வெள்ளி, 28 ஆகஸ்ட், 2009

மீண்டும் எழுச்சி பெறும் புலம்பெயர் தமிழினம்.(கனடா)










கனடா ரொரன்டோ நகரின் மத்தியில் 360 யூனிவேர்சிற்றி அவெனியு வீதியில் அமைந்திருக்கும் அமெரிக்கத் துணைத்தூதரகத்தின் முன்பாக 128 நாட்களைக் கடந்தும் தொடரும் கவனயீர்ப்புப் போராட்டம்.
கடந்த 128 நாட்களாக தமிழீழத்தில் சிறீலங்கா அரசின் இன அழிப்புக்கு உள்ளாக்கப்பட்டுவரும் தமிழினத்தைக் காக்கவும், வதைமுகாம்களுக்குள் அடைக்கப்பட்டு சித்ரவதைகளுக்கு உள்ளாக்கப்படும் 3 இலட்சம் தமிழ் மக்களை விடுவித்து அவரவர் வீடுகளில் மறுபடியும் மீளக் குடியமர்த்த ஆவன செய்யக் கோரியும், தமிழருக்கான உரிமைகளை நீதியான முறையில் கிடைப்பதற்கு அமெரிக்க அதிபர் ஒபாமாவை உதவக் கோரியும் தொடர்ந்து இக்கவனயீர்ப்பு நிகழ்த்தப்படுகிறது.
நாளாந்தம் காலை 8 மணிக்கு ஆரம்பமாகும் இக்கவனயீர்ப்பு மாலை 9 மணிக்கு சிறீலங்கா அரசினால் படுகொலை செய்யப்பட்ட அனைத்துத் தமிழ் மக்களுக்காக மெழுகுவர்த்தி ஏந்திப் பிரார்த்தனை செய்து நிறைவுபெறுகின்றது.

ஓகஸ்ட் 28 வெள்ளிக்கிழமை, இக்கவனயீர்ப்பு நிகழ்வானது 500இற்கு மேற்பட்ட மக்களுடன் மாலை 8 மணிக்கு ரொரன்டோ மாநகரின் மையப்பகுதியில் ஊர்வலமாக நகர்ந்து ஒரு மணி நேரத்திற்கு மேலாக யூனிவேர்சிற்றி அவெனியுவில் ஆரம்பித்த ஊர்வல நகர்வு கொலிச் வீதியூடாக யங் வீதியில் பயணித்து, குயின் வீதியில் வலது புறமாகத்திரும்பி யூனிவேர்சிற்றி அவெனியு வீதியை வந்தடைந்து சிறீலங்கா சிங்கள இனவாத அரசால் கொல்லப்பட்ட மக்களுக்கு மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செய்து நிறைவு பெற்றது. நாளாந்தம் தொடரும் இக்கவனயீர்ப்பில் பிற இனத்தவர்களும் கலந்து கொள்வது குறிப்பிடத்தக்கது. காலவரையின்றி இப்போராட்டம் தொடர்கிறது. சமீப காலமாக இப்போராட்டம் கூர்ப்படைந்து வருவது குறிப்பிடத்தக்கது.

திங்கள், 24 ஆகஸ்ட், 2009

குப்புறக் கிடந்தால் சுவாசமே சுமைதான்




படுக்கையில் கிடந்தபடி
பாதை கேட்காதே
எழு….. உடல் முறித்து,
பத்தடி நட.
பாதை தெரியும்.
குப்புறக் கிடந்தால்
சுவாசமே சுமைதான்.

திரும்பிப் பார்.
விடுதலைக்காக கடந்த
தணற்காடுகளும், சதுப்பு நிலங்களும்
பார்வையில் புலப்படும்.
தணற்காடுகளில் தீய்ந்தபோது
நெஞ்சம் வேகியது
சதுப்பு நிலங்களில் புதைந்தபோது
சலனம் ஆடியது.
மீள எழவில்லையா?

களத்திலேயே மீண்டெழுந்த
உனக்கு புலத்திலேன் தடுமாற்றம்?
போராட்டக்களம் மாறியிருக்கிறது.
இப்போது சூறாவளி அவ்வளவே.

ஒட்டுமொத்த இன அழிப்பை
உலகம் கணக்கெடுக்கிறது.
துயர் கொல்லுதென்று
நீ முடங்கிவிட்டால்
இழப்புகள் கூட
மௌனித்துப் போகும்.

அழுவதாகிலும்...
அம்பலத்தில் நின்று அழு.
இது உனக்கு மட்டுமான வலியல்ல
நம் இனத்திற்குத் திணிக்கப்பட்ட பெருநோ.

நீட்டிப் படுத்திருந்தால் நீதி கிடைக்காது.
எத்தனை பெரிய துயரில் இருக்க
இரக்கமில்லாமல் எழுதுகிறாய்
இழந்திருந்தாலே உனக்குத் தெரியுமென்பாய்.

முள்ளிவாய்க்காலில் மட்டுமா இழப்பு?
முள்ளு வேலிக்குள் தொடர்ந்தே செல்கிறது.
உருகும் விழிநீரில் நீ புதையுண்டால்
பெருகும் துயர் தீர்க்கப்
போராடுவது எப்படி?

விழி நீரை விரட்டு.
வேதனையை உரமாக்கு.
எழு தீயில் ஒளியேற்று.
ஓர்மத்தை நிறமாக்கு.
உயிருக்கு ஆணையிடு.
இவ்வளவும் போதும்.
உணர்வாய். நீயே வழிகாட்டி.

வியாழன், 20 ஆகஸ்ட், 2009

பொன்னள்ளிச் சொரியும் பெரிய தேவனே! உன்னை இனி நானே பாடுவேன்.



கண்ணெதிரே கலையுமா கனவு?
மண்ணெனவே உதிருமா மனது?
நெஞ்சுக்குள்ளே கோடிட்ட உருவம்
ஒப்பேற முன்னரே உருகியா போகும்?
இருள் விலகமுன்னமே உருகி அழிந்திட
மெழுகுவர்த்தியா எங்கள் சுதந்திர வேட்கை?

இது காலச்சுழி
சுழற்சியில் சிக்குறுதல் இயல்பு. எனினும் சோரக்கூடாது.
சுழலின் வேகம் நீளாது திடீரென்று அடங்கும்.
தட்டாமாலை சுற்றிவிட்டு தொப்பென்று போட்டுவிடும்.
நம்பிக்கை இருந்தால் மட்டுமே நாம் பிழைக்க முடியும்.
மயக்கமின்றி கால்கள் நிலை கொள்ள வேண்டும்.
மனம் சோர்ந்தால் மயக்கம் மடியேறி மகுடியூதும்.
உறக்கம் உச்சந்தலையில் உட்கார்ந்து கொள்ளும்.

இன்றைய பொழுதுகள் எமக்கானவை.
ஊர்கூடி இழுத்த விடுதலைத்தேர்
முக்காற்சுற்று முடித்துவிட்டது.
சில அதிவிவேகிகள் ஆரம்பப் புள்ளிக்கு
பின்னோக்கி விட்டதென்று அதிவேகமாக அலம்புகின்றர்.
காது கொடுக்காதே.. கலங்கிப் புலம்புவாய்.

நம் கையில் வாழ்வு வசப்பட்டே ஆகவேண்டும்.
மாவீரத்தோள்கள் சுமந்த வரலாற்றை
முனை கூர்த்தி நகர்த்தியே தீரவேண்டும்.
ஆழக்கிணறு வெட்டி ஊற்றுவாயை அண்மித்துவிட்டு
உடல் நோகுதென்று உடைந்து போகக் கூடாது.
வெம்பிச் சோர்தல் வேதனையைத் தீர்க்காது.

என்ன இருக்கிறது?
எல்லாம் துடைத்தழித்து நகைக்கிறது பகைமுகம்.
உயிர்கூடு ஒன்றுதான் மீந்துபோய் உள்ளது.
அச்சப்பட்டதற்காய் அங்கெவரும் காப்பாற்றப்படவில்லை.
அடிமைகள் ஆக்கப்பட்டுள்ளர்.
உறவுகளைத் தினம் நினைத்து நீ உக்கி கிடப்பதனால்
உந்தி எழும் வல்லமையின் உறுதியை தொலைத்துள்ளாய்.
கண்ணுக்குத் தெரியாமல் பகை உன்னைக் கட்டிப்போட்டுளது.

மெய்யுரைத்துத் தீக்குளிக்கும் தைரியம் பெறு.
புலத்திற்குள் பொருந்திக் கொள்.
புலன் தெளிவுறு.
உன் புன்னகையைப் பறித்துப் புதைகுழியில் இட்டோர்க்கு
எண்ணிப்பார்க்காத கண்டத்தை உருவாக்கு.
கால எழுதியிடம் புதுக் கணக்கை திற.
ஊர் மனையேறியே உறங்குவதாய் சபதம் எடு.
ஏழ்புரவி ரதத்தினிலே எழும் தேவன்
பஞ்சபூதங்களாய் பலவழிகள் திறந்துள்ளான்.
அவன் ஆசி பெற்ற பெரும் யாகமிது.
அழிவுற்றுப் போகாது.

பொன்னள்ளிச் சொரியும் பெரியதேவனே!
உன்னை இனி நானே பாடுவேன்.
அன்னை தமிழ்கொண்டு உன்னைப் பண்செய்த
என் ஆசான் மீண்டுவந்து அடுத்தபாடல் செய்யும்வரை
உன்னை இனி நானே பாடுவேன்.
என்வேர் மடியைக் கிழிந்துவதம் செய்யும்
கொடும் பகையே உனை எதிர்க்க நானே கோலோச்சுவேன்.
விழுதனைத்தும் பிணைத்து, வேர்நிலத்தில் ஆழப்படர்த்தி,
மீண்டெழும் மிடுக்கை மிகைப்படுத்துவேன்.
புலம்பெயரிதான் இருப்பினும் என் பொல்லாப் பொறியின்
கூர் உனை பொசுக்கும்.

பொன்னள்ளிச் சொரியும் பெரியதேவனே!
உன்னை இனி நானே பாடுவேன்.
அன்னை தமிழ்கொண்டு உன்னைப் பண்செய்த
என் ஆசான் மீண்டுவந்து அடுத்தபாடல் செய்யும்வரை
உன்னை இனி நானே பாடுவேன்.

செவ்வாய், 4 ஆகஸ்ட், 2009

நீங்கள் என்னதான் குத்துக்கரணம் போட்டாலும் எங்களின் தாயக மீட்பை ஆதிக்கக் கூப்பாடும் ஆலகால விடமும் பாதிக்க முடியாது.

இரண்டரை ஆண்டுகளுக்கு முன்னர் எழுதப்பட்ட வரிகள். இன்னும் முன்னிலும் அதிகமான இன ஒடுக்குமுறைக்கு உள்ளாக்கப்பட்டு, பட்டிகளுக்குள் முடக்கப்பட்டதான வாழ்வு???? வல்லாண்மைகளின் பெருவிருப்பு சிங்கள் இனவாத முகங்கொண்டுள்ளதை இன்றைய நாட்கள் உணர்த்தியபடியேதான் நகர்கின்றன. நீங்கள் என்னதான் குத்துக்கரணம் போட்டாலும் எங்களின் தாயக மீட்பை ஆதிக்கக் கூப்பாடும் ஆலகால விடமும் பாதிக்க முடியாது. பார்த்திருங்கள் மடுவினில் தேங்கும் தாயக மீட்பலை மலைகளைத் தகர்த்து எழும். நேற்றைய நாட்களின் இவ்வரிகளை மீண்டும் மீண்டும் மீட்பித்து எதுவரை நாங்கள் உலகிற்கு மதிப்பளித்தோம் என்பதை பறை சாற்றியபடியே தடுக்கும் சக்திகள் அனைத்தும் உடைப்போம். இது தாயை மீட்கும் யாகம் அணையாது.



Fri, 03/11/2006
அழைக்கின்றீர்கள்.... மதிப்பளிக்கிறோம்....
மனிதம் செத்திருக்கும் அனைவரிடமும்
இன்னும் மானுடத்தை எதிர்பார்த்தபடி....
மென்மேலும் எங்களுக்குள்
இன்னல்களைச் சுமந்தபடி....
கரங்களோடு எங்கள்...
கண்ணீரையும் கட்டுப்படுத்தி...
இன்னும் உங்களுக்கு மதிப்பளித்து வருகிறோம்.

எம் உறவு...
எம் வீடு...
எம் ஊர்...
எம் தேசம்..
எங்களுக்கானதை எம்மிடம் சேர்க்க
ஆவன செய்ய உங்களால் இயலுமா?

எங்களை நாங்களே காத்திடத் துணிந்ததை
பயங்கரவாதப் பட்டியலில் இடுகிறீர்!
நசியுண்ட எறும்பும் தனைக் காக்கக் கடிக்கும்
அது உங்கள் பார்வையில் பயங்கரவாதமா?

உயிர்வலி எங்களுக்கு...
உணர்வுகளைத் தூக்கிலிட்டு
எங்கள் சாவிற்கு...
எமனுக்கு வரவெழுத எமக்கென்ன தலைவிதியா?

மறுபடியும், மறுபடியும் மரணத்தின் ஓலம்தான்
மண்ணிடையே எமக்கான விதியாக்கப்படுகிறதே.

கண்ணிருந்தும் குருடான கதை உங்களதா?
உலக நாடுகளே!
உங்கள் எவராலும் விதி மாற்ற முடிந்ததா?
தடை போட்டீர்கள்..
காரணக் கதைகள் ஆயிரம் உரைத்தீர்கள்.
அல்லைப்பிட்டி, வங்காலை, வல்லிபுனம், சம்பூரென
எள்ளி நகைக்கிறதே உங்கள் காரணங்கள்
அவை உங்களுக்குப் புரிகிறதா?

வாழ்வுக்காய் எங்கள் போராட்டம்
கொடிய கந்தக நெடியிடையே எம் வாழ்வோட்டம்
புனர் வாழ்வும் முடக்கப்படும் பூமியிலே
ஏதிலிகளாய் எம் வாழ்வும் தொடரும்
புரிகிறதா?......
அல்லது புரியாமலே இன்னும்
உண்மையொளி காணாக் குகையில்
இருள் மூடிக் கிடக்கின்றீர்களா?

கிழக்கு முகம் கறுப்பதில்லை
காலதேவன் கிறுக்கலிலே
சூரியன் இருண்டதில்லை.
கோல விளக்கொளியில் கூறுகெட்ட வாழ்வெமதல்ல..
கந்தகப் பிழம்பிடையே.. களமாடும் புதல்வர்களைக்
கொண்டெழுந்ததே எமது வாழ்வு.

திசைவெளிகள் எங்கெனும் இசைவாக்கம் என்பது
எம்மினத்தின் அசையாத வாழ்வுக்கான தவம்.

உயிரெடுத்து உரம் தொடுத்த
எங்களின் தாயகத்து மண்மீட்பை...
ஆதிக்க கூப்பாடும், ஆலகால விடமும்
பாதிக்க முடியாது

ஆதலால்....
இன்னும் உங்களுக்கு மதிப்பளித்து வருகிறோம்.
உயிர் வலிகளை எடுத்துரைக்க...,
உங்களின் மானுட உயிர்ப்பை அளவெடுக்க..
மென்மேலும் எங்களுக்குள்
இன்னல்களைச் சுமந்தபடி....
கரங்களோடு எங்கள்...
கண்ணீரையும் கட்டுப்படுத்தி...
இன்னும் உங்களுக்கு மதிப்பளித்து வருகிறோம்.



இரண்டரை ஆண்டுகளுக்கு முன்னர் எழுதப்பட்ட வரிகள். இன்னும் முன்னிலும் அதிகமான இன ஒடுக்குமுறைக்கு உள்ளாக்கப்பட்டு, பட்டிகளுக்குள் முடக்கப்பட்டதான வாழ்வு???? வல்லாண்மைகளின் பெருவிருப்பு சிங்கள் இனவாத முகங்கொண்டுள்ளதை இன்றைய நாட்கள் உணர்த்தியபடியேதான் நகர்கின்றன. நீங்கள் என்னதான் குத்துக்கரணம் போட்டாலும் எங்களின் தாயக மீட்பை ஆதிக்கக் கூப்பாடும் ஆலகால விடமும் பாதிக்க முடியாது. பார்த்திருங்கள் மடுவினில் தேங்கும் தாயக மீட்பலை மலைகளைத் தகர்த்து எழும். நேற்றைய நாட்களின் இவ்வரிகளை மீண்டும் மீண்டும் மீட்பித்து எதுவரை நாங்கள் உலகிற்கு மதிப்பளித்தோம் என்பதை பறை சாற்றியபடியே தடுக்கும் சக்திகள் அனைத்தும் உடைப்போம். இது தாயை மீட்கும் யாகம் அணையாது.