திங்கள், 2 பிப்ரவரி, 2009

தென்னகம் தந்த காலப்பிழம்பு.




மண் தவப்பேறே!
மானுடத் திருவே!
விடுதலைச் சீற்றம் வெடித்த பிழம்பே!
தன் நிலை எரித்த தாய்மைச் செறிவே!
தென்னகம் கொண்ட கொள்கைக் குன்றே!
என்னகம் தொட்டு எழும் மொழிமெட்டில்
உன்னடி நோக்கி என்தலை வணங்கும்.


உன் இருப்புக்குள் எவ்வளவு நெருப்பு உண்டாய்,
கண்டு கொண்டோம்.

கந்தகம் தீய்க்கும் எங்கள் வாழ்வை
நெஞ்சகங்கொண்டு நெருப்பாய் ஆனாய்.

எம்மினம் காக்க தென்னகம் தந்த காலப்பிழம்பே!
தொப்புள் கொடியின் தாய்மைப் போரில்
உத்தம தத்துவம் சொன்னவனே!
நடுவன் அரசை நடுவீதிக்கழைத்து
நியாயம் கேட்ட நீதிமானே!

நலிந்திடாத் தமிழுனை நாளும் பாடும்.


ஈழவர் வாழ்விற்கு
இளநகை கேட்ட அன்புத்தம்பி முத்துக்குமாரா!
எத்தனை ஆயிரம் தோழரைத் தந்தாய்.
உண்மையின் வடிவை உணர்ந்திடச் செய்தாய்.
நாங்கள் பாயிரம் பாடும் ஆலயக் கோட்டத்தில்
குடிபுகுந்த குட்டித் தேவனே!
உனைச் செத்ததாய் சொன்னர்.
சா உனக்கில்லை நீ சரித்திரம் அல்லவா.

திங்கள், 19 ஜனவரி, 2009

நாய் ஒடுக்கி வைத்தாலும் நியாயம் கேட்கும் வல்லமைகள்!!!!!


பனிவிழும் தேசத்து பழகுதமிழ் சோதரே!
இனி வரும் காலம் எங்கள் இருப்புணர்த்தும் நேரம்.

ஆண்டுகள் சிலமுன்னர் நாம் எங்கு நிலையிருந்தோம்?
மீண்டோம் எனும் நினைப்பா... நேற்றைகளை குடித்துளது?
மாண்டு நம் உறவெல்லாம் மண்தின்னப் பார்த்திருந்தும்
கூண்டுக்குள் எமைப்பூட்டி குரல் அடங்கி கிடப்பது ஏன்?

கண்விசிக்க, மனம் வலிக்க, காலமுகம் கண்டிருந்தும்,
கங்குல் கரைத்தழிக்கும் காலம் விட்டு நிற்பது ஏன்?
கந்தகத்து முட்களிடை சொந்த நிலம் வேகுவதை - உம்
செங்குருதிப்பூ விரித்துப் பார்த்திடுக உறவுகளே!

அன்னை திருவாசல் அகலத்திறந்து நீ
முன்னை குதித்தநிலம் உன் மூத்த தாய் அல்லவா?
அவள் வண்ணத் திருமேனி வலியேந்தி நலிகிறது
கண்ணை மூடி நீ காணாது நிற்பது ஏன்?

கந்தகம் துப்பத் துப்ப நொந்தழுதோர் நாம்தானே!
வெந்துஅகம் விழிசுரக்க வேதனைகள் சுமந்தோமே!
இந்த நிலம் வந்தபின்னால் அந்த வாழ்வு மறந்தோமா?
குந்த நிலம் கண்டவுடன் கூன் முதுகு கொண்டோமா?

உன் காலுதைப்பை தன்மேல் காலமெல்லாம் தாங்கியள்
நீ கல் தடுக்கி விழுந்தாலும் காயத்தில் ஏந்தியவள்.
சூழ் கொண்ட கருவறைதான் வெவ்வேறு என்னினமே!
சேர்த்தணைத்து சுமந்தது ஈழத்தாய் மடிதானே!

