ஞாயிறு, 13 டிசம்பர், 2009

வணிகம் பேசினாலே மனிதம் பேசுவார்களா?

இற்றைக்கு இரண்டு ஆண்டுகள் முன்புவரை
ஒரு “தேசத்தின் குரல்” சர்வதேசத்தின்
செவிப்பரைகளில் மோதி மோதி
இந்து சமுத்திரத்தில்,
ஈழத்தமிழினத்தின் விழிகரித்த உப்புகடலில்
குருதி கொப்பளித்துக் கிடக்கும் ஈழத்தின் இருப்பை
உரைத்துரைத்து ஓய்ந்து போனது.

கண் மறைந்து போன கால நீட்சியில்
கற்றுக் கொண்டதும், கண்ணீர் விட்டதும்,
கனக்கும் இதயக்கூட்டின் கணக்கில் அடங்காமல்
நீண்டநெடும் பயணத்தில் இன்னும் தொடர்கிறது.

வேர் மடியின் தாகம் கொண்டு எத்தனையோ உன்னதங்களை,
வேதனையைச் சுமந்து சுமந்து உலகிற்குக் காட்டியாயிற்று.
தர்மத்தின் தலையில் சூது இல்லை என்பதையும் உணர்த்தியாயிற்று.

நீறிட்டுக் கிடக்கின்றன நெருப்பின் முகவரிகள்
ஊதிச் செல்கிறது காலக்காற்று
காலநீட்சியில் நீளும் கோலங்களில்,
கண்ணீரின் உலர்ச்சியை எழுதியபடியே
பூமிக்கரியம் புலன்களை உலுக்கிறது.

முள்ளி வாய்க்காலின் ஓலங்கள்
எங்கள் மூச்சுக் காற்றைத் தவிர
அத்தனையையும் அள்ளிச் சென்று ஆறு மாதங்கள் கடந்தாயிற்று,
எனினும் அவலம் ஆறவில்லை, ஆற்றப்படவுமில்லை
முன்னரைக் காட்டிலும்,
மூச்சின் உணர்வில் வெம்மை அதிகரித்துக் கிடக்கிறது.

இன்னும் மயக்கம் கோர்த்து உருளும் உலகம்
ஊமையாய், செவிடாய், கூரிய பார்வையற்ற குருடாய்
விற்பனைக்கோ அடகு வைக்கவோ எதுவுமற்ற
எங்களைப் பார்க்கப் பஞ்சிப்படுகிறது.
இருக்கட்டும் இதுவும் பழகி விட்டது.

மீட்பின் தேடல் ஓயாதவரைக்கும்
நித்திய வாழ்விற்குள் விட்டொதுங்க முடியாது.
ஓசோவின் தத்துவம் போல் தொலைத்த இடத்தில்
தேடுவதற்கும் அனுமதியற்று அவலமுறினும்
உயிர்ப்பின் ஒலி மட்டும் உயர்வெய்தவே செய்கிறது.

காட்சி மாறி விட்டது.
தட்டாமாலை சுற்றிவிட்டு தொப்பென்று போட்டுவிடும் என்று
அன்றொருநாட் சொன்னதுபோல் சம்பவத் தொடர்கள்
ஆரம்பக் கோட்டுக்குள் ஆயத்தமாகி விட்டன.
எலுமிச்சை எடுத்து எல்லோரும் ஒரு முறை
உச்சந்தலைகளில் உரசிக் கொள்ளுங்கள்.
போதைக்கான மருத்துவம் அல்ல பித்தத்திற்கான வைத்தியம்.

முள்ளி வாய்க்காலின் ஓலங்கள் முகவரியற்றவையாகவும்,
வணிகம் பேசினாலே மனிதம் கணக்கெடுக்கப்படுவதாகியும்,
அன்பற்றுப் போய்க் கிடக்கிறது அகிலம்
இருக்கட்டும் பாடுகளே எம்மைப் பலப்படுத்தும்
பட்ட வடுக்களே எம்மை வளப்படுத்தும்.

1 கருத்து:

வரவனையான் சொன்னது…

//இருக்கட்டும் பாடுகளே எம்மைப் பலப்படுத்தும்
பட்ட வடுக்களே எம்மை வளப்படுத்தும். //


muththirai varikaL