செவ்வாய், 21 அக்டோபர், 2008

கால்களுக்கு அடியில் முட்களின் விரிப்பு.... மெளனங்கள் கலைகின்றன - 2


கால்களுக்கு அடியில் முட்களின் விரிப்பு. அகற்ற நினைத்தல் பாவம் அல்ல.... காலக்கடமையை உணர்ந்து நிமிர்தல் கட்டாயம் ஒவ்வொரு பெண்ணுக்கும் தேவை. வாழ்க்கையின் ஒவ்வொரு விளிம்பிலும், ஈழப்பெண்களின் வாழ்வியல் உலகெங்கிலும் இல்லாத வேதனைகளைச் சுமந்ததாக உள்ள யதார்த்தநிலைகளைப் பேசத் தவறும் ஒவ்வொரு பெண்ணும் தன்னினத்தின் அழிவிற்கு தானும் உடந்தையாகிறாள் என்பதே உண்மை.


இச்சம்பவம் இரு தசமங்களுக்கு முந்தையகாலம்... பிற்பட்ட காலத்தில் தமிழ்ப்பெண்கள் என்ற நிலையில் எங்கள் பெண்கள் சந்தித்த வலிகளும் அவமானங்களும் ஏராளம். மலை நிகர்த்த பெண்மையின் துன்பத்தில் ஒரு மண்ணின் அளவே இப்பதிவு.
முட்டிய விழிகளும், முதல்வலியும்வெண்ணிலவும், விண்மீன்களும் வெட்கமின்றிப் பார்க்கக் கூரை ஆடையின்றி, அம்மணமாகவும், கரிய அழுக்குடனும் தங்கமண் தாம்பாளத்தில் என்வீடு. அப்பப்போ மேகங்கள் வடிக்கும் கண்ணீரில், வானம் பார்த்த என்னில்லம் இல்லாத ஒட்டடையையும், தன்மேல் படிந்திருக்கும் கரியையும் கழுவிக் கொள்ளும். எரிகாயங்கள் வடுக்களாக காலடியில் மேடுபள்ளமாக நவீன ஓவியங்கள்போல் சிந்தனைகள் பலவற்றைத் தூண்டும். அதே நேரம் மேகத்தின் கசிவை இந்தப்பள்ளங்கள் நான், நீ என்று போட்டிபோட்டு ஏந்தி ஜதியிடும். கதிரவனுக்குக் கோபம் வந்தால் பாதங்களைத் தொப்பளிக்கவே படைக்கப்பட்டதுபோல் நான் தவழ்ந்த அந்த உள்வீட்டுத் தரை சூரிய அடுப்பாக மாறிவிடும்.
ஒரு ஆறுதல் இன்னும் இடியாமல் வெடிப்புகளுடன் நிமிர்ந்து நிற்கும் பிளாட், கொஞ்சம் இயற்கையிடம் இருந்து எல்லா நேரமும் என்றில்லாவிடினும் பல சமயங்களில் பாதுகாப்புத்தரும் தேவதையாகத் இன்று வரைக்கும் திகழ்கிறது.
அன்றிரவு மட்டும் அந்தக் காலநிலைக் குழப்பம் அந்த பெருமழையைத் தோற்றுவிக்காது விட்டிருந்தால் என்னினத்தின் வலியை நான் முதன்முதலாக உணரும் காரணி வேறு ஏதாவதாக இருந்திருக்கும்.
எப்போதுமே வாழ்வில் ஏற்படும் முதல் அனுபவம் என்பது பசுமரத்தாணிபோல் மனக்கூட்டுக்குள் பதிந்துவிடும். இதுவும் அப்படித்தான்...
முதல் காதல், முதல் முத்தம் என்று இன்பியல் பக்கம் போவதற்கு முன் நிறையவே விடயங்களை இங்கு எழுத இருக்கிறது.

கிளுகிளுப்புக் கதைகளை வாசித்த பலர் இங்கு வாசிக்கக்கூடும். இவ்வனுபவப் பகிர்வில் கிளுகிளுப்புத் தேடவேண்டாம். பெண்மையின் பருவமாற்றங்கள்கூட இன்றைய தமிழீழப் பெண்களுக்கு எவ்வளவு சோதனையாக அமைகிறது என்பதற்கு ஒரு சாட்சியம் அவ்வளவுதான். இது அந்நாள் வலி. இந்நாளில் இதன் வடிவம், வலி எல்லாம் பேசப்படாப் பொருளாக ஒவ்வொருவருக்குள்ளும் ஆழப்புதையுண்டபடி....., எம்மினம் வாழ்விற்கான யாசிப்பையே பிரதானமாகக் கொண்டதாக நகர்கிறது.

ஆகாயம் பார்த்துக்கிடந்த என்வீட்டின்மேல், அந்த நடுச்சாமத்து மழை அனுமதியின்றி நுழைய நடுவீட்டில் குளம் ஒன்று தன்னை உருவமைக்க, அடங்கமாட்டேன் என்று நாலாபக்கமும் தண்ணீர் கட்டுடைத்துப் பாய்ந்தது, அப்பப்போ பாதுகாப்புத்தரும் பிளாட் பகுதியின் நிலமெல்லாம் புனல் விரிந்து பரவி வழிதேடி ஓடியது.
நான் படுத்திருந்த பாயை நனைத்து ஓடிய நீரில் மட்டும் செம்மை தன்னை கரைத்தோடி சற்றுத் தள்ளிப் படுத்திருந்த என் தாய், தந்தையையும் நனைத்து நகர்ந்தது. பூப்படைந்த இருநாள் பருவமகளாக அனுபவமில்லா அணிகளுடன் அந்த எரிந்தவீட்டின் ஓரத்தில் உறங்கிக்கொண்டிருந்த என்னை நனைத்த மழைநீர் என் பருவமாற்றத்தின் உதிரத்துளிகளைக் கரைத்து என் பெற்றேரை நனைத்த அந்தப் பொழுது, அவமானம் பிடுங்கித் தின்ன முட்டிய விழிகளுடன் முதன்முதல் என்னினத்தின் வாழ்வை எண்ணி என்னுள்ளம் முதல்வலி ஏந்தியது.

கருத்துகள் இல்லை: