வியாழன், 2 டிசம்பர், 2010

Dear Friends,

Dear Friends,

Please telephone and email Dorchester hotel, that they are hosting a War Criminal and Murderer in the name of Mahinda Rajapaksa.Details given below.
Please note that no war criminals should be allowed to stay in hotels but prison. Shame on you to have accepted a war criminal in your hotel!

Tel: 020 7629 8888

email: rcrawley@thedorchester.com

send this to your friends too.

வெள்ளி, 8 ஜனவரி, 2010

சரித்திரச் சங்கமிப்பில் நெருப்பெடுக்கும்போதில் மண்ணில் மரணமும் ஜனனமே.



மண்டியிடாத மன்னவனை எமக்களித்த மாமனிதா
சரித்திரச் சங்கமிப்பில் நெருப்பெடுக்கும்போதில்
மண்ணின் கணிதத்தில் மரணமும் ஜனனமய்யா.
பாக்கு நீரிணையின் சிற்றலைகள் மிடுக்கெடுக்க
உப்புக் காற்றுறையும் ஊரணியில்
இனத்தின் மீளெழுச்சித்துயில் கொள்க.
காற்றும், வானும், நீர், நிலம், நெருப்பும்
தழுவி உம் மெய் ஆற்றட்டும்.
வல்வை மண் சாந்தி தரும்.

ஞாயிறு, 3 ஜனவரி, 2010

சந்தனம் கமழ, செந்தமிழ் குழைய மங்கலம் இழைய "வருக என் பொன்னாண்டே" என்று வரவேற்கும் இங்கிதம் தொலைந்து போன உள்ளம் உன் வரவில் குளித்தாடுமா வெல்லம்?

சந்தனம் கமழ, செந்தமிழ் குழைய
மங்கலம் இழைய "வருக என் பொன்னாண்டே" என்று
வரவேற்கும் இங்கிதம் தொலைந்து போன உள்ளம்
உன் வரவில் குளித்தாடுமா வெல்லம்?

வருக புத்தாண்டே.
அழைத்தாலும், விட்டாலும்
அகலக்தடம் விரித்து - எங்கள்
வாழ்வின் வாசலில் வினையாற்றத் தொடங்கிவிட்டாய்.

அழைத்தென்ன?
விட்டென்ன?
அனுமதி கேட்டா வருகின்றாய்?
வந்தது வந்துவிட்டாய்
வலிய வந்த சீதேவியே!
எங்கள் வாழ்வின் வாசலில் கோலமிடு.

நேற்றுன் சோதரி வந்தெடுத்துப் போனாள்.
ஒப்பாரி ஓலங்களை மட்டுமே எங்களதாய் மிச்சப்படுத்தி,
கண்மூடித் திறக்குமுன்னே களவாடிப் போய்விட்டாள்.

எங்களுக்கென்று பத்திரப்படுத்த,
செல் விழுந்த சிதைவிடையே
உயிர் காவி ஓடியதையும்,
எரிவாயுத் தணலிடையே
உயிர் முனகித் தப்பியதையும்,
கொத்தணிக்குண்டிடையே உடலின் பாகங்கள்
தொலைந்து தேடியதையும்,
கூட்ட மந்தைகளாய் மாற்றுடுப்பற்று,
சேற்று நாற்றமுடன் தூங்காத இரவுகளையும்,
இராணுவத்தின் உல்லாசத் தேடல்களுக்கு
உரித்த அம்மணத்தின் அவமானங்களையும்,
மீளெழலின் அச்சத்தால்
கருவறுப்பின் எச்சங்களையும்,
சாட்சிகள் அற்றுப் போன மனிதப் பேரவலத்தின்
அனுபவங்களை மட்டுமே மிச்சப்படுத்தி
மீதமுள்ள அத்தனையையும் களவாடிப் போய்விட்டாள்.

இந்த இலட்சணத்தில் வருகைப் பாட்டெழுத என்
எழுதுகோலுக்கு மனம் வருமா?

பார்த்திருந்தோம்.
மனுக்குலத்தில் செத்துவிட்ட மனிதத்தின் பக்கங்களை,
படிக்க ஒரு வரலாறு படைத்துவிட்டு பாதகி போயொழிந்தாள்.

மூக்குச் சிந்திக் கிடந்து முனகும் கூட்டமென எம்மை ஆக்கிவிட்டு
அந்த அகங்காரி அகன்றுவிட்டாள்.
சரி அவளைப்பற்றி என்ன கதை?
போனவள் போகட்டும்.

வந்தவள் நீயென்ன வரங் கொண்டு வந்தனை?

பொன்னள்ளிச் சொரியும் பெரிய தேவனுக்குப் பொங்கலிடும் நாளில்
பிடி நெல்மணிக்கு கையேந்திக் கிடக்கும் சனத்திற்கு…
என்ன கொண்டு வந்தாய்?

இதென்ன புதுப்பழக்கம் என்று
குழப்பத்தில் தோயாதே.

வாசல் வந்த உனை நிறுத்தி
வசை பாடல் என் நோக்கமல்ல.

உனைக் கொண்டாடி...
உனக்கு வருகைப் பாட்டெழுதும் கவிஞனும்
இப்போது கொடுஞ்சிறையில்..
எவர் பாடுவார் உனக்கு வரவேற்பு?

கொள்ளிக் கண்ணாள் வந்து
கொலு நொறுக்கிப் போய்விட்டாளே.

வருகின்ற எவரையும்...
வா என்றழைக்க முடியாமல் வலிக்கிறது இதயம்.
வாசல் வந்துவிட்டாய்
நான் விரட்டினாலும்
நீ போய்விடவா போகிறாய்?

வாசல் தேடி வந்தோரையும்,
நேசமுகம் செய்தோரையும்
விருந்தோம்பி வெந்து போயுள்ளோமடி.
வேதனையைத் தந்து போனோருக்கெல்லாம்…
எங்கள் தெங்குகள் ஈந்த
தேனமுதம் தந்து தாகங்கள் தீர்த்தோமடி.
வெந்து கருகியுள வன்னி மடியினிலே,
வீணை நெகிழ் இசையில் விருந்தும் இட்டோமடி.
இன்று விரக்தி உற்றோமடி.

வந்ததுதான் வந்தாய்
வேடிக்கையைப் பார்
இட்டவனும் தொட்டவனும் அரச கட்டில் ஏற
பட்டவனின் தலையில் பல்லக்குக் கட்டுவதை
கூசாமல் தமிழச்சியை சூறையாடச் சொன்னவன்
குழையக் குழைய ஓட்டுக் கேட்டு ஊருராய் வருகிறான்
ஓலமிட ஓலமிட எம் சனத்தைத் தொலைத்தவன்
வாக்குக்காய் தேடி வலயவலய வருகிறான்.

கையை உடைத்தவனுக்கு கை கொடுக்க முடியுமா?
கழுத்தை அறுத்தவனுக்குத் தோள் கொடுக்க முடியுமா?

வாசலுக்கு வந்த 2010ஏ
அவலத்தைத் தந்தவன்கள் அடிபட்டு விழுவதற்கும்
கொடுக்குக் கட்டினவன்கள் கோவணத்தைப் பிய்ப்பதற்கும்,
அரசியல் தெருவெளியில் அம்மணமாய் திரிவதற்கும்,
வினையை விதைத்தவனே வினையாலே சாவதற்கும்
வழியிருந்தால் கொண்டு வா
வரவேற்கிறேன் உன்னை.

இன்று...
சாபங்கள் மட்டுமே என் நாவேறி நிற்கின்றன.

சரித்திரப் புரட்சி உன் பரப்பில் நிகழின்
சாகாவரம் பெற்ற பெரும் பாடலில் உனைப் புனைவேன்.
சாக்குக்கோ, சந்தமிடும் பாட்டுக்கோ இதை எழுதவில்லை
சத்தியத்தின் மூச்சில் எழுதுகிறேன்.

ஞாயிறு, 13 டிசம்பர், 2009

வணிகம் பேசினாலே மனிதம் பேசுவார்களா?

இற்றைக்கு இரண்டு ஆண்டுகள் முன்புவரை
ஒரு “தேசத்தின் குரல்” சர்வதேசத்தின்
செவிப்பரைகளில் மோதி மோதி
இந்து சமுத்திரத்தில்,
ஈழத்தமிழினத்தின் விழிகரித்த உப்புகடலில்
குருதி கொப்பளித்துக் கிடக்கும் ஈழத்தின் இருப்பை
உரைத்துரைத்து ஓய்ந்து போனது.

கண் மறைந்து போன கால நீட்சியில்
கற்றுக் கொண்டதும், கண்ணீர் விட்டதும்,
கனக்கும் இதயக்கூட்டின் கணக்கில் அடங்காமல்
நீண்டநெடும் பயணத்தில் இன்னும் தொடர்கிறது.

வேர் மடியின் தாகம் கொண்டு எத்தனையோ உன்னதங்களை,
வேதனையைச் சுமந்து சுமந்து உலகிற்குக் காட்டியாயிற்று.
தர்மத்தின் தலையில் சூது இல்லை என்பதையும் உணர்த்தியாயிற்று.

நீறிட்டுக் கிடக்கின்றன நெருப்பின் முகவரிகள்
ஊதிச் செல்கிறது காலக்காற்று
காலநீட்சியில் நீளும் கோலங்களில்,
கண்ணீரின் உலர்ச்சியை எழுதியபடியே
பூமிக்கரியம் புலன்களை உலுக்கிறது.

முள்ளி வாய்க்காலின் ஓலங்கள்
எங்கள் மூச்சுக் காற்றைத் தவிர
அத்தனையையும் அள்ளிச் சென்று ஆறு மாதங்கள் கடந்தாயிற்று,
எனினும் அவலம் ஆறவில்லை, ஆற்றப்படவுமில்லை
முன்னரைக் காட்டிலும்,
மூச்சின் உணர்வில் வெம்மை அதிகரித்துக் கிடக்கிறது.

இன்னும் மயக்கம் கோர்த்து உருளும் உலகம்
ஊமையாய், செவிடாய், கூரிய பார்வையற்ற குருடாய்
விற்பனைக்கோ அடகு வைக்கவோ எதுவுமற்ற
எங்களைப் பார்க்கப் பஞ்சிப்படுகிறது.
இருக்கட்டும் இதுவும் பழகி விட்டது.

மீட்பின் தேடல் ஓயாதவரைக்கும்
நித்திய வாழ்விற்குள் விட்டொதுங்க முடியாது.
ஓசோவின் தத்துவம் போல் தொலைத்த இடத்தில்
தேடுவதற்கும் அனுமதியற்று அவலமுறினும்
உயிர்ப்பின் ஒலி மட்டும் உயர்வெய்தவே செய்கிறது.

காட்சி மாறி விட்டது.
தட்டாமாலை சுற்றிவிட்டு தொப்பென்று போட்டுவிடும் என்று
அன்றொருநாட் சொன்னதுபோல் சம்பவத் தொடர்கள்
ஆரம்பக் கோட்டுக்குள் ஆயத்தமாகி விட்டன.
எலுமிச்சை எடுத்து எல்லோரும் ஒரு முறை
உச்சந்தலைகளில் உரசிக் கொள்ளுங்கள்.
போதைக்கான மருத்துவம் அல்ல பித்தத்திற்கான வைத்தியம்.

முள்ளி வாய்க்காலின் ஓலங்கள் முகவரியற்றவையாகவும்,
வணிகம் பேசினாலே மனிதம் கணக்கெடுக்கப்படுவதாகியும்,
அன்பற்றுப் போய்க் கிடக்கிறது அகிலம்
இருக்கட்டும் பாடுகளே எம்மைப் பலப்படுத்தும்
பட்ட வடுக்களே எம்மை வளப்படுத்தும்.

வியாழன், 3 டிசம்பர், 2009

ஈழத்தமிழர்கள் நூற்றுக்கணக்கானவர்கள் சிறீலங்காவில் இருந்து தப்பி அரசியல் தஞ்சம் பெறுவதற்காக இந்தோனேசிய, கனடா கடற்பரப்புகளினூடாக நீண்ட தூர கடற்பயணத்தை மேற்கொண்டு இடை நடுவில் அவுஸ்திரேலிய, இந்தோனேசிய, கனடா குடிவரவு அதிகாரிகளினால் ஒரு சிக்கலான நிலைக்குள் தள்ளப்பட்டு பெரும் ஆபத்தில் சிக்கியுள்ளதை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்?


என்றென்றைக்கும் தமிழீழ விடுதலையின் மையமும் இயங்கு சக்தியும்பிரபாகரன் என்ற ஒற்றைச் சொல்தான்



முள்ளிவாய்க்கால் படுகொலைகளுக்கு பின்னர் சிக்கலடைந்து போயிருக்கும் ஈழவிடுதலைப் போராட்டத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்வதிலும் சர்வமயப்படுத்துவதிலும் எந்த அரசியல் வட்டத்திற்குள்ளும் சிக்காமல் தனித்துவமான முறையில் தமது பல்கலைக்கழக புலமைசார் துறையின் வழி மிகக் காத்திரமான பங்களிப்புக்களை நல்கி வரும் எட்வேட் ரமாநந்தன் வியன்னா பல்கலைக்கழகம்,பரணி கிருஸ்ணரஜனி பாரிஸ் பல்கலைக்கழகம், யாழினி ரவிச்சந்திரன் ஒக்ஸ்போட் பல்கலைக்கழகம், சித்ரலேகா துஸ்யந்தன் வியன்னா பல்கலைக்கழகம், பிரியதர்சினி சற்குணவடிவேல் பர்சிலோனா பல்கலைக்கழகம் ஆகியேர்களைக் கொண்ட ஆய்வாளர் குழு “ஈழம்ஈநியூஸ்” க்கு தந்த பிரத்தியேகமான நேர்காணல் இது.

என்றென்றைக்கும் தமிழீழ விடுதலையின் மையமும் இயங்கு சக்தியும்பிரபாகரன் என்ற ஒற்றைச் சொல்தான்
என்று தமது அண்மைய ஆய்வு ஒன்றில் வலியுறுத்தியிருக்கும் இவர்கள், அக்கருதுகோள் குறித்து இந் நேர்காணலில் மீண்டும் வலியுறுத்திப் பேசுவதுடன் அதை ஒரு இயக்கமாகவே நாம் முன்னெடுக்க வேண்டும் என்ற வேண்டுகோளையும் முன்வைக்கிறார்கள்.
புலிகளின் பின்னடைவுக்குப் பின்னர் தலைவர் பிரபாகரன் குறித்த எதிர்மறையான விமர்சனங்கள் கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கும் ஒரு விபரீதமான சூழலில் அக்கருத்துக்களை ஒற்றையான தட்டையான பன்முகப் பார்வையற்ற காழ்ப்புக்களும் குரோதங்களும் நிறைந்த சந்தர்ப்பவாத அரசியல் செய்பவர்களின் வெறும் உளறல்கள் என்று அவற்றைப் புறந்தள்ளும் இவ் ஆய்வாளர் குழு, தனி மனித வழிபாடு

தனிமனித அரசியல் என்பவற்றிற்கும் அப்பால் பிரபாகரன் என்ற பெயர் தமிழ்ச் சமூகத்தில் ஏற்படுத்தியிருக்கும் அதிர்வுகளை இந் நேர்காணலில் துல்லியமான உளவியல் வரைபடமாக வரைந்து காட்டுகிறார்கள்.

பிரபாகரன் தமிழச்சமூகத்திற்கிடையிலான உளவியல் வரைபடத்தை கிரமமாக உள்வாங்காத இது குறித்த புரிதலில்லாத எத்தகைய அரசியல் நடவடிக்கைகளும் ஈழவிடுதலையை சாத்தியமாக்காது என்பதுடன் அவை மக்களின் மனநிலையிலிருந்து சிந்தித்துத் தோற்றம் பெற்றவையாகவும் இருக்க முடியாது என்பது இவர்களின் மேலதிக வாதமாக இருக்கிறது.

இந் நேர்காணலில் இருந்து தமிழ்சமூகத்திற்குக் கிடைத்த முக்கியமான முடிவாக நாம் இவற்றை கருதுகிறோம். இதுவே இந் நேர்காணலை அர்த்தமுள்ளதாக்குகிறது.

முள்ளிவாய்க்கால் படுகொலைகளுக்குப் பின்னர் ஈழவிடுதலைப் போராட்டம் குறித்து உள்ளும் புறமுமாக பின்னப்பட்டுக்கொண்டிருக்கும் எண்ணற்ற கேள்விகளுக்கு தமது பாணியில் பதிலளித்துள்ளார்கள். இனி அவர்களுடனான நேர்காணல்

கேள்வி: சமகால நிகழ்வு ஒன்றுடன் இந்நேர்காணலை ஆரம்பிப்பது பொருத்தமாக இருக்கும் என்று எண்ணுகிறோம். அண்மையில் எமது ஈழத்தமிழர்கள் நூற்றுக்கணக்கானவர்கள் சிறீலங்காவில் இருந்து தப்பி அரசியல் தஞ்சம் பெறுவதற்காக இந்தோனேசிய, கனடா கடற்பரப்புகளினூடாக நீண்ட தூர கடற்பயணத்தை மேற்கொண்டு இடை நடுவில் அவுஸ்திரேலிய, இந்தோனேசிய, கனடா குடிவரவு அதிகாரிகளினால் ஒரு சிக்கலான நிலைக்குள் தள்ளப்பட்டு பெரும் ஆபத்தில் சிக்கியுள்ளதை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்?

நல்ல ஒரு கேள்வியைக் கேட்டிருக்கிறீர்கள். இதற்கான பதிலை நாம் ஒற்றையாக அணுக முடியாது. சட்ட விரோத குடியேற்ற வாசிகள் ஒரு நாட்டிற்குள் நுழையும் குடிவரவுப் பிரச்சினை அல்ல இது. அந்தந்த நாடுகள் அப்படி ஒரு தோற்றத்தை ஏற்படுத்தவும் இந்தப் பிரச்சினையை அந்த அடிப்படையிலேயே மட்டும் அணுகவும் தலைப்படுகின்றன.

இந்தப் பிரச்சினையின் பரிமாணமே வேறு என்பதை அவை புரிந்திருந்தும் அதை புரிய மறுக்கின்றன அல்லது புரியாதது மாதிரி நடக்க விரும்புகின்றன என்று சொல்லலாம். இவ்விரு நிகழ்வுகளின் கன பரிமாணத்தை நாம் கால இட வெளி சூழலில் வைத்து ஆராய்வதும் ஒன்றுதான் முள்ளிவாய்க்கால் படுகொலைகளுக்குப் பின்னான ஈழத்தமிழர் அரசியற் போக்கை ஆரய்வதும் ஒன்றுதான். ஏனெனில் இரு ஆய்வுகளும் ஏதோ ஒரு புள்ளியில் இடைவெட்டி ஒன்றாகப் பயணம் செய்யக்கூடியவை.

உலகின் இரு வேறு கடற்பரப்புக்களில் நடந்து கொண்டிருக்கிற பிரச்சினையாக இருந்த போதும் பிரச்சினையின் மையம் ஒன்றுதான். நீங்கள் உங்கள் கேள்வியில் இரு நிகழ்வுகளையும் இணைத்ததிலிருந்தே அதன் ஒற்றுமையை புரிந்து கொளள்ளலாம்.

ஆச்சரியப்படும் வகையில் மட்டுமல்ல அதிர்ச்சியூட்டும் வகையிலும் சம்பந்தப்பட்ட நாடுகளைச் சேர்ந்த சில ஊடகங்களாலும் சில அரச அதிகாரிகளினாலும் சட்ட விரோத குடியேற்றம் என்ற பதத்துடன் மேலதிகமாக “பயங்கரவாதிகள்” என்ற பதமும் சேர்த்து புழக்கத்தில் விடப்பட்டுள்ளது. இதுவே பிரச்சினையை பன்மைத்தன்மையாக்குகிறது.

ஏறத்தாழ கடந்த 30 ஆண்டுகளாக தொடர்ச்சியாக ஈழத்தமிழர்கள் தாயகத்திலிருந்து புலம் பெயர்ந்து பல்வேறு நாடுகளில் அரசியல்தஞ்சம் கேட்பது ஒன்றும் புதியகதை அல்ல. ஆனால் தற்போதைய நிகழ்வு முன்னெப்போதும் இல்லாதளவிற்கு சில வேறுபட்ட கூறுகளை கொண்டுள்ளது.
அதில் முக்கியமானது, “பயங்கரவாதம் தோற்கடிக்கப்பட்டு போர் முடிவடைந்து விட்டது” என்று சிறீலங்கா அரசு அறிவித்திருக்கிற ஒரு சூழலில் முன்னரிலும் பார்க்க அதிகளவிலானவர்கள் ஒன்று சேர்ந்து குழுக்களாக பல முனைகளினூடாக அரசியல் தஞ்சம் கோரியிருக்கிற நிகழ்வு.

இந்த செய்தியின் பின்னணியில் பல தெளிவான உண்மைகள் புதைந்திருக்கின்றன. போர் முடிவடைந்துவிட்டது என்ற சிறீலங்காவின் செய்தி செமத்தியாக அடிவாங்குகிற இடம் இது. அத்தோடு அந்தப் போரை அது எவ்வாறு முடிவுக்கு கொண்டு வந்தது என்ற உண்மையும் சேர்ந்து உறைக்கிற தளமும் இதுதான்.

யார் என்ன வியாக்கியானம் கூறினாலும் தஞ்சம் கோரியிருப்பவர்களுக்கு இருக்கிற ஒரே அடையாளம் “இனப்படுகொலையிலிருந்து தப்பியவர்கள்” என்பதுதான். நூற்றுக்கணக்கானவர்கள் ஒன்று சேர்ந்து குழுக்களாக பல முனைகளினூடாக அரசியல் தஞ்சம் கோரியிருக்கிற நிகழ்வு சொல்கிற மிகப் பெரிய உண்மை இது.

ஏனெனில் இனம், மொழி, நிலம், பண்பாடு என்ற அடிப்படையிலேயே படுகொலை நிகழ்த்தப்பட்டது. அந்தப் பேருண்மையை இரு வேறுகடற்பரப்புக்களில் நின்று உலகத்திற்கு உரத்து அறிவிக்கிறார்கள் என்றுதான் நாம் பொருள் கொள்ள வேண்டும்.
தமது அடையாள நிலத்தை இழந்தவர்களாக வாழ்வதற்கான நிலமற்றவர்களாக அவர்களது இருப்பு மாறியிருப்பதை அவர்களது கூட்டு அரசியல் தஞ்சம் அறிவிக்கிறது.

ஒரு பெரும்பான்மை இனம் அரச உரிமையை வைத்து இறையாண்மை என்ற பெயரில் ஒரு சிறுபான்மை இனத்தின் மீது நடத்திய அழித்தொழிப்பு இது. அங்கு நடந்தது உண்மையில் உயிர்களின் பலி அல்ல. தமிழ் என்ற பண்பாட்டு நிலம் பறிக்கப்பட்டது.

இனம், மொழி, நிலம், பண்பாடு என்ற அடையாளங்கள் அழிக்கப்பட்ட ஒரு குழுமம் தனது வேர்களைத் தேடி அல்லது தனது வேர்களைத் தக்கவைப்பதற்காக அந்த அழிநிலத்திலிருந்து தப்பிய ஒரு பயணம்தான் மேற்படி நிகழ்வுகளிலுள்ள முக்கிய கூறு.

அத்தோடு ஈழம் என்ற தேசம் குறித்த தாயகம், தேசியம், சுயநிர்ணயம் என்ற அரசியல் தத்துவார்த்த பொருண்மைகளை உலகிற்கு ஓங்கி அறிவிக்கிற ஒரு அரசியற் செய்றபாடாகவும் இது இருக்கிறது. யார் சொன்னது போராடும் இனம் ஆயுத ரீதியில் தோற்கடிக்கப்பட்டால் அது அடங்கிவிடும் அல்லது ஓய்ந்து விடும் என்று.

தன்னையறிமாலேயே அது தொடர்ந்து போராடிக்கொண்டேயிருக்கும். அதற்கு சாட்சிதான் மேற்படி நிகழ்வுகள். அவர்கள் தண்ணீரில் மிதந்தபடியே சிங்கள அரச பயங்கரவாதத்திற்கு எதிராக குரல்கொடுத்துக்கொண்டேயிருக்கிறார்கள். நாம் இதன் பின்னணிக்குள் இன்னும் ஆழமாகப் போவோம். ஏனெனில் இதன் பின்னணியில்தான் ஈழத்தமிழர்களின் அரசியல் எதிர்காலம் புதைந்திருக்கிறது.

முன்னையதை கழித்துவிட்டாலும் 2009 ம் ஆண்டு குறிப்பான மே மாதம் இறுதிவரையான முதல் ஐந்து மாதங்களில் ஏறத்தாழ 30,000 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளர்கள் என்று அனைத்துலக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அத்தோடு இவை இனப்படுகொலை என்பதையும் கருத்தளவில் எல்லோரும் ஏற்றுக்கொண்டுள்ளார்கள். கொல்லப்பட்டவர்கள் அனைவரும் இனம், மொழி, பண்பாடு என்பவற்றால் ஒரே அடையாளத்தை உடையவர்கள் என்பது இங்கு குறிப்பான கவனத்திற்குரியது.

அவர்கள் ஏன் கொல்லப்பட்டார்கள்? இதற்கான விடையில்தான் இந்த கூட்டு அரசியல் தஞ்சத்தின் அடிப்படை மட்டுமல்ல அவர்கள் சார்ந்துள்ள இனத்தின் அடையாளமும் அவலமும் புதைந்திருக்கிறது.

தாயகம், தேசியம், சுயநிர்ணயம் என்ற அரசியல் தத்துவார்த்த பிரச்சினைக்கும் அப்பால் இனம், மொழி, நிலம், பண்பாடு என்ற உள்ளார்ந்த அடிப்டையில் தமது சொந்த நிலத்தில் சுதந்திரமாக வாழ முற்பட்ட எத்தனித்த ஒரு குழுமத்தின் பிரச்சினையாகவே சிறீலங்காவின் இன முரண்பாட்டை கவனத்தில் கொள்ள வேண்டும் அல்லது அதன் ஆரம்ப புரிதல் அப்படித்தான் இருக்க வேண்டும். முள்ளிவாய்க்கால் படுகொலைகளை கவனமாக எதிர் கொள்ளும் ஒருவர் இதை சுலபமாக இனங்கண்டு கொள்ள முடியும்.

சிறீலங்காவில் தமிழர்கள் என்ற அடையாளத்தின்; அடிப்டையில் இப்போது தாயகம், தேசியம், சுயநிர்ணயம் என்ற அரசியல் தத்துவார்த்த சொல்லாடல்கள் மட்டுமல்ல இனம், மொழி, நிலம், பண்பாடு என்ற அடிப்படையே கேள்விக்குள்ளாக்கப்பட்டுவிட்டது.

ஏனெனில் நாம் முன்பே குறிப்பிட்டது போல் முள்ளிவாய்க்காலில் மனித உயிர்களுக்கும் அப்பால் இனம், மொழி, நிலம், பண்பாடு என்ற அடையாளங்கள் மீதான அழித்தொழிப்பே நடைபெற்றது.

இந்த அடையாளங்களை தாங்கியவர்களாக, அந்த அடையாளங்களை தக்க வைப்பதற்காக முன்னின்று போராடியவர்களுக்கு தோள்கொடுத்ததற்காக அந்த மக்கள் அந்த நிலத்தில் வைத்தே அழித்தொழிக்கப்பட்டார்கள்.

எஞ்சியவர்கள்தான் இன்று ஒன்று சேர்ந்து குழுக்களாக பல முனைகளினூடாக அரசியல் தஞ்சம் கோரத் தொடங்கியிருக்கிறார்கள். எனவே “இனப்படுகொலையிலிருந்து தப்பியவர்கள்” என்ற அடையாளத்துடன் இவர்களுக்கு சம்பந்தபட்ட நாடுகள் ஒரு கூட்டு அரசியல் தஞ்சத்தை வழங்க வேண்டும் என்று நாம் வீதியல்இறங்கி போராட்டம் நடத்த வேண்டும். குறிப்பாக; கனடா, அவுஸ்திரேலியா நாட்டிலுள்ள எமது மக்கள் உடனடியாக இந்தப் போராட்டத்தைத் தீவிரப்படுத்த வேண்டும்.

இது நூற்றுக்கணக்கானவர்களுக்கான அரசியல்; தஞ்சப் பிரச்சினை அல்ல. எமது அடையாளம் தொடர்பான பிரச்சினை. நாம் இனச்சுத்திகரிப்புக்குள்ளாகியிருக்கிறோம் என்பதை கவனப்படுத்துவதுடன் மௌனமாக உள்ள உலகத்தின் மனச்சாட்சிகளை உலுக்கும் நடவடிக்கை இது. எமது போராட்டத்தின் அடுத்த வடிவமும் இதுதான்.

இனம், மொழி, நிலம், பண்பாடு என்ற அடிப்படையில் அழித்தொழிப்பு நடைபெற்ற மண்ணில் அந்த அடையாளங்களுடன் எப்படி தொடர்ந்து வாழ முடியும்? அந்த அழித்தொழிப்பின் இலக்குகளாக நேரடி சாட்சிகளாக எத்தகைய மனநிலையில் அங்கு தங்கியிருக்க முடியும்? இத்தகைய அழித்தொழிப்பு இனி அங்கு நடைபெறாது என்பதற்கு யார் உத்தரவாதம்? அழித்தொழிப்பின் சூத்திரதாரிகள் தண்டிக்கப்பட்டார்களா? குறைந்தது எச்சரிக்கையாவது செய்யப்பட்டார்களா? பொது மன்னிப்பு என்று அறிவிக்கப்பட்டு சரணடயக்கூறிய அரசு இதுவரை ஒரு போராளியையாவது விடுதலை செய்ததா?

அவ்வளவு ஏன், புலிகளின் பணயக் கைதிகள் என்று விளிக்கபட்ட மக்கள் யாருடைய பணயக்கைதிகளாக முட்கம்பி வேலிக்குள் இப்போது கிடக்கிறார்கள்? இப்படி எண்ணற்ற கேள்விகளுக்கு சிறீலங்கா என்ற தேசத்தை இறையாண்மையுள்ள ஒரு தேசமாக அங்கீகரித்து அதன் போருக்கு துணை நின்ற கேடு கெட்ட உலகம் பதில் சொல்ல வேண்டும்.

அதன் பிற்பாடே குழுக்களாக தேசம் தேசமாக எம்மவர் தஞ்சம் கோருவது பற்றிய சலிப்பை கொட்ட வேண்டும்.இனப்படுகொலையும் இனச்சுத்திகரிப்பும் நடைபெற்ற நடைபெறுகிற தேசம் அது. சிறீலங்கா என்ற தேசத்தை பொறுத்து தமிழர்களுக்கு என்று தற்போது இருக்கிற அடையாளம் ஒன்று இனப்படுகொலைக்கு பலியானவர்கள் இரண்டு இனப்படுகொலையிலிருந்து தப்பியவர்கள் மூன்று தாயகத்தில் இன்னமும் இனச்சுத்திகரிப்புக்கு உள்ளாகிக்கொண்டிருப்பவர்கள்.

மொத்தத்தில் சிறீலங்கா என்ற தேசத்துடன் நாம் எமது தொடர்பை முற்றாகத் துண்டிக்க வேண்டும், இல்லையெனில் மீள முடியாத உளவியல் சிக்கலுக்குள் ஒரு இனம் முழுவதும் தள்ளப்படும் அபாயம் இருக்கிறது. இதை பிறகு ஒரு சந்தர்ப்பத்தில் ஆழமாக விபரிக்கிறோம். உங்கள் கேள்விக்கான பதில் என்ற அளவில் இதையும் நீங்கள் தெரிந்து கொள்வது நல்லது.

நாம் மீண்டும் வீதியில் இறங்க வேண்டிய நேரம் வந்துவிட்டது. இந்த அகதிகளின் பிரச்சினையை மையப் பிரச்சினையாக்கி நாம் போராட்டத்தை தீவிரப்படுத்துவதனூடாக எமது விடுதலைப் போராட்டத்தை வேறு ஒரு தளத்தை நோக்கி நகர்த்த முடியும். “இனப்படுகொலையிலிருந்து தப்பியவர்கள்” என்ற சொல்லாடலுடன் “கூட்டு அரசியல் தஞ்சம்” என்ற கருத்துருவாக்கத்தை மையப்படுத்துவதனூடாக தாயகத்தில் எமது இருப்பு தொடர்பான காத்திரமான சில செய்திகளை உலகுக்கு சொல்ல முடியும்.

நாம் இனி போராடவேண்டியது எதிரிகளுடன் அல்ல. இந்த மேற்குலகத்துடன்தான். ஜனநாயகம் பேசியே எம்மைக் கழுத்தறுத்தவர்கள் இவர்கள்தான். குறிப்பாக ஐக்கிய நாடுகள் சபை என்ற அமைப்புக்கெதிராக நாம் எமது கண்டனங்களை வீதியில் இறங்கி பதிவு செய்தேயாக வேண்டும்.; ஏனெனில் உண்மையான போர்க்குற்றவாளி ஐநா பொதுச்செயலர் பான்கிமூன்தான். உலக மகா யுத்தங்களின் பிற்பாடு பிரதானமாக இனப்படுகொலைகளை தடுத்து நிறுத்தவதற்காக உலக அரசுகளின் ஏகமனதான அங்கீகாரத்துடன் தொடங்கப்பட்ட ஒரு பொது அமைப்பு முள்ளிவாய்க்கால் படுகொலைகளை வேடிக்கை பார்த்ததுடன் இன்னும் சிறைப்பிடிக்கப்பட்டுள்ள மக்கள் தொடர்பாக காத்திரமான எந்த நடவடிக்கையும் எடுக்காமல் மௌனம் காப்பதை எந்த வகையில் சேர்ப்பது.

