வெள்ளி, 8 ஜனவரி, 2010

சரித்திரச் சங்கமிப்பில் நெருப்பெடுக்கும்போதில் மண்ணில் மரணமும் ஜனனமே.மண்டியிடாத மன்னவனை எமக்களித்த மாமனிதா
சரித்திரச் சங்கமிப்பில் நெருப்பெடுக்கும்போதில்
மண்ணின் கணிதத்தில் மரணமும் ஜனனமய்யா.
பாக்கு நீரிணையின் சிற்றலைகள் மிடுக்கெடுக்க
உப்புக் காற்றுறையும் ஊரணியில்
இனத்தின் மீளெழுச்சித்துயில் கொள்க.
காற்றும், வானும், நீர், நிலம், நெருப்பும்
தழுவி உம் மெய் ஆற்றட்டும்.
வல்வை மண் சாந்தி தரும்.

ஞாயிறு, 3 ஜனவரி, 2010

சந்தனம் கமழ, செந்தமிழ் குழைய மங்கலம் இழைய "வருக என் பொன்னாண்டே" என்று வரவேற்கும் இங்கிதம் தொலைந்து போன உள்ளம் உன் வரவில் குளித்தாடுமா வெல்லம்?

சந்தனம் கமழ, செந்தமிழ் குழைய
மங்கலம் இழைய "வருக என் பொன்னாண்டே" என்று
வரவேற்கும் இங்கிதம் தொலைந்து போன உள்ளம்
உன் வரவில் குளித்தாடுமா வெல்லம்?

வருக புத்தாண்டே.
அழைத்தாலும், விட்டாலும்
அகலக்தடம் விரித்து - எங்கள்
வாழ்வின் வாசலில் வினையாற்றத் தொடங்கிவிட்டாய்.

அழைத்தென்ன?
விட்டென்ன?
அனுமதி கேட்டா வருகின்றாய்?
வந்தது வந்துவிட்டாய்
வலிய வந்த சீதேவியே!
எங்கள் வாழ்வின் வாசலில் கோலமிடு.

நேற்றுன் சோதரி வந்தெடுத்துப் போனாள்.
ஒப்பாரி ஓலங்களை மட்டுமே எங்களதாய் மிச்சப்படுத்தி,
கண்மூடித் திறக்குமுன்னே களவாடிப் போய்விட்டாள்.

எங்களுக்கென்று பத்திரப்படுத்த,
செல் விழுந்த சிதைவிடையே
உயிர் காவி ஓடியதையும்,
எரிவாயுத் தணலிடையே
உயிர் முனகித் தப்பியதையும்,
கொத்தணிக்குண்டிடையே உடலின் பாகங்கள்
தொலைந்து தேடியதையும்,
கூட்ட மந்தைகளாய் மாற்றுடுப்பற்று,
சேற்று நாற்றமுடன் தூங்காத இரவுகளையும்,
இராணுவத்தின் உல்லாசத் தேடல்களுக்கு
உரித்த அம்மணத்தின் அவமானங்களையும்,
மீளெழலின் அச்சத்தால்
கருவறுப்பின் எச்சங்களையும்,
சாட்சிகள் அற்றுப் போன மனிதப் பேரவலத்தின்
அனுபவங்களை மட்டுமே மிச்சப்படுத்தி
மீதமுள்ள அத்தனையையும் களவாடிப் போய்விட்டாள்.

இந்த இலட்சணத்தில் வருகைப் பாட்டெழுத என்
எழுதுகோலுக்கு மனம் வருமா?

பார்த்திருந்தோம்.
மனுக்குலத்தில் செத்துவிட்ட மனிதத்தின் பக்கங்களை,
படிக்க ஒரு வரலாறு படைத்துவிட்டு பாதகி போயொழிந்தாள்.

மூக்குச் சிந்திக் கிடந்து முனகும் கூட்டமென எம்மை ஆக்கிவிட்டு
அந்த அகங்காரி அகன்றுவிட்டாள்.
சரி அவளைப்பற்றி என்ன கதை?
போனவள் போகட்டும்.

வந்தவள் நீயென்ன வரங் கொண்டு வந்தனை?

பொன்னள்ளிச் சொரியும் பெரிய தேவனுக்குப் பொங்கலிடும் நாளில்
பிடி நெல்மணிக்கு கையேந்திக் கிடக்கும் சனத்திற்கு…
என்ன கொண்டு வந்தாய்?

இதென்ன புதுப்பழக்கம் என்று
குழப்பத்தில் தோயாதே.

வாசல் வந்த உனை நிறுத்தி
வசை பாடல் என் நோக்கமல்ல.

உனைக் கொண்டாடி...
உனக்கு வருகைப் பாட்டெழுதும் கவிஞனும்
இப்போது கொடுஞ்சிறையில்..
எவர் பாடுவார் உனக்கு வரவேற்பு?

கொள்ளிக் கண்ணாள் வந்து
கொலு நொறுக்கிப் போய்விட்டாளே.

வருகின்ற எவரையும்...
வா என்றழைக்க முடியாமல் வலிக்கிறது இதயம்.
வாசல் வந்துவிட்டாய்
நான் விரட்டினாலும்
நீ போய்விடவா போகிறாய்?

வாசல் தேடி வந்தோரையும்,
நேசமுகம் செய்தோரையும்
விருந்தோம்பி வெந்து போயுள்ளோமடி.
வேதனையைத் தந்து போனோருக்கெல்லாம்…
எங்கள் தெங்குகள் ஈந்த
தேனமுதம் தந்து தாகங்கள் தீர்த்தோமடி.
வெந்து கருகியுள வன்னி மடியினிலே,
வீணை நெகிழ் இசையில் விருந்தும் இட்டோமடி.
இன்று விரக்தி உற்றோமடி.

வந்ததுதான் வந்தாய்
வேடிக்கையைப் பார்
இட்டவனும் தொட்டவனும் அரச கட்டில் ஏற
பட்டவனின் தலையில் பல்லக்குக் கட்டுவதை
கூசாமல் தமிழச்சியை சூறையாடச் சொன்னவன்
குழையக் குழைய ஓட்டுக் கேட்டு ஊருராய் வருகிறான்
ஓலமிட ஓலமிட எம் சனத்தைத் தொலைத்தவன்
வாக்குக்காய் தேடி வலயவலய வருகிறான்.

கையை உடைத்தவனுக்கு கை கொடுக்க முடியுமா?
கழுத்தை அறுத்தவனுக்குத் தோள் கொடுக்க முடியுமா?

வாசலுக்கு வந்த 2010ஏ
அவலத்தைத் தந்தவன்கள் அடிபட்டு விழுவதற்கும்
கொடுக்குக் கட்டினவன்கள் கோவணத்தைப் பிய்ப்பதற்கும்,
அரசியல் தெருவெளியில் அம்மணமாய் திரிவதற்கும்,
வினையை விதைத்தவனே வினையாலே சாவதற்கும்
வழியிருந்தால் கொண்டு வா
வரவேற்கிறேன் உன்னை.

இன்று...
சாபங்கள் மட்டுமே என் நாவேறி நிற்கின்றன.

சரித்திரப் புரட்சி உன் பரப்பில் நிகழின்
சாகாவரம் பெற்ற பெரும் பாடலில் உனைப் புனைவேன்.
சாக்குக்கோ, சந்தமிடும் பாட்டுக்கோ இதை எழுதவில்லை
சத்தியத்தின் மூச்சில் எழுதுகிறேன்.