வசந்தச் சோலையிலே வளவுக்குயில் பாடியதும்,
இசைந்த தெங்கிடையே தென்றல் நடம் ஆடியதும்,
கண்ணுரசும் அலையிடையே கயல்கள் விளையாடியதும்,
எண்ணிப் பார்த்திடுக என்னினமே! என்னினமே!

வாயொடுக்கி, மெய்யொடுக்கி விதியென்று கிடவென்று
வந்தோரும் போனோரும் தந்தனத்தோம் போடுகிறார்.
நாயொடுக்கி வைத்தாலும் நியாயம் கேட்கும் வல்லமைகள்
எம் தாயொடுக்கல் காணாமல் தீர்வெழுத முனைகின்றர்.

எம்மினத்தின் வேதனையை ஏன் அறியாதிருக்கின்றார்?
எண்திக்கும் எவரிருந்து எம் கழுத்தை நசிக்கின்றார்?
கண்ணில் வெண்திரையா? காரணங்கள் பலதிசையா?
எம்மிறக்கை துண்டித்து எது செய்ய நினைக்கின்றார்?

ஈழத் தமிழினமே!
உன்னி மூச்செடுத்தால் உலகெம் திசை திரும்பும். - தாய்
மண்ணுக்கு வலுவூட்ட வல்லமைக் குரல் செய்க!
எமைப் பிள்ளையெனப் பெற்றதெண்ணி ஈழநிலம் பூரிக்கும்.
பின்னாளில் போற்றும் வரலாறும் வாழ்த்துரைக்கும்.

விழவிழ எழுகின்ற வேதம் என்பதெல்லாம்
அழகாக தமிழ் தொடுத்து அரங்கேற்றும் கவிகளுக்கா?
குலம் விளங்க வாழ்ந்தமண் கும்மிருட்டில் விழி கரிக்க
கோடை வசந்தத்தில் கூத்தாடி மகிழ்வதென்ன?

பொங்கு தமிழ் குலமே!

சொந்த உறவுக்குச் சோகங்கள் தருவதற்கா
உந்திக் கிளம்பாமல் உட்கார்ந்து கிடக்கின்றீர்?
முந்திச் செய் தவறால் வெந்தநிலை போதும்
பந்தி படுக்கை விட்டு எப்போது எழுந்திடுவீர்?

அன்னை திருமேனி அந்தரித்துக் கிடக்கிறாள். - எம்மினம்
நொந்து குலையவோ? வேரடி வெம்பி மனையவோ?
எழில்தரும் பனிமுகத்தின் ஈரமலர்களே!
கண்களில் தீ மூட்டுக! ஈழம் காத்திடும் பணி ஏற்றுக!

சனி, 17 ஜனவரி, 2009

எமக்கான வாழ்வுக்காகக் குரல் கொடுத்தும், தமை வருத்தியும் வாழும் தமிழக உறவுகளுக்கு புலம்பெயர்ந்து வாழும் ஈழவள் ஒருத்தியின் உள்ளப்பதிவு.





கடந்த மூன்று தசாப்தங்களாக மிகப்பாரிய அளவில் சிங்கள அரசுகளின் இன அழிப்பு முன்னெடுக்கப்பட்டு, இப்போது வன்னி நிலப்பரப்பினை ஆக்கிரமிக்கும் உச்ச நடவடிக்கையாக கிட்டத்தட்ட ஐந்து இலட்சம் தமிழ் மக்களை ஒரு குறுகிய நிலப்பரப்பிற்குள் நெருக்கித் தனது இன அழிப்பின் உச்சக்கட்டத்தை சிங்கள அரசு நிகழ்த்திக் கொண்டிருக்கிறது.

உணவுத்தடை, மருந்துத்தடை என அடிப்படை வாழ்வாதாரங்களை மறுத்து, அத்தோடு நாளாந்தம் விமானக்குண்டு வீச்சுகளுக்கும், பல்குழல் எறிகணைக் குண்டு வீச்சுகளுக்கும் இரையாக்கப்பட்டும், உடலின் பாகங்கள் சிதைக்கப்பட்டும், அதே நேரம் காயம்பட்டவர்களுக்கு கிடைக்கக்கூடிய ஆகக்குறைந்த முதலுதவியையும் கிடைக்காத அளவுக்கு மீண்டும் மீண்டும் தொடர்ச்சியாக குற்றுயிராகக் கிடக்கும் மக்கள் மேல் குண்டு வீச்சுகளை மேற்கொண்டும், மருத்துவமனைகளையும் இலக்கு வைத்துத் தாக்கிச் சேதப்படுத்தியும் இன்று ஈழத்தில் நடாத்தப்படும் இன அழிப்பை வெளி உலகம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பது வேதனையளிக்கிறது.

ஏழு நாடுகளின் கூட்டு இராணுவ முன்னெடுப்புகளுடன் மேற்கொள்ளப்பட்டுக் கொண்டிருக்கும் இவ் இன அழிப்பு சர்வ தேசங்களாலும் தடை செய்யப்பட்டிருக்கும் கொத்தணி குண்டுகளாக, நாளாந்தம் உயிர்காக்க ஓடியோடி அல்லலுற்றுக் கொண்டிருக்கும் மக்களின் தற்காலிகக் குடியிருப்புகள் நோக்கி வீசப்பட்டு, வயது வேறுபாடின்றியும், சிதறி உடல் அடையாளமின்றியுமாக எம்மினம் அழிக்கப்படுகிறார்கள். கேட்பாரற்று கிடந்துழலும் பிணங்கள் போல் எங்கள் வாழ்வு சிகிலமாகி சிதைகிறது. எங்கள் உயிர் ஓலங்களின் மேலும் பிணக்குவியல்களின் மேலும் சிங்களம் உட்கார்ந்து கொண்டு உலக உலா வருகிறது. இந்த இன அழிப்பாளர்களுக்கு ஆயுதம் வழங்க அனைத்தும் அறிந்த அயல்நாடுகளே போட்டி போடுவது வேதனையாக இருக்கிறது. அதிலும் எங்கள் தொப்புள் கொடி உறவுகளால் உரம்பெற்றிருக்கும் இந்திய நடுவன் அரசும் முன்னணியில் நிற்பது எமக்கு விரக்தியையே வழங்குகிறது.

இருப்பினும்,

தமிழ்நாட்டுத் தொப்புள்கொடி உறவுகள் மட்டும் எங்களுக்காக தங்களை வருத்தும் அறப்போராட்டங்களை நடாத்தி தமிழினத்தின் இருப்பை உலகிற்கு உணர்த்திக் கொண்டிருக்கிறார்கள். கண்கள் பனிக்கின்றன. நாங்கள் தனித்தவர் இல்லையென்று நாளாந்தம் புலரும் பொழுதுகளில் கிடைக்கும் தென்னகத்தாரின் அரவணைப்பும் குரலொலிப்பும் எங்கள் மனவலிகளுக்கு மருந்திடுகின்றன. பரந்த உலகின் பனிக்காடுகளுக்குள்ளும், இயந்திர வயல்களுக்குள்ளும் எங்களின் வாழ்வு உருத்தெரியாமல் அழிவடைந்து கொண்டு செல்கிறது. என்றோ ஒருநாள் எங்கள் தாயக மடியில் உயிர் துறக்கும் வரம் எமக்குள்ளதாக நம்பிக்கை மட்டுமே எம்மிடையே நிலைத்திருக்கிறது.

இன்று விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பின் தலைவர் அண்ணன் தொல். திருமா அவர்கள் இந்திய நடுவன் அரசிடம் ‘வன்னியில் வாழும் ஐந்து இலட்சம் மக்கள் மீதான இராணுவத் தாக்குதல்களை நிறுத்துவதற்கு ஆவன செய்யக் கோரி’ சாகும் வரையிலான உண்ணாநிலை அறப்போராட்டத்தை முன்னெடுத்து மூன்று நாட்களைக் கடந்து கொண்டிருக்கிறார். எங்கள் உறவுகளில் உயிர்ச்சிதைப்பில் எழும் ஓலங்களை மனித காருண்யத்துடன் நோக்கும்படி எங்களுக்காக தமை வருத்தும் தமிழகச் சோதரர்களே! உங்களுக்கு நாங்கள் என்ன கைமாறு செய்யப் போகிறோம்? உங்களுக்குத்தான் எங்களுக்காகப் பேசுவதையிட்டு எத்தனை வாய்ப்பூட்டுகள்? எங்களுக்காக நீங்கள் எழுச்சியுடன் பேசினால் உங்களை வரவேற்க அகலத் திறக்கும் சிறைக்கூடங்கள்.

