சனி, 19 ஏப்ரல், 2008

உயிர்த்துளியின் ஓரத்தில்

மனப்பையில் வார்த்தைக் கோலங்கள் பொங்கி வழிந்து, உணர்வுத் தீயின்மேல் குதித்துத் தீய்ந்து கருகி மறைய, அவற்றில் பீனிக்ஸ்களாக தவிப்புகள் பிறப்பெடுக்கின்றன. நரம்புகளின் மூலை முடுக்கெல்லாம் தாகம் பிறக்கிறது.

கண்களை மூடிக் கொண்டேன். மெல்லிய இளங்காற்று என் மேனியைத் தழுவிட, புலன்களால் இனங்காணமுடியாத ஒரு அமானுஸ்ய உணர்வு என்னை ஆக்கிரமித்தது.கவிந்த இமைகளுக்குள் நிலைத்த விழிகளுக்குள் தவிப்பும், தாகமும் விரிந்தன. மூடிய கயல்களின் ஓரங்களில் மெல்லிய ஈரக்கசிவு.எங்கோ பசுமையைச் சுமந்தபடி என் வரவிற்காய் ஏங்கியபடி காத்திருப்பதாய், எனக்குள் உணர்த்தியபடியே, புன்னகையை வீசி என்னைத் தனக்குள் ஈர்த்தது பாசம்.

அக்கினித் தகிப்பில் உடலும், உள்ளமும் எரிந்தன. பனிக்கரங்கள் அணைத்துக் குளிர்ச்சி தரும் வெளிகளில் இருக்கும் என்னிருப்பின் உணர்வுகள் காலநிலைகளைத் தாண்டி முரண்பட்டுக் கிடக்கின்றன. அடையாளங் காணப்படாத பிணங்களைப் போன்று எண்ணங்கள் அவலமுறுகின்றன.

எல்லாமே என்னிடத்தில் இருக்கின்றன. மானிடத்தின் உணர்வுகள் அடங்கிய பெரும் படைப்பு நான். உலக வாழ்வியலின் கதம்பக் கோர்வை என்னுள் வியாபித்து வாசம் வீசுவதாக எனக்குள் ஒரு மிதப்பு. இருப்பினும் ஏதோ.... ஏதோ ஒன்று

அம்மா மடியில் முகம் புதைத்து எதற்காகவோ அழவேண்டும் போல் அடிக்கடி என்னுள் ஏக்கம் வளர்கிறது. அந்த மடிக்குத்தான் என்னைப் புரியும் என்பதுபோல் எனக்குள் ஒரு பட்டிமன்றம் ஒவ்வொரு நாழிகையும் காரசாரமாக நிகழ்ந்து கொண்டிருக்கிறது. ஏன் என்ற கேள்விக்கு என் எழுதுகோலாலும் பதில் சொல்ல முடியவில்லை. எப்போதுமே கம்பீரமாக நிமிர்ந்து கர்வத்தோடு என்னை நோக்கும் இந்த எழுதுகோலும் இன்று ஏனோ என்னைப் புரிந்து கொள்ளமுடியாமல் திண்டாடித் திண்டாடி பதிவிட இயலாமல் கனத்துப் போகிறது. மனதை வசீகரிக்கும் ரம்மியமான கனவுகளும் கடன்தர மறுக்கின்றன.

மனப்பையில் வார்த்தைக் கோலங்கள் பொங்கி வழிந்து, உணர்வுத் தீயின்மேல் குதித்துத் தீய்ந்து கருகி மறைய, அவற்றில் பீனிக்ஸ்களாக தவிப்புகள் பிறப்பெடுக்கின்றன. நரம்புகளின் மூலை முடுக்கெல்லாம் தாகம் பிறக்கிறது.

இது என்ன?...
என்மனதிற்குள் புதையுண்டு கிடக்கும் பிரமாண்டம் என் மூச்சின் வெளிகளை நிரவி வானளாவ வளர்கிறது.

என் அம்மா என்னை அழைக்கிறாள். நான் போக வேண்டும். அதோ அம்மா என்னை மறுபடியும், மறுபடியும் அழைத்துக் கொண்டிருக்கிறாள் நான் போக வேண்டும். ஐயோ!.... என் தாயின் குரல் ஏன் இவ்வளவு தீனமாக ஒலிக்கிறது?...

என் தாயின் குரலில் பெரு வலி தெரிகிறது. திடீரென்று முளைத்த தற்கால வலியாகத் தெரியவில்லையே... நீண்டகால ரணத்தின் ஒலியெழுப்பல் போலல்லவா படுகிறது.

இதென்ன?..... அண்டை அயலெலாம் உற்சாகப்படுத்த என் தாயை ஒரு கோரப்பிசாசு தன் பற்களினாலும், கோர நகங்களினாலும் காயப்படுத்தி, ஊனையும், உதிரத்தையும் சுவைத்துக் கொண்டிருக்கிறது. என்ன நடக்கிறது அங்கே?அம்மாவை ஏன் வதைக்கிறீர்கள்? வேதனையுடன் கதறுகிறேன். ஆ... அங்கே என் சகோதரன் நிற்கிறான்..... அவனாகிலும்..... சீ.... மானங்கெட்டுப் போனானே..... அன்னையின் துகிலுரிப்பில் அவனுக்கும் ஒரு பங்கா?...... மனதிற்குள் கோரப்பேயைக் காட்டிலும், அன்னை முலையில் எச்சில் பாலுண்ட கருவறைத் தோழன் கருகிப்போனான்.

எனக்குள் சீற்றம் பொங்கப் பொங்க கண்ணீரோடு கத்திக் கொண்டு என்னைச் சுமந்தவளை நோக்கி, கைகளை நீட்டி ஓடுகிறேன்.
ஆ....... குதிக்காலில் எங்கிருந்தோ வீசப்பட்ட கற்கள் தாக்க, நிலைகுலைந்து வீழ்ந்தேன் சுற்றும் பார்த்தேன். கவன்களைச் சுழற்றியபடி மனித முகமூடி அணிந்த மிருகங்கள் எக்காளமிட்டுச் சிரித்தன.

அம்மாவின் அழைப்பில் இப்போது சீற்றம் பொங்குகிறது.'வா.... மகவே!எழு!.... வா....மகவே!இது பேய் விரட்டும் நேரம் வா!.." என்று அவளின் குரலில் ஓங்காரம் ஒலிக்கிறது.

சித்திரைப் பறுவம் அம்மாவிற்கான நாள் என்று நோன்பின் விளக்கம் வானொலியில் ஒலிக்கிறது.

ஐயோ!.... வாதைகளின் மையத்திருந்து அம்மா என்னை அழைக்கிறாள். நான் போகவேண்டும்... நான் போகவேண்டும்.

'விழுதென்று என்னை வீசி எறியாது இழுத்து அரவணைத்து முந்தானைத் தொங்கலினால் முகம் திருத்தும் மனம் பெருத்த அன்னையடி நான் மாசுற்றுப் போவது எப்படி?அழுதிருக்கும் வேளையிதை அறியாது நிற்பேனோ?அன்னாய்! அணைத்துந்தன் வலி தீர்க்கும் ஓர் மகவாய்,உன் உயிர்த்துளியின் ஓரத்தில் நானிருப்பேன்."

2 கருத்துகள்:

sukan சொன்னது…

நிகழ் காலத்தின் வேதனை மனம் முழுக்க குவிந்து கிடக்கின்றது. அதை அள்ளி விதைத்திருக்கின்றீர்கள். வேதனைகளை மிஞ்சி கனவுகளில் சஞ்சரிக்கும் சுயநலமிக்க வாழ்வில் தாயை மறந்தவர்கள் ஏராளம். நினைவூட்டும் உங்கள் வரிகள் காலத்தின் தேவையும் கூட.

வல்வை சகாறா சொன்னது…

நன்றி தோழி,
தாயை மறப்பது என்பது எவராலும் இயலாது. இன்றைய அவசர உலகம் கொஞ்சம் தூசுபடியவைக்கிறது அவ்வளவுதான். ஒரு பத்து நிமிடம் கண்ணைமூடிக் கொண்டு அமைதியாக இருப்பதற்கு ஒருவருக்கு நேரம் கிடைக்கும் என்றால் நிச்சயமாக தாய் கண்ணுக்குத் தெரிவாள். உங்கள் வரவிற்கும் கருத்துப்பதிவிற்கும் மீண்டும் நன்றியை உரித்தாக்குகிறேன்