உயிர் முட்டி எழுகிறது உணர்வு.
காதுமடலை உராயும் காற்றின் வழியே
உங்கள் மூச்சின் இளஞ்சூடு படர்கிறது.
அருவமாய் வந்தெங்கள் அருகிருக்கிறீர்கள்...
உப்பேரி கரையுடைக்கும் எங்கள் விழிகளுக்குள்
உக்கிர நெருப்பை தேடுகிறீர்கள்.
உமக்கான மொழியெடுத்து
உம்மோடு பேச முடியாது, ஊமையாகி,
தலை குனிந்தே உங்கள் முன்
குற்றக் கூண்டேறி நிற்கிறோம்.
வெற்று வார்த்தைகளால் கவிபாட முடியவில்லை
பொய் கலந்தென் புனைவிருப்பின்
சத்திய நெருப்பு சுத்தி வந்து தீய்க்கிறது.
கார்த்திகை 27, 1982
முதல் மாவீரன் மண்ணில் சரிந்து
இன்றுடன் ஆண்டு 27 ஆகிவிட்டது.
காலநதி என்னவோ ஈழவர் வாழ்வைக்
கரைத்தபடி வேகமாய் நகர்கிறது.
இளமை தேய்ந்து, முதுமை எங்கள்
காதோரக் கேசங்களில் கடிதம் எழுதுகிறது.
கார்த்திகைத் திங்கள் என்றாலே
கனக்கும் இதயத்திற்கு
கல்லறைப் பாடல்தான்
உயிர் உந்தும் விசையை
உள்ளெடுக்க வைக்கிறது.
ஒவ்வொரு வரிகளுக்குள்ளும்
உயிர்துளிகள் உருகி
உறுதி மொழி எடுக்கும் வரை
ஓர்மமின்றி நலிகிறது.
உங்களைத் தரிசிக்கவரும் ஒவ்வொரு கணமும்
நேற்றைய நாட்களின் தோழமைச் சிரிப்பும்,
எங்கள் மீதான உங்களின் நம்பிக்கைத் துளிர்ப்பும்
ஆழப்பரவி எங்கள் சுயத்தை எரிக்கின்றன.
ஆலய தரிசனம் ஆன்மாவிற்கு நிம்மதி
அதிலும் உன்னத தோழர்களின்
உயிர்ப்பூவனத்தில்அந்தி சாய்கையிலே
அமர்தலே பேரின்பம்.
தேவரீர்!,
உங்கள் கோபுர வாசலுக்குள்
பாதம்பதிக்க வழியற்ற
புலம் பெயர்வின் பெருவாழ்வு...
அருவருப்புப் பிண்டம்போல்
அகத்தில் நெளிகிறது.
உங்கள் உயிர்க்கொடையின் செறிவு
உள்ளப்புண்களில் அமிலம் அள்ளிச் சொறிகிறது.
ஒவ்வொரு வருடமும்
ஏதோ புலம்பலுடன் உங்களைக் காணவந்து,
ஆவி துடித்திருக்கும் உங்களின்
ஆவலை முடக்கிவிட்டு,
'மறுபடியும் வருவோம்,
தாயக விலங்கறுத்த தேமதுரச் சேதி கொண்டு
தித்திக்க பேசுவோம்" என்றும் வாக்களிக்கிறோம்.
அடுத்த வருடம்...
இன்னொரு சாட்டு சொல்லி
உங்கள் வாய்களுக்குப் பூட்டுப்போட்டுப்
புறப்பட்டு விடுகிறோம்.
ஈழவர் விதி இதுவென்றாகிக் கிடக்கிறது.
இன்றும் வந்துள்ளோம்...
மௌனப்பதில்களை மட்டுமே சுமந்தபடி,
வல்லாண்மைச் சதி எங்கள்
வாழ்வு அள்ளிக் கருக்குவதை
உணர்வீர்கள் என்ற பெரு நம்பிக்கை
கொண்டே உங்கள் முன்றலில் கூடியுள்ளோம்.
ஏக்கத்தோடு பார்க்கும் உங்களிடமே
நிமிர்ந்தெழும் சக்தி கேட்க
செங்காந்தள் அள்ளிவந்து
சிரம் தாழ்த்தி நிற்கிறோம்.
எங்களைப் பார்த்து ஏமாற்றம் அடையாமல்
புன்னகைப் பூவெறிந்து நிற்கிறீர்களே,
இன்னும் அறியாமையில் துவளும் எங்கள் மேல் உங்களுக்கு இவ்வளவு பற்றுதலா?
ஏளனப்பட்டதாய் ஈழவள் ஆகலாகாதென்று
அக்கினிச் சிறகெடுத்த அவதார புரசரே!
இயலாமை எங்களின் இருப்பாகக் கூடாதென்று
கல்லறை மேனியராய் கருக்கொண்டோரே!
பெருந்தாய்த் தமிழகத்தின் உறவுக்கொடியெலாம் அணிதிரண்டு எமை அரவணைக்கும் ஒரு செய்தி இன்றுங்கள் காதுபாயும் முதல் மதுரம் ஆகிடுக.
களத்துலவும் தோழர்கள் கட்டாயம்
வெற்றிச் செய்தியோடு விரைந்தோடி வருவார்கள்.
கல்லறைத் தேவரீர்!,
உங்கள் ஏக்கத்தைத் தீர்க்கும் பெருவரம் பெற்றவர்கள் நாங்களல்ல அவர்கள்தான். - எனினும்,
புலம்பெயர்வின் மோகத்தில் அள்ளுண்டு போகாமல்இன்றுங்கள் முன்னிலையில்
மீண்டெழும் வரங்கேட்டு நிற்கிறோம்.
எங்கள் நெஞ்சக் கூட்டிற்குள்ளும்
ஆழப் புதையுண்டிருக்கும் விடுதலைப் பொறியை
உங்கள் மூச்சுக் காற்றில்
மூசும் எரிமலையாய் ஏற்றுக.
சாட்டுரைத்தே கேடுற்றர் தமிழச் சாதியென்று
எங்கள்சந்ததி சரிதம் எழுதக்கூடாது.
ஆண்டுக்கொருமுறை வந்து உங்களை
ஏக்கக் கூண்டுக்குள் அடைக்க
இனியும் எம்மால் முடியாது.
உங்கள் தாகம் தீர்க்காது ஊமைக் காயங்களுடன்
உமைவிட்டுச் செல்வது இதுவே இறுதியாகட்டும்.
அடுத்த வருகை உங்களைக் காணவெனில்
அன்னை திருமுடி தரித்த பின்னர்தான்.
இளைய தேவரீர்!
இன்றுங்கள் கோட்டத்தில் எடுக்கும்
உறுதிமொழி இதுதான்.