கண்ணீர் பெருக்கெடுக்க,
உப்புக் காற்றின் உறவோடு தனித்தபடி,
கூப்பிடு தொலைவில்த்தானே…
எம்தேசம் கும்மிருட்டில் கிடக்கிறது.
ஆற்ற ஒரு நாதியின்றி, – எம்மினத்தின்
அவலத்தைத் தேற்ற ஒரு தேசமின்றி,
அம்மா!.......
உன் கையணைக்கும் தூரத்திலல்லவா…
எம்பூமி காயம்பட்டுச் சிதைகிறது.
ஈழம் என்ற பொன்பூத்த பூமியிலே பாரம்பரியம் சிதைக்கப்பட்டும், பண்பாடு ஒடுக்கப்பட்டும், மானுட வாழ்வின் சுயங்கள் மறுக்கப்பட்டதுமாக எங்கள் வாழ்வு கேட்பாரற்று, இனவாதியரின் கால்களுக்கிடையில் நசுக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. எங்கள் மூதாதையர் நிலங்களின் வளங்களைச் சுருட்ட வேற்று நாடுகள் எல்லாம் போட்டி போட்டுக் கொண்டு எங்களை ஒடுக்கும் இனவாதியருக்கு ஆயுத தானமும், இராணுவ தானமும் வழங்கி ஈழத்தமிழினம் என்ற ஒன்றையே இல்லாதொழிக்கும் மாபாதகச் செயலுக்குக் கண்களை மூடிக் கொண்டு துணை போயுள்ளன.
மானுட மெய்க்கு மரணதேவன் மாலையிட்டால் ஆறடி நிலம் வேண்டும். எரியூட்டுவதென்றாலும் நெஞ்சாங்கட்டை வேண்டும். எங்களுக்கான சாவுகள் எல்லாம் ஆறடி நிலத்தையோ அல்லது தீயெரியும் போது சாந்தப்படுத்தும் நெஞ்சாங்கட்டையையோ வேண்டுவதில்லை. எங்கள் உறவுகளின் மரணங்களுக்குப் பின்னான நிகழ்வென்பது சிதறிக் கிடக்கும் உடலின் பாகங்களை கூட்டி அள்ளிப் பொதியாக்கி நெருப்பிடுவதாகவே உள்ளது. அதுவும் பல சமயங்களில் உயிரற்ற சடலத்தின் பாகங்களை குவித்து அள்ளக் கூட வழியற்று, சிங்கள அரக்கர்களின் எறிகணைகளில் இருந்தும் , விமானக் கொத்தணிக்குண்டு வீச்சுகளில் இருந்தும் தப்பிக்க உயிர் காவி ஓடுவது நேற்றாகி இன்று வதைமுகாம்களுக்குள் வாயெடுத்து அழுவதற்கும் சக்தியற்று நடைபிணங்களாய், உயிரே சுமையாகி செத்தொழியும் வழியற்று மந்தைகளிலும் இழிவான கட்டாய வாழ்நிலைக்குள் காலவரையின்றித் தள்ளப்பட்டுள்ளோம். இப்போது தன்னும் எங்கள் வாழ்வுக்கு ஒளியூட்டுங்கள் முடியாவிட்டால் எங்கள் மூச்சுக்கு முடிவுரை தாருங்கள். போதும் தமிழராய் பிறந்து மனிதராய் வாழும் உரிமைகூட அற்று மறுக்கப்பட்டதாய் வாழ்வதிலும் சாவுமேல்.
தெற்கிருந்து வந்து உங்கள் மூச்சுத் தொடும் காற்றும், கந்தகத்திற்கு இரையாகிப்போன எங்கள் உறவுகளின் உயிர் கலந்தே உங்களை வந்தடையும். தமிழக உறவுகளே தாய்மைக் கண்களைத் திறந்து பாருங்கள் அந்தக் காற்றில் எங்கள் மரண ஓலங்களும், கடைசிச் சுவாசங்களும் தென்படும். எங்கள் வேதனைக் கூப்பாடுகளின் ஒலியை உங்கள் தாய்மைச் சிந்தை தள்ளி ஒதுக்காது என்ற பெருநம்பிக்கை சுமந்தே இந்தக் காகித வெளியில் எங்கள் கண்ணீரின் காயாத இரணங்களை தாய்ப்பசுவை நாடி அழும் கன்றின் கேவல்களாக்கியுள்ளோம்.
ஈரக்குலை பிழிய உயிர் இன்னும் துடிக்கிறது
காரணம் பலவுண்டு கடந்த காலம் நகைக்கிறது
பூரணப் பிரசவமே வேண்டும் எங்கள் வலிகளுக்கு
புன்னகையைக் கடனாக புதுப்பிக்க முடியாது.
தமிழக உறவுகளே!
இன்னும் கொஞ்ச நம்பிக்கை உங்கள் மேல் உள்ளது. இழப்பின் துயரில் வெம்மையுற்றிருக்கும் எங்களுக்கு உங்கள் இயலாமை காண மனதிற்குள் சினம் வெகுண்டெழுகிறது. தொப்புள் கொடி உறவென்பதெல்லாம் ஒடுக்கப்பட்ட உணர்வுகளுக்கு உரியனவாக போய்விட்டனவா?
கட்டுண்டு கிடக்கும் காலச்சக்கரம் தன்னியக்கம் பெறுக.
15 ஆண்டுகள் முன்பு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக