செவ்வாய், 4 ஆகஸ்ட், 2009

நீங்கள் என்னதான் குத்துக்கரணம் போட்டாலும் எங்களின் தாயக மீட்பை ஆதிக்கக் கூப்பாடும் ஆலகால விடமும் பாதிக்க முடியாது.

இரண்டரை ஆண்டுகளுக்கு முன்னர் எழுதப்பட்ட வரிகள். இன்னும் முன்னிலும் அதிகமான இன ஒடுக்குமுறைக்கு உள்ளாக்கப்பட்டு, பட்டிகளுக்குள் முடக்கப்பட்டதான வாழ்வு???? வல்லாண்மைகளின் பெருவிருப்பு சிங்கள் இனவாத முகங்கொண்டுள்ளதை இன்றைய நாட்கள் உணர்த்தியபடியேதான் நகர்கின்றன. நீங்கள் என்னதான் குத்துக்கரணம் போட்டாலும் எங்களின் தாயக மீட்பை ஆதிக்கக் கூப்பாடும் ஆலகால விடமும் பாதிக்க முடியாது. பார்த்திருங்கள் மடுவினில் தேங்கும் தாயக மீட்பலை மலைகளைத் தகர்த்து எழும். நேற்றைய நாட்களின் இவ்வரிகளை மீண்டும் மீண்டும் மீட்பித்து எதுவரை நாங்கள் உலகிற்கு மதிப்பளித்தோம் என்பதை பறை சாற்றியபடியே தடுக்கும் சக்திகள் அனைத்தும் உடைப்போம். இது தாயை மீட்கும் யாகம் அணையாது.

Fri, 03/11/2006
அழைக்கின்றீர்கள்.... மதிப்பளிக்கிறோம்....
மனிதம் செத்திருக்கும் அனைவரிடமும்
இன்னும் மானுடத்தை எதிர்பார்த்தபடி....
மென்மேலும் எங்களுக்குள்
இன்னல்களைச் சுமந்தபடி....
கரங்களோடு எங்கள்...
கண்ணீரையும் கட்டுப்படுத்தி...
இன்னும் உங்களுக்கு மதிப்பளித்து வருகிறோம்.

எம் உறவு...
எம் வீடு...
எம் ஊர்...
எம் தேசம்..
எங்களுக்கானதை எம்மிடம் சேர்க்க
ஆவன செய்ய உங்களால் இயலுமா?

எங்களை நாங்களே காத்திடத் துணிந்ததை
பயங்கரவாதப் பட்டியலில் இடுகிறீர்!
நசியுண்ட எறும்பும் தனைக் காக்கக் கடிக்கும்
அது உங்கள் பார்வையில் பயங்கரவாதமா?

உயிர்வலி எங்களுக்கு...
உணர்வுகளைத் தூக்கிலிட்டு
எங்கள் சாவிற்கு...
எமனுக்கு வரவெழுத எமக்கென்ன தலைவிதியா?

மறுபடியும், மறுபடியும் மரணத்தின் ஓலம்தான்
மண்ணிடையே எமக்கான விதியாக்கப்படுகிறதே.

கண்ணிருந்தும் குருடான கதை உங்களதா?
உலக நாடுகளே!
உங்கள் எவராலும் விதி மாற்ற முடிந்ததா?
தடை போட்டீர்கள்..
காரணக் கதைகள் ஆயிரம் உரைத்தீர்கள்.
அல்லைப்பிட்டி, வங்காலை, வல்லிபுனம், சம்பூரென
எள்ளி நகைக்கிறதே உங்கள் காரணங்கள்
அவை உங்களுக்குப் புரிகிறதா?

வாழ்வுக்காய் எங்கள் போராட்டம்
கொடிய கந்தக நெடியிடையே எம் வாழ்வோட்டம்
புனர் வாழ்வும் முடக்கப்படும் பூமியிலே
ஏதிலிகளாய் எம் வாழ்வும் தொடரும்
புரிகிறதா?......
அல்லது புரியாமலே இன்னும்
உண்மையொளி காணாக் குகையில்
இருள் மூடிக் கிடக்கின்றீர்களா?

கிழக்கு முகம் கறுப்பதில்லை
காலதேவன் கிறுக்கலிலே
சூரியன் இருண்டதில்லை.
கோல விளக்கொளியில் கூறுகெட்ட வாழ்வெமதல்ல..
கந்தகப் பிழம்பிடையே.. களமாடும் புதல்வர்களைக்
கொண்டெழுந்ததே எமது வாழ்வு.

திசைவெளிகள் எங்கெனும் இசைவாக்கம் என்பது
எம்மினத்தின் அசையாத வாழ்வுக்கான தவம்.

உயிரெடுத்து உரம் தொடுத்த
எங்களின் தாயகத்து மண்மீட்பை...
ஆதிக்க கூப்பாடும், ஆலகால விடமும்
பாதிக்க முடியாது

ஆதலால்....
இன்னும் உங்களுக்கு மதிப்பளித்து வருகிறோம்.
உயிர் வலிகளை எடுத்துரைக்க...,
உங்களின் மானுட உயிர்ப்பை அளவெடுக்க..
மென்மேலும் எங்களுக்குள்
இன்னல்களைச் சுமந்தபடி....
கரங்களோடு எங்கள்...
கண்ணீரையும் கட்டுப்படுத்தி...
இன்னும் உங்களுக்கு மதிப்பளித்து வருகிறோம்.

இரண்டரை ஆண்டுகளுக்கு முன்னர் எழுதப்பட்ட வரிகள். இன்னும் முன்னிலும் அதிகமான இன ஒடுக்குமுறைக்கு உள்ளாக்கப்பட்டு, பட்டிகளுக்குள் முடக்கப்பட்டதான வாழ்வு???? வல்லாண்மைகளின் பெருவிருப்பு சிங்கள் இனவாத முகங்கொண்டுள்ளதை இன்றைய நாட்கள் உணர்த்தியபடியேதான் நகர்கின்றன. நீங்கள் என்னதான் குத்துக்கரணம் போட்டாலும் எங்களின் தாயக மீட்பை ஆதிக்கக் கூப்பாடும் ஆலகால விடமும் பாதிக்க முடியாது. பார்த்திருங்கள் மடுவினில் தேங்கும் தாயக மீட்பலை மலைகளைத் தகர்த்து எழும். நேற்றைய நாட்களின் இவ்வரிகளை மீண்டும் மீண்டும் மீட்பித்து எதுவரை நாங்கள் உலகிற்கு மதிப்பளித்தோம் என்பதை பறை சாற்றியபடியே தடுக்கும் சக்திகள் அனைத்தும் உடைப்போம். இது தாயை மீட்கும் யாகம் அணையாது.

2 கருத்துகள்:

Jawahar சொன்னது…

உங்கள் தலைப்பில் எனக்கொரு திருத்தம் கிடைத்தது. நன்றி.

குட்டிக் கரணம் என்பது உண்மையில் குத்துக் காரணம்தான் என்பது புரிகிறது. கையைக் குத்தி போடும் கரணம்.

உங்கள் தமிழுக்கு என் சிரந்தாழ்ந்த வணக்கம்.

http://kgjawarlal.wordpress.com

வல்வை சகாறா சொன்னது…

உங்கள் வரவிற்கும், பதிவிற்கும் நன்றி நண்பரே.
அநேகமாக நிறையவே பேச்சுவழக்குத் தமிழை எனது கவிதையின் பாவிப்பதுண்டு. பல சமயங்களில் அவை வாழும் பிரதேசம் சார்ந்த சொற்களாக இருக்கும்.