ஞாயிறு, 9 டிசம்பர், 2007

எச்சரிக்கை மடல்


மனதால்த் தன்னும் தாய்மை வலியுணராப் பெண்டிரும்,
தாவி அன்னை திருமடியில் தவழ்ந்து மகிழா ஆடவரும்
தயவு செய்து மேற்கொண்டு,
இக்கவியின் இரத்த ஓடையை
இரணமாக்கி இரசிக்க உள் நுழையாதீர்!

ஓர் பிரசவத்திற்கான இறுதி வலியில்
தேசத்து ஆன்மா துடிக்கிறது.
நீண்ட நேரம் உயிர்ப்பின் வாசலில் தங்கிவிட முடியாது.

உந்தும் வலு உறுதியாக வேண்டும்.
ஒவ்வொரு மணித்துளியும் வலியின் வேகம்
வரப்புடைத்து பெருகி எல்லாப் பாகத்திலும் விரிகிறது.
பனிக்குடம் உடைந்தபின்,
முக்குதற்கு நீண்ட நேரம் எடுத்தால்
எல்லாமே உறைந்து போகும்., ......உலர்ந்தும் போகும்.

வலியின்றி வளர்ச்சி இல்லை.
வலுவின்றி வலியைச் சந்தித்தால்
பலவீனம் பாயில் கிடத்தும்.
வலுவினூடே வலியைச் சந்தித்தால்
நலிவு நாணி ஓடும்.

இருந்து வியாக்கியானம் பேசும் மணித்துளிகள்
வலி வளர்க்கும் வேறொன்றும் செய்யாது.
பந்தமாய் ஆவதற்குப் பலவீனம் வாசலோரம்
முண்டியடித்து நிற்கிறது.
அதை ஊளையிட்டு ஓடவைத்தல் என்பது
உந்தும் வேகத்தில் இருக்கிறது.

உயிர்ப்பின் வலியும், உயிர்ப்பின் ஒலியும்
பிறப்பின் வாசலிலே பின்னி நலிகிறது.
வலியை ஒழிப்பதும், ஒலியை வளர்ப்பதும்
எம் இருப்பின் இயல்பில் இறைத்துக் கிடக்கிறது.

உந்தூ!
இல்லாவிட்டால் மூச்சுத் திணறும்
இத்தனை காலம் எத்தனை இழந்து...
வளர்த்த திரு இது.

முந்நூறு நாள் வளர்ந்த முத்தல்ல,
60 ஆண்டுகளாய் அவதியுறும் வலியில்
தமிழினம் சுமந்த கருவில் வளர்ந்த தெய்வசிசு.

தெய்வ சிசுவின் பிறப்பையே மறுக்கும்
பிசாசுத்தனங்கள் புளுகுக்கதைகள் அல்ல - அவற்றை
நிசத்தில் நாமும் தரிசிக்கும் நிகழ்காலம் இது.

உலகும் வலுவை நோக்கியே தலைவணங்கும் என்பது

வரலாறுகள் உணர்த்தும் பாடம்.
எம் வலிக்கு மருந்து எம்கையில்,
மண்டியிட்டாலும் மாற்றார் எமக்குதவார்.

களமும், புலமும் கைகோர்த்தே...

உந்தும் பெருமூச்சை உருவாக்கவேண்டும்

வலுவும், வளமும் இணைவதில்
வரலாற்றின் கதவுகள் திறக்கும்.
எடுக்கும் கைகள் கொடுக்கப் பணிய,
உந்தும் வலு உச்சமடையும்.
பிறப்பின் வாசல் விரிவடைய
தெய்வத்திரு கண் விழிக்கும்.

இதற்குப் பின்னும் காலந்தாழ்த்தல்
என்னையும், உன்னையும் இழிவாக்கும்.

புரிவாயா?

ஞாயிறு, 2 டிசம்பர், 2007

கவிதையின் அரசே வாழீ! புதுவைப் புலவனின் அகவை 60


துள்ளிடும் வாலிபத்தால்
துணையற்று வெண்நரையும்,
வில்லிடும் நாவளத்தால்
வேதனை செய்விதியும்,
கள்ளிடும் கவின்பாவால்
காணாமல் போகட்டுமென
தள்ளி நிலம் வாழுகின்ற
தமிழ்ச் சின்னவளின் வாழ்த்து இது.

இருவயது மழலையாக
இதயத்தில் உலவு கவியே!
அறுபது அகவையய்யா
அகத்திலே பதியவில்லை.
ஆண்ட நின் புலமைகென்றால்
ஆயிரம் அகவை தாண்டும்.
பூண்ட மண்கோலத்திற்குள்
புதிர் கூடி நிற்குதய்யா!

தீரப் பெருங்கவியே! தீராத
மாவரம் தந்த துரோணக்குருவே!
ஏறுபோல் நிமிர்ந்த
எழுத்தின் வீரியமே!
கண் நூறு படுமய்யா!
கரிநாச் சொல்லிது.
காலடி மண்ணெடுத்துக்
கற்பூரச் சுடரிலே போட்டிடுக!

கூர்வடிவேலை ஆளும்
சுந்தரப் பேச்சும்,
வேரடி வீரம் ஊறும்
துல்லிய வீச்சும்,
பாரதைப் பணிய வைக்கும்
பைந்தமிழ் பாட்டும்,
ஊரடி உறவை அணைக்கும்
உயிர்ப்பின் ஊற்றும்,
வேரடித் தலைவி காக்க
வாழ்வாங்கு வாழ வாழீ!

மேதகு தலைவன் அருகே
தோள்தரும் ஞானகுருவாய்,
ஈழவள் விலங்கறுக்கும்
காலமது உரைக்கும் திருவாய்,
ஞாலமோடலையும் உறவின்
உணர்வுகள் இணைக்கும் கருவாய்,
வாழக்குடி ஈழம் வரவே
வந்தணைக்கும் அன்பின் செறிவாய்
காலநதி கடந்தும் வாழும்
கவிதையின் அரசே வாழீ!