வியாழன், 20 ஆகஸ்ட், 2009

பொன்னள்ளிச் சொரியும் பெரிய தேவனே! உன்னை இனி நானே பாடுவேன்.கண்ணெதிரே கலையுமா கனவு?
மண்ணெனவே உதிருமா மனது?
நெஞ்சுக்குள்ளே கோடிட்ட உருவம்
ஒப்பேற முன்னரே உருகியா போகும்?
இருள் விலகமுன்னமே உருகி அழிந்திட
மெழுகுவர்த்தியா எங்கள் சுதந்திர வேட்கை?

இது காலச்சுழி
சுழற்சியில் சிக்குறுதல் இயல்பு. எனினும் சோரக்கூடாது.
சுழலின் வேகம் நீளாது திடீரென்று அடங்கும்.
தட்டாமாலை சுற்றிவிட்டு தொப்பென்று போட்டுவிடும்.
நம்பிக்கை இருந்தால் மட்டுமே நாம் பிழைக்க முடியும்.
மயக்கமின்றி கால்கள் நிலை கொள்ள வேண்டும்.
மனம் சோர்ந்தால் மயக்கம் மடியேறி மகுடியூதும்.
உறக்கம் உச்சந்தலையில் உட்கார்ந்து கொள்ளும்.

இன்றைய பொழுதுகள் எமக்கானவை.
ஊர்கூடி இழுத்த விடுதலைத்தேர்
முக்காற்சுற்று முடித்துவிட்டது.
சில அதிவிவேகிகள் ஆரம்பப் புள்ளிக்கு
பின்னோக்கி விட்டதென்று அதிவேகமாக அலம்புகின்றர்.
காது கொடுக்காதே.. கலங்கிப் புலம்புவாய்.

நம் கையில் வாழ்வு வசப்பட்டே ஆகவேண்டும்.
மாவீரத்தோள்கள் சுமந்த வரலாற்றை
முனை கூர்த்தி நகர்த்தியே தீரவேண்டும்.
ஆழக்கிணறு வெட்டி ஊற்றுவாயை அண்மித்துவிட்டு
உடல் நோகுதென்று உடைந்து போகக் கூடாது.
வெம்பிச் சோர்தல் வேதனையைத் தீர்க்காது.

என்ன இருக்கிறது?
எல்லாம் துடைத்தழித்து நகைக்கிறது பகைமுகம்.
உயிர்கூடு ஒன்றுதான் மீந்துபோய் உள்ளது.
அச்சப்பட்டதற்காய் அங்கெவரும் காப்பாற்றப்படவில்லை.
அடிமைகள் ஆக்கப்பட்டுள்ளர்.
உறவுகளைத் தினம் நினைத்து நீ உக்கி கிடப்பதனால்
உந்தி எழும் வல்லமையின் உறுதியை தொலைத்துள்ளாய்.
கண்ணுக்குத் தெரியாமல் பகை உன்னைக் கட்டிப்போட்டுளது.

மெய்யுரைத்துத் தீக்குளிக்கும் தைரியம் பெறு.
புலத்திற்குள் பொருந்திக் கொள்.
புலன் தெளிவுறு.
உன் புன்னகையைப் பறித்துப் புதைகுழியில் இட்டோர்க்கு
எண்ணிப்பார்க்காத கண்டத்தை உருவாக்கு.
கால எழுதியிடம் புதுக் கணக்கை திற.
ஊர் மனையேறியே உறங்குவதாய் சபதம் எடு.
ஏழ்புரவி ரதத்தினிலே எழும் தேவன்
பஞ்சபூதங்களாய் பலவழிகள் திறந்துள்ளான்.
அவன் ஆசி பெற்ற பெரும் யாகமிது.
அழிவுற்றுப் போகாது.

பொன்னள்ளிச் சொரியும் பெரியதேவனே!
உன்னை இனி நானே பாடுவேன்.
அன்னை தமிழ்கொண்டு உன்னைப் பண்செய்த
என் ஆசான் மீண்டுவந்து அடுத்தபாடல் செய்யும்வரை
உன்னை இனி நானே பாடுவேன்.
என்வேர் மடியைக் கிழிந்துவதம் செய்யும்
கொடும் பகையே உனை எதிர்க்க நானே கோலோச்சுவேன்.
விழுதனைத்தும் பிணைத்து, வேர்நிலத்தில் ஆழப்படர்த்தி,
மீண்டெழும் மிடுக்கை மிகைப்படுத்துவேன்.
புலம்பெயரிதான் இருப்பினும் என் பொல்லாப் பொறியின்
கூர் உனை பொசுக்கும்.

பொன்னள்ளிச் சொரியும் பெரியதேவனே!
உன்னை இனி நானே பாடுவேன்.
அன்னை தமிழ்கொண்டு உன்னைப் பண்செய்த
என் ஆசான் மீண்டுவந்து அடுத்தபாடல் செய்யும்வரை
உன்னை இனி நானே பாடுவேன்.

கருத்துகள் இல்லை: