சனி, 17 ஜனவரி, 2009

எமக்கான வாழ்வுக்காகக் குரல் கொடுத்தும், தமை வருத்தியும் வாழும் தமிழக உறவுகளுக்கு புலம்பெயர்ந்து வாழும் ஈழவள் ஒருத்தியின் உள்ளப்பதிவு.





கடந்த மூன்று தசாப்தங்களாக மிகப்பாரிய அளவில் சிங்கள அரசுகளின் இன அழிப்பு முன்னெடுக்கப்பட்டு, இப்போது வன்னி நிலப்பரப்பினை ஆக்கிரமிக்கும் உச்ச நடவடிக்கையாக கிட்டத்தட்ட ஐந்து இலட்சம் தமிழ் மக்களை ஒரு குறுகிய நிலப்பரப்பிற்குள் நெருக்கித் தனது இன அழிப்பின் உச்சக்கட்டத்தை சிங்கள அரசு நிகழ்த்திக் கொண்டிருக்கிறது.

உணவுத்தடை, மருந்துத்தடை என அடிப்படை வாழ்வாதாரங்களை மறுத்து, அத்தோடு நாளாந்தம் விமானக்குண்டு வீச்சுகளுக்கும், பல்குழல் எறிகணைக் குண்டு வீச்சுகளுக்கும் இரையாக்கப்பட்டும், உடலின் பாகங்கள் சிதைக்கப்பட்டும், அதே நேரம் காயம்பட்டவர்களுக்கு கிடைக்கக்கூடிய ஆகக்குறைந்த முதலுதவியையும் கிடைக்காத அளவுக்கு மீண்டும் மீண்டும் தொடர்ச்சியாக குற்றுயிராகக் கிடக்கும் மக்கள் மேல் குண்டு வீச்சுகளை மேற்கொண்டும், மருத்துவமனைகளையும் இலக்கு வைத்துத் தாக்கிச் சேதப்படுத்தியும் இன்று ஈழத்தில் நடாத்தப்படும் இன அழிப்பை வெளி உலகம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பது வேதனையளிக்கிறது.

ஏழு நாடுகளின் கூட்டு இராணுவ முன்னெடுப்புகளுடன் மேற்கொள்ளப்பட்டுக் கொண்டிருக்கும் இவ் இன அழிப்பு சர்வ தேசங்களாலும் தடை செய்யப்பட்டிருக்கும் கொத்தணி குண்டுகளாக, நாளாந்தம் உயிர்காக்க ஓடியோடி அல்லலுற்றுக் கொண்டிருக்கும் மக்களின் தற்காலிகக் குடியிருப்புகள் நோக்கி வீசப்பட்டு, வயது வேறுபாடின்றியும், சிதறி உடல் அடையாளமின்றியுமாக எம்மினம் அழிக்கப்படுகிறார்கள். கேட்பாரற்று கிடந்துழலும் பிணங்கள் போல் எங்கள் வாழ்வு சிகிலமாகி சிதைகிறது. எங்கள் உயிர் ஓலங்களின் மேலும் பிணக்குவியல்களின் மேலும் சிங்களம் உட்கார்ந்து கொண்டு உலக உலா வருகிறது. இந்த இன அழிப்பாளர்களுக்கு ஆயுதம் வழங்க அனைத்தும் அறிந்த அயல்நாடுகளே போட்டி போடுவது வேதனையாக இருக்கிறது. அதிலும் எங்கள் தொப்புள் கொடி உறவுகளால் உரம்பெற்றிருக்கும் இந்திய நடுவன் அரசும் முன்னணியில் நிற்பது எமக்கு விரக்தியையே வழங்குகிறது.

இருப்பினும்,

தமிழ்நாட்டுத் தொப்புள்கொடி உறவுகள் மட்டும் எங்களுக்காக தங்களை வருத்தும் அறப்போராட்டங்களை நடாத்தி தமிழினத்தின் இருப்பை உலகிற்கு உணர்த்திக் கொண்டிருக்கிறார்கள். கண்கள் பனிக்கின்றன. நாங்கள் தனித்தவர் இல்லையென்று நாளாந்தம் புலரும் பொழுதுகளில் கிடைக்கும் தென்னகத்தாரின் அரவணைப்பும் குரலொலிப்பும் எங்கள் மனவலிகளுக்கு மருந்திடுகின்றன. பரந்த உலகின் பனிக்காடுகளுக்குள்ளும், இயந்திர வயல்களுக்குள்ளும் எங்களின் வாழ்வு உருத்தெரியாமல் அழிவடைந்து கொண்டு செல்கிறது. என்றோ ஒருநாள் எங்கள் தாயக மடியில் உயிர் துறக்கும் வரம் எமக்குள்ளதாக நம்பிக்கை மட்டுமே எம்மிடையே நிலைத்திருக்கிறது.

இன்று விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பின் தலைவர் அண்ணன் தொல். திருமா அவர்கள் இந்திய நடுவன் அரசிடம் ‘வன்னியில் வாழும் ஐந்து இலட்சம் மக்கள் மீதான இராணுவத் தாக்குதல்களை நிறுத்துவதற்கு ஆவன செய்யக் கோரி’ சாகும் வரையிலான உண்ணாநிலை அறப்போராட்டத்தை முன்னெடுத்து மூன்று நாட்களைக் கடந்து கொண்டிருக்கிறார். எங்கள் உறவுகளில் உயிர்ச்சிதைப்பில் எழும் ஓலங்களை மனித காருண்யத்துடன் நோக்கும்படி எங்களுக்காக தமை வருத்தும் தமிழகச் சோதரர்களே! உங்களுக்கு நாங்கள் என்ன கைமாறு செய்யப் போகிறோம்? உங்களுக்குத்தான் எங்களுக்காகப் பேசுவதையிட்டு எத்தனை வாய்ப்பூட்டுகள்? எங்களுக்காக நீங்கள் எழுச்சியுடன் பேசினால் உங்களை வரவேற்க அகலத் திறக்கும் சிறைக்கூடங்கள்.

எங்களுடைய மக்கள் போராட்டத்தின் இன்னொரு வடிவம் தென்னக உறவுகளின் கைகளில் உரமேறிக் கொண்டிருப்பது எங்கள் மக்களின் இன்னலற்ற அன்றாட வாழ்வுக்கு அத்திவாரமிட்டுக் கொண்டிருக்கிறது. பெருந்தாய் தமிழக உறவுகளே! எங்கள் வாழ்வுக்காக உங்களை வருத்தும் உங்கள் போராட்டம் வெற்றிபெறவேண்டும். இந்திய நடுவன் அரசிடம் அறப்போராட்டத்திற்கு எத்தகைய மதிப்புள்ளது என்று நாங்கள் ஏற்கனவே ‘திலீபன்’ என்ற தியாகச்செம்மலையும், ‘அன்னை பூபதி’ என்ற தியாகத் தாயையும் இழந்து அறிந்துள்ளோம். அத்தகைய நிலை உங்களுக்கு வராவண்ணம் உங்கள் நடுவன் அரசு உங்கள் அறப்போராட்டத்திற்கு மதிப்பளிக்கவேண்டும் என்பதே எங்களின் வேண்டுகோள். எங்களுக்கான உங்கள் அறப்போராட்டத்தில் நீங்களும் இழப்புகளை சந்திக்கக்கூடாது என்பது எங்கள் அவா. அண்ணன். தொல். திருமா அவர்களே உங்களுக்குக் கிடைக்கும் வெற்றி எங்கள் மக்களின் இன்னல் குறைக்க எடுக்கப்படும் முதற்கட்ட நடவடிக்கையாக இருக்கும் என்ற நம்பிக்கையுடன் காத்திருக்கிறோம்.

3 கருத்துகள்:

Unknown சொன்னது…

நன்றி தோழி. அண்ணன் திருமா வாழ்க

வரவனையான் சொன்னது…

எம்மால் இதைத்ததான் செய்ய இயலுகிறது என்பதுதான் சகோதரி வருத்தமளிக்கிறது. குற்றவுணர்ச்சி அற்ற அரசின் கீழ் வாழ்தலும் ஒரு துயரே.

வல்வை சகாறா சொன்னது…

Xavier said...

நன்றி தோழி. அண்ணன் திருமா வாழ்க

உங்கள் வரவிற்கும் பதிவக்கும் நன்றி சேவியர்.


வரவனையான் said...

எம்மால் இதைத்ததான் செய்ய இயலுகிறது என்பதுதான் சகோதரி வருத்தமளிக்கிறது. குற்றவுணர்ச்சி அற்ற அரசின் கீழ் வாழ்தலும் ஒரு துயரே.

வரவனையான், தமிழக உறவுகள் எங்கள் கண்ணீரைத் துடைத்து கொஞ்சமேனும் எம்மை ஆற்றுப்படுத்துகிறார்களே. அதற்காயினும் நாங்கள் கொடுத்து வைத்திருக்கிறோம் அல்லவா.