திங்கள், 13 ஜூலை, 2009

பந்தயக் குதிரைகள் ஓடிக் களைக்கட்டும். இரண்டு பரிகளில் கால்களைப் பரப்பிய ஒற்றைப் பாகன் இடறி விழட்டும் இல்லாவிடின் ஒரு புரவி தடம் மாறட்டும்.

வசந்தம் தாய்மண்ணைத் தழுவாமல் போகிறது.
வாய்கள் பல இருந்தும் மௌனத்தில் நோகின்றன.
எரிக்கும் நெருப்படக்கி இனமொன்று வேகிறது
எதுவரைக்கும் தான் முடியும்?
எழும்போது உலகம் தெளியும்.


வளவுக் குயில்கள் குரலிழந்து போயுளன.
வாசக் காற்றும் கந்தகத்துள் தோய்ந்துளது.
உப்புக்கடல் எழுந்த ஒப்பாரிப் பேரலைகள்
கொட்டிய மனித சாம்பலுடன் கரைந்துளன.

முற்றத்து மலர்களை முட்செடிகள் கிழித்துளன.
மூசிய பேய்க்காற்றில் ஊர்களெலாம் தீய்ந்துளன.
செத்தகூடுகள், சிதைந்த உறுப்புகள்
நச்சுக் காற்றினால் வீழ்த்திய மெய்களென
வல்லரக்கத் தனத்திற்கு வெள்ளோட்டம் முடிந்துளது.

எண்ணிப் பார்க்குமுன்னே ஏதேதோ நடந்துளன.
சொந்தமண் இப்போது சோகத்தில் தவித்துளது.
ஆறாப் பெருந்துயரில் அள்ளுண்ட பெருஞ்சனம்
பட்டிகளில் அடையுண்டு,…. மானுடம் மக்கி,
மண்தின்னக் கிடக்கின்றர்,


கந்தகப் பெருமழையில் கலங்காத பெருநெஞ்சுகள்
கந்தலில் நைந்து கசங்கிக் கிடக்கின்றன.
விடுதலைக்கு முரசறைந்த மானிட வாழ்வு
பேரரசுப் போட்டிகளில் புண்பட்டு உழல்கிறது.
ஒரு சொட்டு நீருக்காய் ஓர்மச் சினம் ஒறுத்து
உறவுக் கொடியெல்லாம் மெய் கூனித் தவிக்கின்றர்
நெஞ்சக் கூட்டறைக்குள் பொத்திவைத்த அத்தனையும்
பித்தச்சுனை வெடித்த எரிமலையில் கரிகின்றன.

ஐ.நா அம்பலத்தில் அம்மணமாய் ஆடியதில்
இந்தியப் பெருநாடே இறுதிச் சுற்றில் நிலைத்தது.

இவற்றிற்கெல்லாம் தீர்வெழுத திராணியற்றதான
இயலாமை நடிப்பில்
ஒஸ்கார் விருதை உலகமே பெற்றுளது.

மனித நேய ஆடை மதிப்பற்றுக் கிடக்கிறது.
இனி ஒரு விதி செய்தல் எமக்குரித்தாயுளது.

இனத்தைக் கருவறுத்தால்… ஈழம் பிறப்பற்றுப் போகுமோ?
அனைத்தும் இழந்திழந்தே அன்றும் வலுவுற்றோம்.
இனத்தை கருவறுத்தால் இன்னும் பெருக்கெடுப்போம்.



அகழான்கள் குடைந்தெடுத்தால்…
ஆடுகால் பூவரசும் அடிசெத்து போயிடுமோ?


விழுதுகள்
இறங்கும்.,
குடைந்த இடமெல்லாம் வேர்பரப்பும் வேகத்தில்
அகழான்கள் வெளியேறும்.,
இல்லை அடியினில் நசுங்குண்டு சாகும்.

இனத்தை அழிக்க துணைபோன கோட்டான்களுக்கு
இந்திர விழா முடியத்தானே இழவுகள் புரிய வரும்.
கனத்த பெரு வெளியின் கானலை நம்பி
இருக்கும் எச்சிலையும் இழுத்துத் துப்பட்டும்.

அறுபது ஆண்டுகளாய் பட்டதெல்லாம்
இணைத்து இன்னும் ஆறுமாதத்திற்காகினும்
அவலத்தைச் சுமந்துதான் ஆகவேண்டும்.

பந்தயக் குதிரைகள் ஓடிக் களைக்கட்டும்.
இரண்டு பரிகளில் கால்களைப் பரப்பிய
ஒற்றைப் பாகன் இடறி விழட்டும்
இல்லாவிடின்
ஒரு புரவி தடம் மாறட்டும்.

காட்சிகள் மாறுகின்ற வேளைக்காய்
இன்னும் கொஞ்சம் வலிகளில் மூழ்குவோம்.
புதிதென்றால் அல்லவா.......
நாங்கள்
பொலபொலவென்று அழுது தீர்க்க……
பழகி விட்டது.

2 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

rfhwh,,d;iwa epiyiar;nrhy;Yk; ey;y ftpij.xt;nthU thh;j;ijfSs;s mh;j;jq;fs; Kfj;jpy; miwfpd;whw;Nghy; ,Uf;fpd;wd.kw;wJ..,j;jifa tiyj;jsq;fis midtUk;
thrpf;fNtZk;.ehDk; gy $l;lhspfsplk; ,e;j tiygw;wp nrhy;ypAs;Nsd;.,d;Dk; vOJq;fs;.
“fUj;Jf;fs;jhd; rf;jpahf cUg;ngWk;” -,sk;gwit-

வல்வை சகாறா சொன்னது…

சகாறா, இன்றைய நிலையைச்சொல்லும் நல்ல கவிதை.ஒவ்வொரு வார்த்தைகளுள்ள அர்த்தங்கள் முகத்தில் அறைகின்றாற்போல் இருக்கின்றன.மற்றது. இத்தகைய வலைத்தளங்களை அனைவரும்
வாசிக்கவேணும். நானும் பல கூட்டாளிகளிடம் இந்த வலைபற்றி சொல்லியுள்ளேன். இன்னும் எழுதுங்கள்.
“கருத்துக்கள்தான் சக்தியாக உருப்பெறும்” -இளம்பறவை-


இளம்பறவை., உங்கள் வருகைக்கும், பதிவிற்கும், இவ்வலைப்பதிவை உங்கள் நண்பர்களுக்கு அறிமுகப்படுத்துவதற்கும் நன்றி உரைக்கிறேன்.