சனி, 8 நவம்பர், 2008

நீர் ஊற்றி நிறைத்தாலும், பாலூற்றும் ஒளி நிறைத்துப் பனிநிலவு அணைத்தாலும், கார் காற்று மேனியதைக் தழுவிக் குழைந்தாலும், அணையாது அணையாது எரிகிறது..என்னரும் மொழியே! எழில் நிறை கிளியே!
புன்னகை அழகே! பொதிகையின் அரசே!
விண்ணவர் தேவன் விரும்பும் தமிழே!
நின்னடி பணிந்தேன். தாயே!... என்னுளம் நுழைக.

முத்தாய்த் தாங்கி முன்னூறு நாட்சுமந்து
இத்தரையில் எனை ஈன்ற பெத்தவளை,

மெத்தை மடிவிரித்தென் தத்துநடை பார்த்து,
தள்ளாடி நான் விழுந்தால் தாங்கி இரசித்தவளை,

சித்தமெலாம் எனையாளும் சித்திரையின் நாயகியாம் உலக சக்தியவள் பெருந்தாயை,

நான் செத்தழிந்து போனாலும் என் சாம்பல்கூடத் தலைவணங்கும் மாவீரத் தோழர்களை,
பத்திரமாய் தொழுது,

எந்தன் தமிழுக்கு நிமிர்வு தந்த
தானைத் தலைவன் வழியதைச் சிரமேற்று,

உயிர்ப்பின் வலி உரைக்க,
எனை வனைந்த என்குருவிற்குத் தலைவணங்கி,

தாயின் மணிவயிற்று பசியென்னும் தீயணைக்க
சிறங்கை பொருள் கொடுக்கும் செந்தமிழ உறவுகளே!
சிரம் தாழ்த்தி வணங்குகிறேன்.

இது புதுவரவு.
கல்லி எடுக்கவும், களைகள் பிடுங்கவும்,
நன்னீர் பாய்ச்சி, நற்பயிர் வளர்க்கவும்
களத்து மேடு தேடிக் கால்கள் வந்துள்ளன.

கார் சூழ்ந்த பொழுதிடையே கவிவிளக்கு ஏற்றியுள்ளோம்.
ஒளி காட்டும் திசை நல்ல வழிகாட்டும் உணர்ந்திடுக.

ஏர் பூட்டி வந்துள்ளோம்.
விடுதலைத் தேரிழுக்க ஊர்கூட்ட வந்துள்ளோம்.

கார்காற்றில் தீ மூட்ட கவி நெருப்பேந்தி,
இக்களத்து மேட்டிடையே..
கண்ணீர் வைரங்களில் கனல் ஏற்றி வந்துள்ளோம்.

ஆர் ஆற்றுவார் எங்கள் ஆழ்மனதின் தீப்பிழம்பை?

நீர் ஊற்றி நிறைத்தாலும்,
பாலூற்றும் ஒளி நிறைத்துப் பனிநிலவு அணைத்தாலும்,
கார் காற்று மேனியதைக் தழுவிக் குழைந்தாலும்,
அணையாது அணையாது எரிகிறது என் தாய்மூச்சு.

எந்தையும் தாயும் கூடிய எம்மண்ணிலே
எத்தர்கள் நுழைந்தது எப்படி?

கந்தகம் தினம் தினம் காற்றிலே பூத்து
காலனை அழைத்தது எப்படி?

வந்தேறு குடியென்று வந்தவன் விரட்டிட
வேர் நொந்து போனது எப்படி?

அந்தரித்து அந்தரித்து அவலத்தைச் சுமந்து
அகிலத்தில் பரந்தது எப்படி?

வந்தரை ஏற்று விருந்தோம்பி நின்றதில்
வந்தது தந்தது வேதனை.

எந்தையர் விரட்டியே எம்நிலம் பிடித்திட
திணித்தனர் இனவாதத் தீதினை.

சிங்களத்தரசுகள் செந்தமிழ் தீய்த்ததில்
கந்தகம் விழுந்தது எம் கைகளில்.

நின்றாடும் துணிவின்றி நம் வட்டம் சிறுத்ததனால் அந்தரித்துலகினில் தலைவதாய் வாழ்வணை.

முடிந்ததா நம்மால்?....
வேர் பிடுங்கி எங்களை வேற்றுநிலம் நட்ட பின்பும்..
ஊர் நினைப்புதானே உள்ளுக்குள் எரிகிறது.

அன்னை திருமேனி அந்தரிக்க அந்தரிக்க
கண்ணை அயரவிட எண்ணங்கள் மறுக்கிறதே...

போர் மூசும் பெருங்காற்றில் ஊர்கிழித்து விழுகிறதாம்
ஒரு மூச்சில் நாற்பது செல்கள்.