இனம், மொழி, நிலம், பண்பாடு; என்ற அடிப்படையில் எம்மை எமது நிலத்தில் வாழ விடுமாறு நாம் இப்போது உரிமையுடன் கேட்கக்கூடிய ஒரே இடம் ஐநா பொதுச் செயலரின் வாசஸ்தலம்தான். இல்லையேல் ஒட்டுமொத்த ஈழத்தமிழினமும் இனம், மொழி, நிலம், பண்பாடு என்ற அடிப்படையில் வாழக்கூடிய ஒரு இடத்தை நோக்கி ஒரு “கூட்டு அரசியல் தஞ்சத்தை” கோரி; நகரும் வேண்டுகோளை முன்வைக்க வேண்டியிருக்கும்.இது இந்த உலக ஒழுங்கின் சமநிலையில் ஒரு பெரும் தளம்பலை ஏற்படுத்தும் அபாயத்தை சுட்டிக்காட்டி நமது போராட்டத்தை தீவிரப்படுத்த வேண்டும்.

மூலம்
நன்றி ஈழம் செய்திகள்
http://www.eelamenews.com/?p=1711

புதன், 25 நவம்பர், 2009

பன்னூற்றாண்டுகளின் படிமக் கறைகளைப் பகுத்தாய்ந்து புறஞ் செய்த காலப் பிரவாகமே! வாழிய பல்லாண்டு.


சுயத்தை ஒடுக்கிய
எங்கள் சூரியத் திருவே
வல்லமை சுரக்கும்
வீரப்பெரும் வரலாறே
தாயக உள்ளொளி பெருக்கும்
தர்மத்தின் உறுதியே
உலகனைத்துமான தமிழினத்தின்
வாழ்வேந்தி வனையும் வல்லமையே
பாடுகிறேன் ஒரு பல்லாண்டு.

பன்னூற்றாண்டுகளின் படிமக்கறைகளைப்
பகுத்தாய்ந்து புறஞ்செய்த காலபிரவாகமே
வல்லரச வியூகங்களை
வலுவிழக்க வைத்த வல்வையின் வனப்பே
இன்றுங்கள் பிறந்த நாள்
ஏழு கடல்களும், ஐந்து கண்டங்களும்
அதிசயித்து நோக்கும் ஆதித்த கரிகாலரே

ஈழத்திரு நிலத்தின்
ஆணி வேர் அமைதி காக்கும் அதி
சாதனைப் பொழுது இது,
அர்த்தமற்றுப் போகாது.
ஈழம் என்ற சொல்லுக்குள்
இணைபிரியாக் காவியமே
இலக்கென்ற வடிவுக்குள்
கலக்கமில்லா ஓவியமே
யாலம் உனை அழிக்காது
சத்தியத்தின் புதல்வரே
தேயு நிலை சில நாட்தான்
தீய்த்தெழும் நின் திடமே

ஆன்ம நின் மௌனமே
அவணியைப் பேச வைக்கும்
அன்னை கை விலங்குடைத்து
அழகு நகை பூண வைக்கும்.
மேன்மை நின் செயலென்று
மேதினியே மனந்திறக்கும்
மானிடத்தின் தெய்வனென
மகிழ்ந்து புகழ் விருந்தளிக்கும்.

செண்பகச் சிறகிடுக்கில்
சிறுத்தையின் சிரிப்பு எழும்
செந்நிறக் கொடி பறக்க
செவ்வாகை மலர் சொரியும்
ஈழமணித் திருநாட்டில்
இந்த நிலை வந்துதிக்கும்
இறைமையுள உன்னாட்சி
அனைத்துலகும் அறம் அணைக்கும்.

வைகறைக்கு வாழ்த்துரைக்க
வயது தேவையில்லை.
சொல்லாட்சி குறைந்திடினும்
சோதிப்பிழம்பிற்கு
பல்லாண்டு பாடுதற்குப் பஞ்சம் வராது.

வல்லமை ஒளிரும்
வரலாற்றுக்குப் பிறந்தநாள்
வாழ்த்தெடுத்து வாய் மொழிந்தேன்

ஐம்பத்து ஐந்தின் அகவை
அய்யனே நின்தன் வாழ்வில்
மங்கலம் பொங்கிப் பொழிய
மண்மகள் மகிழ்வில் விரிய
பண்புடை சொந்தம் குவிய
பாவலர் சந்தம் கவிய
பாரிடை ஈழம் ஆண்டு
வாழ்க நீ பல்லாண்டு.