அவதானிக்க அவகாசம் இல்லாது அவரவர் அவசரம் அவரவருக்கு…. எண்ணங்களுக்குள் அலைமோதியபடி அந்தச் சாலையோரம் என் அவதானிப்புக்கள்…
தூரத்தில் ஏதோ பொருட்கள் சுமந்தபடி ஒரு மாட்டுவண்டி!காளை மாடுகளின் வாய்களின் ஓரங்களில் நுரை கக்கியபடி அவற்றின் கழுத்தில் கட்டப்பட்டிருந்த மணிகளின் ஒலி லயத்திற்கு ஏற்றபடி அவை நடைபோட்டு வந்து கொண்டிருந்தன. கானல் வெயிலில் கண்களைக் கூசியபடி வண்டி ஓட்டிக் கொண்டிருந்த கிழவனின் கண்களில் ஒரு மலர்ச்சி. எனக்குத் தெரியும் இந்த இலுப்பைமர நிழல் அவனை வசீகரித்து விட்டது. நிட்சயம் அவன் இந்த நிழலில் இளைப்பாறுவான். எனக்குள் மின்னல் வெட்டியது. எப்படியும் கிழவனை நம்பக்கம் ஈர்க்க வேண்டும். சுற்றவர என்னைப் புரிந்து கொண்ட வேகத்தில் எண்திசைக்கும் பார்வைகள் படர்ந்தன. அதோ கிழவன் அண்மித்துவிட்டான். இலுப்பையடியில் எங்களைப் பார்த்ததும் காளைகள் இரண்டும் கண்களில் மிரட்சியுற்றன. லயத்தோடு நடையிட்ட அவற்றின் கால்கள் நிலை தடுமாறின. கிழவனின் கையில் இருந்த மூக்கணாங்கயிறு வலிகொடுக்கக் காளைகள் ஒடுங்கின. இலுப்பை வேரடியில்… இதோ கிழவன் இறங்கி விட்டான். நாங்கள் துணிந்து அவனருகே சென்று சுற்றிவர நின்றோம். அவன் தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டிருந்தானே தவிர, எங்களைக் கவனிக்கவேயில்லை. மதிய வெயிலின் ஒருவித நிசப்தம் அவனை பாதித்ததாகவும் தெரியவில்லை. ஆனால் காளை மாடுகள் மட்டும் மருட்சியோடு எங்களைப்பார்த்துத் தீனமாக நலிவோடு அழுதன. அது கிழவனுக்கு எரிச்சலை ஊட்டியிருக்கவேணும் “த்தா…! சும்மாயிரு!!” என்று அதட்டிக்கொண்டு சுற்றுமுற்றும் பார்வையை ஓடவிட்டான். “விசுக்” கென்று அந்தப்புதர்பக்கமிருந்து வெளவால் ஒன்று கிறீச்சிட்டுப் பறந்தது. திடுக்கிட்ட கிழவன் பார்வையை அந்தப்பக்கம் திருப்பினான். ஏதேச்சையாக எதையோ…….. எதையோ மிக உன்னிப்பாகப் பார்க்கத் தொடங்கினான். எங்களுக்குள் மலர்ச்சி….. அமைதியாக இலுப்பை வேர் முட்டியில் கிழவனைப்பார்த்தபடி அமர்ந்தோம். கிழவன் கண்ணுக்கு ஏதோ உறுத்தியிருக்க வேண்டும் அங்கேயே உற்று உற்றுப் பார்த்தான்.
அந்த நேரம் தூரத்தில் இரைச்சல்…. புழுதியைக் கிளப்பியபடி இராணுவ வாகனங்கள் வேகமாக வந்து கொண்டிருந்தன. இரைச்சலின் அடையாளத்தை உணர்ந்த கிழவன் அவசரமாக காளைகளை உசார்ப்படுத்தி வண்டியில் ஏறிக் கொண்டான். இதற்குள் இராணுவ வாகனங்கள் கிழவனைத் தாண்டி வேகத்தைக் குறைத்தன. முதலாவது ஜீப்பில் வந்த சிப்பாய் “அடோ…அடோ இங்கி..என்னெ செய்றே!” என்று விரட்டியபடி ஜீப்பைவிட்டுக் குதித்தான். கிழவனும் நிழலுக்கு ஒதுங்கியதாக பயத்தோடு பிதற்ற ஆரம்பித்தான். மூன்றாம் வாகனத்தில் இருந்து மிடுக்கோடு ஒரு குரல் சிப்பாயை அதட்டச் சிப்பாய் தனது வாகனத்தில் ஓடிப்போய் ஏறிக்கொண்டான். மீண்டும் வாகன அணி நகர்ந்தது.
ஆ….. அதோ அந்த கடைசி வாகனத்தில் போறான்.. அவன்தான் நான் கூவிக்கொண்டு பறந்தேன். என்னோடு வேகமாக மற்றைய ஏழ்வரும் பறந்து வர அந்தச் சிப்பாயின் அருகே சென்றோம்.
அந்தச்சிப்பாய் அவன் பார்வை கிழவன் நோக்கிய அதே புதரைக் கிலியோடு நோக்கியபடி இருக்க அந்த இராணுவ வாகன அணி நகர்ந்து சென்றது. எங்கள் எண்மரால் எதுவும் செய்ய இயலவில்லை… திருப்பிப்பறந்து இலுப்பையடிக்கு வந்தோம். கிழவனும் கிளம்பிப் போய்க்கொண்டிருந்தான்.
ஏமாற்றத்துடன் எங்கள் காத்திருப்பு அடுத்த வரவுக்காக ஏங்கியபடி….. அந்தப் புதர்ப்பக்கம் இன்னும் எனது கையோடு இணைந்தபடி என் கடிகாரம் ஒளிகொடுத்துக் கொண்டிருக்கிறது.

திங்கள், 22 ஜனவரி, 2007