கார் கிழித்து வான் வெளியில் கரணங்கள் போட்டு,
வண்டி பருத்தவரும், வாய் முகப்பு நீண்டவரும்
குந்தி எழும்பினாலே...
ஆழக் கிணறு வெட்டும் வேலை மிச்சமாம்.

நச்சரவம் ஒருபுறம்,
நாசத்திரவம் மறுபுறம்...
எத்தனை நாள் தாங்குவர் எம் உறவுகள்?

காட்டு வெளிகளிலே காஞ்சோண்டி செடியிடையே, நாயுருவி முத்தமிடும் நாணற்புதரிடையே,
பாறிச் சரியுதடா பாசத் தோள்கள்.

ஈரவயிற்றுள்ளே கோரப்பசி விழிதிறக்க,
பித்தச் சுனையிடையே எரிமலைகள் குமுறுதடா.

சேறெடுத்த மண்ணிடையே பாய் விரிக்க முடியுமா?
தோள் சாயும் இடந்தானே படுக்கையாய் கிடக்கிறது.

ஈரவிழிகளெல்லாம் இலக்கேந்திக் கிடக்கின்றன.
ஓரவிழி கசிய....
தூரத்து வெளிகளிலே துயர் துடைக்கும் உறவுண்டு எனும் பாரிய நினைவோடு உயிர் வலிக்க நிமிர்கின்றன.

ஓரவிழி கசிகிறதா?
ஈரக்குலை அசைய உள்ளிழுக்கும் மூச்சில்
ஆழத்து அகம் விரித்து அழுகை எழுகிறதா?

உறவுக் கொடியெல்லாம் ஓடிவந்து அணைப்போமென்று ஊர் போகும் காற்றிடையே உறுதி மொழி சொல்லிவிட பாவி மனம் கிடந்து பாடாய் படுகிறது.

வாருங்கள்.....
ஆவி துடிக்கும் இக்கவி கேட்டு தாவி உறவெல்லாம் நாமுள்ளோம், நாமுள்ளோம் என்றுரைத்தால் போதும்.
எம்மினம்.... போரின் அனலிடையே வேகாது.
விதியென்று சாகாது.

எண்திக்கு உறவுகளும் வேர் மடிக்கு நீர் பாய்ச்சும்
எனும் வீச்சில் மூசியெழும்.

தற்காப்பு நிலையென்று உட்கார்ந்த நிலை உடைத்து
உக்கிர மூச்செடுத்து உலைக்களத்தில் நிமிரும்.

படலைக்குள் நின்றாடும் யுத்தச் சாத்தானைப்
பந்தாடிக் காலிடையே பிழியும்.

ஊர் போகும் காற்றிடையே.....
'நாமுள்ளோம் அஞ்சற்க.. நாமுள்ளோம் அஞ்சற்க' எனும் உறுதி மொழி சொல்ல... உரத்து கூறுக.
நாமுள்ளோம் அஞ்சற்க..... நாமுள்ளோம் அஞ்சற்க.

4 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

md;Gld; ty;it rfhwhTf;F kpf ed;whf ,Uf;fpwJ cq;fspd; vOj;Jf;fs;.ngUikahfTk; ,Uf;fpwJ.vq;fs; ty;itapd; cg;Gf;fhw;Wf;Fs;shfTk; miyapd; rj;jj;Jf;Fs;shfTk; cq;fspd; tupfis ghh;f;fKbfpwJ..urpf;f KbfpwJ.. ,d;Dk; vOJq;fs;… r.r.Kj;J

வல்வை சகாறா சொன்னது…

எப்புக்காற்றுக்குள்ளாகவும் , அலையின் சத்தத்திற்குள்ளாகவும் பயணித்து உங்கள் பார்வையில் பட்டிருக்கின்றேன். நன்றி தோழரே.

உங்கள் வருகை ஊர்மண்ணில் கால் பதித்தது போல் உவகை தருகிறது.

வல்வை சகாறா சொன்னது…

உப்புக்காற்றுக்குள்ளாகவும் , அலையின் சத்தத்திற்குள்ளாகவும் பயணித்து உங்கள் பார்வையில் பட்டிருக்கின்றேன். நன்றி தோழரே.

உங்கள் வருகை ஊர்மண்ணில் கால் பதித்தது போல் உவகை தருகிறது.

தமிழ் மதுரம் சொன்னது…

உங்கள் கவிதைகளில் சோகத்தின் வலிகள் தெரிகின்றன,.. படிக்கும் போதே மனதிற்குக் கஸ்ரமாக இருக்கின்றது. யதார்த்தம் நிரம்பிய வரிகள். உங்களால் முடிந்தால் இதனை அப்படியே வன்னிப் படுகொலைகள் தளத்தில் தற்போது இணைக்க முடியுமா???