வெள்ளி, 12 ஜூன், 2009

யார் செய்த சூழ்ச்சி இது?




யார் செய்த சூழ்ச்சி இது?
ஐ. நா சேவகரின் அரியணைத் துரோகமா?
அயல்நாட்டு வல்லரசின் ஆணவ குரோதமா?
தமிழர் கூட்டத்தின் தறுதலைகள் விரோதமா?
தவறிழைத்து விட்டது நோர்வேயின் ஆட்டமா?

ஆலமரம் ஒன்று அடிசாய்ந்து போனது
பாழும் சேதி காதில் பாதரசம் வார்த்தது.
பல்லாயிரம் உயிர் தின்று பெருங்கூட்டு வென்றது.
பணிந்த புலி உயிரறுப்பில் பாரதமும் நின்றது

நந்திக் கடலோரம் மனித நேயம் நொந்தது.
நடேசன் என்ற எங்கள் சாந்த நிலா வெந்தது.
வல்லரசுச் சதிகள் எங்கள் வாழ்வள்ளித் தின்றது.
வெள்ளரசுப் புதல்வரிடம் வெள்ளைக் கொடி தோற்றது.

ஐ.நாவின் அரியணையில் நீதி செத்துப் போனது.
அம்பலத்தில் ஏற்றி வைத்து சாந்தநிலா பறிபோனது.
சொல்நெறிகள் பிறழ்ந்து சூதும், தீதும் வென்றன.
முள்ளி வாய்க்கால் கொள்ளிடத்தில் மூச்சுநின்று போனது.

மானிடத் திருபோர்த்திய மாவரக்கர் கூட்டத்தின் முன்
வெள்ளைக் கொடி பிடித்தீர்களே? வெந்தது எம் இதயமய்யா.
மண்ணளவு கூட போர் மரபு அறியாத மாக்களிடா..
மாவீரர்களே! நீங்கள் பணிந்தீர்கள்?

கள்ளநோக்கோடு கரவேந்திக் கிடக்கின்ற
பாரதப் பேய்களிடமா பணிதற்கு பாதை கேட்டீர்கள்?
வல்லமை சுமந்த எம் வாழ்வுக்குக் குழி பறித்த
நோர்வே கொல்லனிடமா இனத்தைக் காக்கவென
உமையழிக்கும் வழி கேட்டீர்கள்?

ஐ.நா தலைமை நம்பி முதன்மை செயலரை நம்பி
ஆயுதத்தை மௌனித்து அழிக்கப்பட்டு விட்டீர்களே!
அய்யா...
நம்பி மெய்யற்ற உலகிடம் மெய்யழிந்து போனீர்களே.

உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசும்
பொல்லாத உலகிடமா
இல்லாத மானிடத்தை இருப்பதாய் தோற்றீர்கள்?

உங்கள் உயிர்களை உவிந்து குடித்தபின்னும்…
அடங்காத சிங்களத்தின் வதைகளிலே
வெந்து சாகுதய்யா வீரத்தின் குடிகளெல்லாம்.

அல்லக்கை நாடாகி அனைத்துலகும்
சிங்களச் செக்கனின் சீரடியைத் தடவுதய்யா.
நொந்து கிடக்கிறோம்.
நோய் கொண்டு துடிக்கிறோம்.

இந்த வலி தீராது.
சொந்த நிலம் மீட்கும்வரை சொர்க்க வாசல் திறக்காது.
நந்திக் கடலோரம் மூச்சடக்கிச் செத்தோரின்
அந்தரத்து ஆத்மாக்கள் சிந்தையிலே வாழும்வரை
இந்த வலி தீராது.

வெள்ளைக் கொடி எங்கள் வேதனையைத் தீர்க்கவில்லை.
மௌனத்தின் அர்த்தங்கள் மாக்களுக்குப் புரியவில்லை.
கொள்ளை நோய் வந்ததாய் எம் குறி கெட்டுப்போகாது.
கொடும் பகையை உடைத்து மண்ணை மீட்கும் வரை ஓயாது.

நந்திக்கடலோரம் வந்திறங்கி நிற்போரே!
நலமெடுத்து அனுப்பி வைக்கும் நாள் வரும்.
அதுவரை…….,

நாம் ஓயும் காலமல்ல…
நாம் ஓயப்போவதில்லை.
மானுடத்தின் கண் திறக்க மாபெரும் யாகம் செய்வோம்.
புன்னரி நாய்கள் வந்து புலி அழிக்க முடியாதென்று - எதிரி
புற்றெடுத்து நோகும் வரை புலமிருந்தும் இருப்புரைப்போம்.

காலப் பெருவெளிகள் கதைகள் நூறு புனையலாம்
கலங்காப் பெருமனமும் கதறி அழுது சோரலாம்
ஸ்தூல உடல் வாதையுற தேவ உயிர் போகலாம்
அணையாப் பெருவிளக்கின் சோதி கூட மாயலாம்.

நாம் ஓயும் காலமல்ல
நாம் ஓயப் போவதில்லை.
புன்னரி நாய்கள் வந்து புலி அழிக்க முடியாதென்று - எதிரி
புற்றெடுத்து நோகும் வரை புலமிருந்தும் இருப்புரைப்போம்.

ஞாயிறு, 31 மே, 2009

ஒளியூட்டுங்கள் முடியாவிட்டால் எங்கள் மூச்சுக்கு முடிவுரை தாருங்கள்.

கண்ணீர் பெருக்கெடுக்க,
உப்புக் காற்றின் உறவோடு தனித்தபடி,
கூப்பிடு தொலைவில்த்தானே…
எம்தேசம் கும்மிருட்டில் கிடக்கிறது.

ஆற்ற ஒரு நாதியின்றி, – எம்மினத்தின்
அவலத்தைத் தேற்ற ஒரு தேசமின்றி,
அம்மா!.......
உன் கையணைக்கும் தூரத்திலல்லவா…
எம்பூமி காயம்பட்டுச் சிதைகிறது.

ஈழம் என்ற பொன்பூத்த பூமியிலே பாரம்பரியம் சிதைக்கப்பட்டும், பண்பாடு ஒடுக்கப்பட்டும், மானுட வாழ்வின் சுயங்கள் மறுக்கப்பட்டதுமாக எங்கள் வாழ்வு கேட்பாரற்று, இனவாதியரின் கால்களுக்கிடையில் நசுக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. எங்கள் மூதாதையர் நிலங்களின் வளங்களைச் சுருட்ட வேற்று நாடுகள் எல்லாம் போட்டி போட்டுக் கொண்டு எங்களை ஒடுக்கும் இனவாதியருக்கு ஆயுத தானமும், இராணுவ தானமும் வழங்கி ஈழத்தமிழினம் என்ற ஒன்றையே இல்லாதொழிக்கும் மாபாதகச் செயலுக்குக் கண்களை மூடிக் கொண்டு துணை போயுள்ளன.

மானுட மெய்க்கு மரணதேவன் மாலையிட்டால் ஆறடி நிலம் வேண்டும். எரியூட்டுவதென்றாலும் நெஞ்சாங்கட்டை வேண்டும். எங்களுக்கான சாவுகள் எல்லாம் ஆறடி நிலத்தையோ அல்லது தீயெரியும் போது சாந்தப்படுத்தும் நெஞ்சாங்கட்டையையோ வேண்டுவதில்லை. எங்கள் உறவுகளின் மரணங்களுக்குப் பின்னான நிகழ்வென்பது சிதறிக் கிடக்கும் உடலின் பாகங்களை கூட்டி அள்ளிப் பொதியாக்கி நெருப்பிடுவதாகவே உள்ளது. அதுவும் பல சமயங்களில் உயிரற்ற சடலத்தின் பாகங்களை குவித்து அள்ளக் கூட வழியற்று, சிங்கள அரக்கர்களின் எறிகணைகளில் இருந்தும் , விமானக் கொத்தணிக்குண்டு வீச்சுகளில் இருந்தும் தப்பிக்க உயிர் காவி ஓடுவது நேற்றாகி இன்று வதைமுகாம்களுக்குள் வாயெடுத்து அழுவதற்கும் சக்தியற்று நடைபிணங்களாய், உயிரே சுமையாகி செத்தொழியும் வழியற்று மந்தைகளிலும் இழிவான கட்டாய வாழ்நிலைக்குள் காலவரையின்றித் தள்ளப்பட்டுள்ளோம். இப்போது தன்னும் எங்கள் வாழ்வுக்கு ஒளியூட்டுங்கள் முடியாவிட்டால் எங்கள் மூச்சுக்கு முடிவுரை தாருங்கள். போதும் தமிழராய் பிறந்து மனிதராய் வாழும் உரிமைகூட அற்று மறுக்கப்பட்டதாய் வாழ்வதிலும் சாவுமேல்.

தெற்கிருந்து வந்து உங்கள் மூச்சுத் தொடும் காற்றும், கந்தகத்திற்கு இரையாகிப்போன எங்கள் உறவுகளின் உயிர் கலந்தே உங்களை வந்தடையும். தமிழக உறவுகளே தாய்மைக் கண்களைத் திறந்து பாருங்கள் அந்தக் காற்றில் எங்கள் மரண ஓலங்களும், கடைசிச் சுவாசங்களும் தென்படும். எங்கள் வேதனைக் கூப்பாடுகளின் ஒலியை உங்கள் தாய்மைச் சிந்தை தள்ளி ஒதுக்காது என்ற பெருநம்பிக்கை சுமந்தே இந்தக் காகித வெளியில் எங்கள் கண்ணீரின் காயாத இரணங்களை தாய்ப்பசுவை நாடி அழும் கன்றின் கேவல்களாக்கியுள்ளோம்.

ஈரக்குலை பிழிய உயிர் இன்னும் துடிக்கிறது
காரணம் பலவுண்டு கடந்த காலம் நகைக்கிறது
பூரணப் பிரசவமே வேண்டும் எங்கள் வலிகளுக்கு
புன்னகையைக் கடனாக புதுப்பிக்க முடியாது.

தமிழக உறவுகளே!
இன்னும் கொஞ்ச நம்பிக்கை உங்கள் மேல் உள்ளது. இழப்பின் துயரில் வெம்மையுற்றிருக்கும் எங்களுக்கு உங்கள் இயலாமை காண மனதிற்குள் சினம் வெகுண்டெழுகிறது. தொப்புள் கொடி உறவென்பதெல்லாம் ஒடுக்கப்பட்ட உணர்வுகளுக்கு உரியனவாக போய்விட்டனவா?

புதன், 22 ஏப்ரல், 2009

எங்கள் முகாரிகளே.. முரசுகளாக மாறும்.


மௌனித்துக் கொண்டவர்களே!
இனிமேல் மனிதத்தைப்பற்றிப் பேசாதீர்கள்.
பேசினால் உங்கள் கருத்தைக் காவிவரும் மொழி களங்கப்பட்டுவிடும்.

எட்ட நின்று வேடிக்கை பார்த்துவிட்டு,
ஆதாயம் உண்டென்றால் இனவாத அரசின் செயலை ஆதரித்து,
இந்த இனஅழிப்பிற்கு,
'பயங்கரவாதத்திற்கு எதிரான போர்' என்று
முத்திரை குத்திவிட்டு முறுவலித்துக் கொள்ளுங்கள்.

இப்போது முகாரிகள் எங்கள் தேசியமொழியாகிக் கிடக்கிறது.

வலியனை வாழ்த்துவது வழமையானதுதான்...

நாங்கள்தான் முட்டாள்கள் போலும்.
எங்கள் ஒப்பாரிகள்...
உங்கள் செவிப்பறையில் மோத மானிடத் துடிப்புக் கொள்வீர்கள் என்று நம்பி,
ஏமாந்து கொண்டிருக்கிறோம்.

எங்கள் பிள்ளையர்தான் எங்கள் வல்லமைகள் என்பதை சில சமயங்களில்...
பிறழ்வுக்கு உள்ளாக்கிவிடும் தவறைச் செய்கிறோம்

தன்கையே தனக்குதவி எனும் இனம்
பிறன் காலடியில் உயிர்வாழ, கையேந்த சபிக்கப்பட்டது எப்படி?

காலங்காலமாக வாழ்ந்த மண்ணில்,
எத்தனை காலமாக ஏதிலிகளாகக்கப்பட்டு,
இனஒடுக்குமுறைக்கு உள்ளாக்கப்பட்டு சிறுகச் சிறுக சீரழிக்கப்பட்டோம்.

எவரேனும் எங்கள் வாழ்வைப்பற்றிக் கவலையுற்றுக் குரல் தந்தீர்களா?
இல்லையே....
உங்கள் நாட்டில் நீங்கள் இன்னொரு இனத்தால் ஒடுக்கப்படுகிறீர்கள் என்று
அறியவில்லை என்று எங்கள் காதுகளில் பூச்சுத்தாதீர்கள்;.

இப்போது நாளாந்தம் எம்மண்ணில்,
துடிக்கத் துடிக்க சாவணைக்கும் உறவுகளின் எண்ணிக்கையை,
ஏதோ உணவுப் பயிருக்கு தீங்கு செய்யும்
பூச்சி, புழுக்களைக் கொல்லும் கணக்கில் போட்டுவிட்டதுபோல்,
துளியும் மனவருத்தமின்றி மெத்தனமாக கதைக்கிறீர்களே தவிர,

அதிலும் கொஞ்சம் நிவாரணப்பணம் தந்துதவ நினைக்கிறீர்களே அன்றி,
நாளாந்தச் சாவுகளையும்,
கைகால் இழப்புகளையும்,
மனநலம் குன்றுவதையும்....
உடனடியாக நிறுத்தப்படவேண்டும் என்று
யாரும் அறைகூவல் செய்யாமல் மழுப்புகிறீர்கள்.

அப்படியாயின்,
எங்கள் தாயக மண்ணில் நடைபெறும் இனஅழிப்பு என்பதை
நீங்கள் எல்லோரும் மௌனத்தின் மூலம் அங்கீகரிக்கின்றீர்களா?

அனைத்துலகமே! போதும்..
உங்கள் மனித காருண்யத்தை நன்றாக உணர்ந்து கொண்டவர்கள்
ஈழத்தமிழர்களாகத்தான் இருக்கமுடியும்.

எங்களுக்கான தொப்புள் கொடி உறவுகள்தான்,
எமக்காக தம் வாழ்வைக் கருக்கி நாளாந்தம் தமை வருத்தி வாழ்கிறார்கள்.
அவர்களின் கூக்குரல் கூடவா எவருக்கும் கேட்கவில்லை.

உலகமெல்லாம் தாவரம், பறவை, விலங்கு என்று
எல்லாவற்றையும் பாதுக்காக்க திரளுங்கள்.

மனிதர்களை அதுவும் ஈழத்தமிழர்களை சீ விட்டுவிடுங்கள்.

எங்களுக்காகக் குரல் கொடுக்கவேண்டாம்.
சரி எங்களை அழிக்கச் சிங்கள அரசுக்கு போர் ஆயுதங்களையாவது
வழங்காமல் விடலாம் அல்லவா.

ஐயோ..!! நாற்காலி மனிதர்களே!
நாறும் பிணமாகவும், நாயிலும் கேவலமான வாழ்வானதாகவும்
எங்கள் வாழ்வின்று நலிந்து கிடக்கிறது.

எங்கள் வலிகள் உங்களுக்குப் புரியப் போவதில்லை.
நீங்கள் எவரும் புரிய முயற்சிக்கப்போவதும் இல்லை.
தலையிடியும் காய்ச்சலும் தனக்குத் தனக்கென்றால் தெரியும் அதன் வேதனை.

உலகே!
ஒரு கண்ணில் வெண்ணையும்,
மறுகண்ணில் சுண்ணாம்பும் தடவிக் கொண்டிருக்கும்
உன் போக்கு மாறும் காலம் வரும்.

எங்கள் முகாரிகள் முரசுகளாக மாறும்.
எங்கள் வலிகள் வல்லமைகளாக உருவெடுக்கும்.

வேண்டாப் பொருளாக விலக்கப்பட்ட நாங்களே
விலைமதிப்பில்லாத விடுதலைக்குச் சொந்தக்காரர்களாக மாறுவோம்.

சர்வதேசம் கண்ணிழந்த கதையை,
ஈழப்புத்தகம் வரலாறாய் வரைந்து கொள்ளும்.

இன்று உலகெங்குமாக வாழும் தமிழ் உறவுகளின்
கண்களில் வழியும் கண்ணீரே தாயகம் மீட்கும் மறவர்களின் காப்பரன் என்று
காலம் உணர்த்தும் பாடத்தை இனிவரும் போராட்டங்கள்
முன்னுதாரணம் ஆக்கிக் கொள்ளும்.

யாரெல்லாம் எங்கள் இனத்தின் வாழ்விற்கு விசமிடுகிறீர்களோ...
வெகுவிரைவில் வெட்கித்துக் கொள்வீர்கள்.

திங்கள், 2 பிப்ரவரி, 2009

தென்னகம் தந்த காலப்பிழம்பு.




மண் தவப்பேறே!
மானுடத் திருவே!
விடுதலைச் சீற்றம் வெடித்த பிழம்பே!
தன் நிலை எரித்த தாய்மைச் செறிவே!
தென்னகம் கொண்ட கொள்கைக் குன்றே!
என்னகம் தொட்டு எழும் மொழிமெட்டில்
உன்னடி நோக்கி என்தலை வணங்கும்.


உன் இருப்புக்குள் எவ்வளவு நெருப்பு உண்டாய்,
கண்டு கொண்டோம்.

கந்தகம் தீய்க்கும் எங்கள் வாழ்வை
நெஞ்சகங்கொண்டு நெருப்பாய் ஆனாய்.

எம்மினம் காக்க தென்னகம் தந்த காலப்பிழம்பே!
தொப்புள் கொடியின் தாய்மைப் போரில்
உத்தம தத்துவம் சொன்னவனே!
நடுவன் அரசை நடுவீதிக்கழைத்து
நியாயம் கேட்ட நீதிமானே!

நலிந்திடாத் தமிழுனை நாளும் பாடும்.


ஈழவர் வாழ்விற்கு
இளநகை கேட்ட அன்புத்தம்பி முத்துக்குமாரா!
எத்தனை ஆயிரம் தோழரைத் தந்தாய்.
உண்மையின் வடிவை உணர்ந்திடச் செய்தாய்.
நாங்கள் பாயிரம் பாடும் ஆலயக் கோட்டத்தில்
குடிபுகுந்த குட்டித் தேவனே!
உனைச் செத்ததாய் சொன்னர்.
சா உனக்கில்லை நீ சரித்திரம் அல்லவா.

திங்கள், 19 ஜனவரி, 2009

நாய் ஒடுக்கி வைத்தாலும் நியாயம் கேட்கும் வல்லமைகள்!!!!!


பனிவிழும் தேசத்து பழகுதமிழ் சோதரே!
இனி வரும் காலம் எங்கள் இருப்புணர்த்தும் நேரம்.

ஆண்டுகள் சிலமுன்னர் நாம் எங்கு நிலையிருந்தோம்?
மீண்டோம் எனும் நினைப்பா... நேற்றைகளை குடித்துளது?
மாண்டு நம் உறவெல்லாம் மண்தின்னப் பார்த்திருந்தும்
கூண்டுக்குள் எமைப்பூட்டி குரல் அடங்கி கிடப்பது ஏன்?

கண்விசிக்க, மனம் வலிக்க, காலமுகம் கண்டிருந்தும்,
கங்குல் கரைத்தழிக்கும் காலம் விட்டு நிற்பது ஏன்?
கந்தகத்து முட்களிடை சொந்த நிலம் வேகுவதை - உம்
செங்குருதிப்பூ விரித்துப் பார்த்திடுக உறவுகளே!

அன்னை திருவாசல் அகலத்திறந்து நீ
முன்னை குதித்தநிலம் உன் மூத்த தாய் அல்லவா?
அவள் வண்ணத் திருமேனி வலியேந்தி நலிகிறது
கண்ணை மூடி நீ காணாது நிற்பது ஏன்?

கந்தகம் துப்பத் துப்ப நொந்தழுதோர் நாம்தானே!
வெந்துஅகம் விழிசுரக்க வேதனைகள் சுமந்தோமே!
இந்த நிலம் வந்தபின்னால் அந்த வாழ்வு மறந்தோமா?
குந்த நிலம் கண்டவுடன் கூன் முதுகு கொண்டோமா?

உன் காலுதைப்பை தன்மேல் காலமெல்லாம் தாங்கியள்
நீ கல் தடுக்கி விழுந்தாலும் காயத்தில் ஏந்தியவள்.
சூழ் கொண்ட கருவறைதான் வெவ்வேறு என்னினமே!
சேர்த்தணைத்து சுமந்தது ஈழத்தாய் மடிதானே!

வசந்தச் சோலையிலே வளவுக்குயில் பாடியதும்,
இசைந்த தெங்கிடையே தென்றல் நடம் ஆடியதும்,
கண்ணுரசும் அலையிடையே கயல்கள் விளையாடியதும்,
எண்ணிப் பார்த்திடுக என்னினமே! என்னினமே!

வாயொடுக்கி, மெய்யொடுக்கி விதியென்று கிடவென்று
வந்தோரும் போனோரும் தந்தனத்தோம் போடுகிறார்.
நாயொடுக்கி வைத்தாலும் நியாயம் கேட்கும் வல்லமைகள்
எம் தாயொடுக்கல் காணாமல் தீர்வெழுத முனைகின்றர்.

எம்மினத்தின் வேதனையை ஏன் அறியாதிருக்கின்றார்?
எண்திக்கும் எவரிருந்து எம் கழுத்தை நசிக்கின்றார்?
கண்ணில் வெண்திரையா? காரணங்கள் பலதிசையா?
எம்மிறக்கை துண்டித்து எது செய்ய நினைக்கின்றார்?

ஈழத் தமிழினமே!
உன்னி மூச்செடுத்தால் உலகெம் திசை திரும்பும். - தாய்
மண்ணுக்கு வலுவூட்ட வல்லமைக் குரல் செய்க!
எமைப் பிள்ளையெனப் பெற்றதெண்ணி ஈழநிலம் பூரிக்கும்.
பின்னாளில் போற்றும் வரலாறும் வாழ்த்துரைக்கும்.

விழவிழ எழுகின்ற வேதம் என்பதெல்லாம்
அழகாக தமிழ் தொடுத்து அரங்கேற்றும் கவிகளுக்கா?
குலம் விளங்க வாழ்ந்தமண் கும்மிருட்டில் விழி கரிக்க
கோடை வசந்தத்தில் கூத்தாடி மகிழ்வதென்ன?

பொங்கு தமிழ் குலமே!

சொந்த உறவுக்குச் சோகங்கள் தருவதற்கா
உந்திக் கிளம்பாமல் உட்கார்ந்து கிடக்கின்றீர்?
முந்திச் செய் தவறால் வெந்தநிலை போதும்
பந்தி படுக்கை விட்டு எப்போது எழுந்திடுவீர்?

அன்னை திருமேனி அந்தரித்துக் கிடக்கிறாள். - எம்மினம்
நொந்து குலையவோ? வேரடி வெம்பி மனையவோ?
எழில்தரும் பனிமுகத்தின் ஈரமலர்களே!
கண்களில் தீ மூட்டுக! ஈழம் காத்திடும் பணி ஏற்றுக!

சனி, 17 ஜனவரி, 2009

எமக்கான வாழ்வுக்காகக் குரல் கொடுத்தும், தமை வருத்தியும் வாழும் தமிழக உறவுகளுக்கு புலம்பெயர்ந்து வாழும் ஈழவள் ஒருத்தியின் உள்ளப்பதிவு.





கடந்த மூன்று தசாப்தங்களாக மிகப்பாரிய அளவில் சிங்கள அரசுகளின் இன அழிப்பு முன்னெடுக்கப்பட்டு, இப்போது வன்னி நிலப்பரப்பினை ஆக்கிரமிக்கும் உச்ச நடவடிக்கையாக கிட்டத்தட்ட ஐந்து இலட்சம் தமிழ் மக்களை ஒரு குறுகிய நிலப்பரப்பிற்குள் நெருக்கித் தனது இன அழிப்பின் உச்சக்கட்டத்தை சிங்கள அரசு நிகழ்த்திக் கொண்டிருக்கிறது.

உணவுத்தடை, மருந்துத்தடை என அடிப்படை வாழ்வாதாரங்களை மறுத்து, அத்தோடு நாளாந்தம் விமானக்குண்டு வீச்சுகளுக்கும், பல்குழல் எறிகணைக் குண்டு வீச்சுகளுக்கும் இரையாக்கப்பட்டும், உடலின் பாகங்கள் சிதைக்கப்பட்டும், அதே நேரம் காயம்பட்டவர்களுக்கு கிடைக்கக்கூடிய ஆகக்குறைந்த முதலுதவியையும் கிடைக்காத அளவுக்கு மீண்டும் மீண்டும் தொடர்ச்சியாக குற்றுயிராகக் கிடக்கும் மக்கள் மேல் குண்டு வீச்சுகளை மேற்கொண்டும், மருத்துவமனைகளையும் இலக்கு வைத்துத் தாக்கிச் சேதப்படுத்தியும் இன்று ஈழத்தில் நடாத்தப்படும் இன அழிப்பை வெளி உலகம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பது வேதனையளிக்கிறது.

ஏழு நாடுகளின் கூட்டு இராணுவ முன்னெடுப்புகளுடன் மேற்கொள்ளப்பட்டுக் கொண்டிருக்கும் இவ் இன அழிப்பு சர்வ தேசங்களாலும் தடை செய்யப்பட்டிருக்கும் கொத்தணி குண்டுகளாக, நாளாந்தம் உயிர்காக்க ஓடியோடி அல்லலுற்றுக் கொண்டிருக்கும் மக்களின் தற்காலிகக் குடியிருப்புகள் நோக்கி வீசப்பட்டு, வயது வேறுபாடின்றியும், சிதறி உடல் அடையாளமின்றியுமாக எம்மினம் அழிக்கப்படுகிறார்கள். கேட்பாரற்று கிடந்துழலும் பிணங்கள் போல் எங்கள் வாழ்வு சிகிலமாகி சிதைகிறது. எங்கள் உயிர் ஓலங்களின் மேலும் பிணக்குவியல்களின் மேலும் சிங்களம் உட்கார்ந்து கொண்டு உலக உலா வருகிறது. இந்த இன அழிப்பாளர்களுக்கு ஆயுதம் வழங்க அனைத்தும் அறிந்த அயல்நாடுகளே போட்டி போடுவது வேதனையாக இருக்கிறது. அதிலும் எங்கள் தொப்புள் கொடி உறவுகளால் உரம்பெற்றிருக்கும் இந்திய நடுவன் அரசும் முன்னணியில் நிற்பது எமக்கு விரக்தியையே வழங்குகிறது.

இருப்பினும்,

தமிழ்நாட்டுத் தொப்புள்கொடி உறவுகள் மட்டும் எங்களுக்காக தங்களை வருத்தும் அறப்போராட்டங்களை நடாத்தி தமிழினத்தின் இருப்பை உலகிற்கு உணர்த்திக் கொண்டிருக்கிறார்கள். கண்கள் பனிக்கின்றன. நாங்கள் தனித்தவர் இல்லையென்று நாளாந்தம் புலரும் பொழுதுகளில் கிடைக்கும் தென்னகத்தாரின் அரவணைப்பும் குரலொலிப்பும் எங்கள் மனவலிகளுக்கு மருந்திடுகின்றன. பரந்த உலகின் பனிக்காடுகளுக்குள்ளும், இயந்திர வயல்களுக்குள்ளும் எங்களின் வாழ்வு உருத்தெரியாமல் அழிவடைந்து கொண்டு செல்கிறது. என்றோ ஒருநாள் எங்கள் தாயக மடியில் உயிர் துறக்கும் வரம் எமக்குள்ளதாக நம்பிக்கை மட்டுமே எம்மிடையே நிலைத்திருக்கிறது.

இன்று விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பின் தலைவர் அண்ணன் தொல். திருமா அவர்கள் இந்திய நடுவன் அரசிடம் ‘வன்னியில் வாழும் ஐந்து இலட்சம் மக்கள் மீதான இராணுவத் தாக்குதல்களை நிறுத்துவதற்கு ஆவன செய்யக் கோரி’ சாகும் வரையிலான உண்ணாநிலை அறப்போராட்டத்தை முன்னெடுத்து மூன்று நாட்களைக் கடந்து கொண்டிருக்கிறார். எங்கள் உறவுகளில் உயிர்ச்சிதைப்பில் எழும் ஓலங்களை மனித காருண்யத்துடன் நோக்கும்படி எங்களுக்காக தமை வருத்தும் தமிழகச் சோதரர்களே! உங்களுக்கு நாங்கள் என்ன கைமாறு செய்யப் போகிறோம்? உங்களுக்குத்தான் எங்களுக்காகப் பேசுவதையிட்டு எத்தனை வாய்ப்பூட்டுகள்? எங்களுக்காக நீங்கள் எழுச்சியுடன் பேசினால் உங்களை வரவேற்க அகலத் திறக்கும் சிறைக்கூடங்கள்.

எங்களுடைய மக்கள் போராட்டத்தின் இன்னொரு வடிவம் தென்னக உறவுகளின் கைகளில் உரமேறிக் கொண்டிருப்பது எங்கள் மக்களின் இன்னலற்ற அன்றாட வாழ்வுக்கு அத்திவாரமிட்டுக் கொண்டிருக்கிறது. பெருந்தாய் தமிழக உறவுகளே! எங்கள் வாழ்வுக்காக உங்களை வருத்தும் உங்கள் போராட்டம் வெற்றிபெறவேண்டும். இந்திய நடுவன் அரசிடம் அறப்போராட்டத்திற்கு எத்தகைய மதிப்புள்ளது என்று நாங்கள் ஏற்கனவே ‘திலீபன்’ என்ற தியாகச்செம்மலையும், ‘அன்னை பூபதி’ என்ற தியாகத் தாயையும் இழந்து அறிந்துள்ளோம். அத்தகைய நிலை உங்களுக்கு வராவண்ணம் உங்கள் நடுவன் அரசு உங்கள் அறப்போராட்டத்திற்கு மதிப்பளிக்கவேண்டும் என்பதே எங்களின் வேண்டுகோள். எங்களுக்கான உங்கள் அறப்போராட்டத்தில் நீங்களும் இழப்புகளை சந்திக்கக்கூடாது என்பது எங்கள் அவா. அண்ணன். தொல். திருமா அவர்களே உங்களுக்குக் கிடைக்கும் வெற்றி எங்கள் மக்களின் இன்னல் குறைக்க எடுக்கப்படும் முதற்கட்ட நடவடிக்கையாக இருக்கும் என்ற நம்பிக்கையுடன் காத்திருக்கிறோம்.

சனி, 10 ஜனவரி, 2009

உலக வல்லாதிக்கத்தின், அவலம் உணராக் கோட்பாடுகளும், ஆயுதப் பரீட்சிப்பும் தொடர்கதையாக எம்மீது எழுதப்படுகின்றன.



மரணத்தை மீறி எழுகிறது எம்வாழ்வு



ஓ..மனிதமே!
இது ஈழத் தமிழினத்தின் இக்காலக்கதை
கண்ணெதிரே இனவாதம் கடித்துக் குதறும்
ஓரினத்தின் குருதி தோய்த்தெழுதும்
எழுதுகோல் கொந்தளிக்கும் உண்மைக்கதை

உலக வல்லாதிக்கத்தின்,
அவலம் உணராக் கோட்பாடுகளும்,
ஆயுதப் பரீட்சிப்பும் தொடர்கதையாக
எம்மீது எழுதப்படுகின்றன.

தொடரும் போரும்,
கந்தகத்தோடு உழலும் வாழ்வியலும்
பொருத்தமில்லாச் சமன்பாடுகளும்
எம்மை நோக்கித் திணிக்கப்படுகின்றன.

எங்கள் சுயமும், எமக்கான வாழ்வும்
மறுக்கப்படுகின்றன.
குரல்கள் ஒடுக்கப்படுகின்றன
ஒரு இனவாதத்தின் படர்கை
எம் வரலாறுகளை தீய்த்து மறைக்கிறது.

முற்றுப் பெறாத கால நீட்சியில்
எம்மினத்தின் வாழ்வு ஏளனத்திற்குள்ளாகிறது.
வெற்றிக் களிப்பில் கூத்தாடும் எதிரியின் ஆட்டம்
உசுப்பி எம்மை உக்கிரப்படுத்துகிறது.

ஒடுக்குதற்கெதிரான நிமிர்வு
வியாபித்து எங்கும் நிறைகிறது.
விடுதலைச் சுடரின் ஒளியில் சுதந்திர வாசனையை
எம் வாசல் நோக்கி அள்ளி வருகிறது காற்று.

அற்றதொரு பொருளுக்குள் புதையும் சுயம்
அடங்காச் சினமாக அவதாரம் எடுக்கிறது.
வெறுமையும் விரக்தியும் வைரம் பாய
மரணத்தை மீறி எழுகிறது எம்வாழ்வு.