எங்களுடைய மக்கள் போராட்டத்தின் இன்னொரு வடிவம் தென்னக உறவுகளின் கைகளில் உரமேறிக் கொண்டிருப்பது எங்கள் மக்களின் இன்னலற்ற அன்றாட வாழ்வுக்கு அத்திவாரமிட்டுக் கொண்டிருக்கிறது. பெருந்தாய் தமிழக உறவுகளே! எங்கள் வாழ்வுக்காக உங்களை வருத்தும் உங்கள் போராட்டம் வெற்றிபெறவேண்டும். இந்திய நடுவன் அரசிடம் அறப்போராட்டத்திற்கு எத்தகைய மதிப்புள்ளது என்று நாங்கள் ஏற்கனவே ‘திலீபன்’ என்ற தியாகச்செம்மலையும், ‘அன்னை பூபதி’ என்ற தியாகத் தாயையும் இழந்து அறிந்துள்ளோம். அத்தகைய நிலை உங்களுக்கு வராவண்ணம் உங்கள் நடுவன் அரசு உங்கள் அறப்போராட்டத்திற்கு மதிப்பளிக்கவேண்டும் என்பதே எங்களின் வேண்டுகோள். எங்களுக்கான உங்கள் அறப்போராட்டத்தில் நீங்களும் இழப்புகளை சந்திக்கக்கூடாது என்பது எங்கள் அவா. அண்ணன். தொல். திருமா அவர்களே உங்களுக்குக் கிடைக்கும் வெற்றி எங்கள் மக்களின் இன்னல் குறைக்க எடுக்கப்படும் முதற்கட்ட நடவடிக்கையாக இருக்கும் என்ற நம்பிக்கையுடன் காத்திருக்கிறோம்.

சனி, 10 ஜனவரி, 2009

உலக வல்லாதிக்கத்தின், அவலம் உணராக் கோட்பாடுகளும், ஆயுதப் பரீட்சிப்பும் தொடர்கதையாக எம்மீது எழுதப்படுகின்றன.



மரணத்தை மீறி எழுகிறது எம்வாழ்வு



ஓ..மனிதமே!
இது ஈழத் தமிழினத்தின் இக்காலக்கதை
கண்ணெதிரே இனவாதம் கடித்துக் குதறும்
ஓரினத்தின் குருதி தோய்த்தெழுதும்
எழுதுகோல் கொந்தளிக்கும் உண்மைக்கதை

உலக வல்லாதிக்கத்தின்,
அவலம் உணராக் கோட்பாடுகளும்,
ஆயுதப் பரீட்சிப்பும் தொடர்கதையாக
எம்மீது எழுதப்படுகின்றன.

தொடரும் போரும்,
கந்தகத்தோடு உழலும் வாழ்வியலும்
பொருத்தமில்லாச் சமன்பாடுகளும்
எம்மை நோக்கித் திணிக்கப்படுகின்றன.

எங்கள் சுயமும், எமக்கான வாழ்வும்
மறுக்கப்படுகின்றன.
குரல்கள் ஒடுக்கப்படுகின்றன
ஒரு இனவாதத்தின் படர்கை
எம் வரலாறுகளை தீய்த்து மறைக்கிறது.

முற்றுப் பெறாத கால நீட்சியில்
எம்மினத்தின் வாழ்வு ஏளனத்திற்குள்ளாகிறது.
வெற்றிக் களிப்பில் கூத்தாடும் எதிரியின் ஆட்டம்
உசுப்பி எம்மை உக்கிரப்படுத்துகிறது.

ஒடுக்குதற்கெதிரான நிமிர்வு
வியாபித்து எங்கும் நிறைகிறது.
விடுதலைச் சுடரின் ஒளியில் சுதந்திர வாசனையை
எம் வாசல் நோக்கி அள்ளி வருகிறது காற்று.

அற்றதொரு பொருளுக்குள் புதையும் சுயம்
அடங்காச் சினமாக அவதாரம் எடுக்கிறது.
வெறுமையும் விரக்தியும் வைரம் பாய
மரணத்தை மீறி எழுகிறது எம்வாழ்வு.

வியாழன், 27 நவம்பர், 2008

ஆண்டுக்கொருமுறை வந்து உங்களை ஏக்கக் கூண்டுக்குள் அடைக்க இனியும் எம்மால் முடியாது.




உயிர் முட்டி எழுகிறது உணர்வு.
காதுமடலை உராயும் காற்றின் வழியே
உங்கள் மூச்சின் இளஞ்சூடு படர்கிறது.
அருவமாய் வந்தெங்கள் அருகிருக்கிறீர்கள்...
உப்பேரி கரையுடைக்கும் எங்கள் விழிகளுக்குள்
உக்கிர நெருப்பை தேடுகிறீர்கள்.

உமக்கான மொழியெடுத்து
உம்மோடு பேச முடியாது, ஊமையாகி,
தலை குனிந்தே உங்கள் முன்
குற்றக் கூண்டேறி நிற்கிறோம்.

வெற்று வார்த்தைகளால் கவிபாட முடியவில்லை
பொய் கலந்தென் புனைவிருப்பின்
சத்திய நெருப்பு சுத்தி வந்து தீய்க்கிறது.

கார்த்திகை 27, 1982
முதல் மாவீரன் மண்ணில் சரிந்து
இன்றுடன் ஆண்டு 27 ஆகிவிட்டது.

காலநதி என்னவோ ஈழவர் வாழ்வைக்
கரைத்தபடி வேகமாய் நகர்கிறது.
இளமை தேய்ந்து, முதுமை எங்கள்
காதோரக் கேசங்களில் கடிதம் எழுதுகிறது.

கார்த்திகைத் திங்கள் என்றாலே
கனக்கும் இதயத்திற்கு
கல்லறைப் பாடல்தான்
உயிர் உந்தும் விசையை
உள்ளெடுக்க வைக்கிறது.
ஒவ்வொரு வரிகளுக்குள்ளும்
உயிர்துளிகள் உருகி
உறுதி மொழி எடுக்கும் வரை
ஓர்மமின்றி நலிகிறது.

உங்களைத் தரிசிக்கவரும் ஒவ்வொரு கணமும்
நேற்றைய நாட்களின் தோழமைச் சிரிப்பும்,
எங்கள் மீதான உங்களின் நம்பிக்கைத் துளிர்ப்பும்
ஆழப்பரவி எங்கள் சுயத்தை எரிக்கின்றன.

ஆலய தரிசனம் ஆன்மாவிற்கு நிம்மதி
அதிலும் உன்னத தோழர்களின்
உயிர்ப்பூவனத்தில்அந்தி சாய்கையிலே
அமர்தலே பேரின்பம்.

தேவரீர்!,
உங்கள் கோபுர வாசலுக்குள்
பாதம்பதிக்க வழியற்ற
புலம் பெயர்வின் பெருவாழ்வு...
அருவருப்புப் பிண்டம்போல்
அகத்தில் நெளிகிறது.

உங்கள் உயிர்க்கொடையின் செறிவு
உள்ளப்புண்களில் அமிலம் அள்ளிச் சொறிகிறது.

ஒவ்வொரு வருடமும்
ஏதோ புலம்பலுடன் உங்களைக் காணவந்து,
ஆவி துடித்திருக்கும் உங்களின்
ஆவலை முடக்கிவிட்டு,
'மறுபடியும் வருவோம்,
தாயக விலங்கறுத்த தேமதுரச் சேதி கொண்டு
தித்திக்க பேசுவோம்" என்றும் வாக்களிக்கிறோம்.

அடுத்த வருடம்...
இன்னொரு சாட்டு சொல்லி
உங்கள் வாய்களுக்குப் பூட்டுப்போட்டுப்
புறப்பட்டு விடுகிறோம்.
ஈழவர் விதி இதுவென்றாகிக் கிடக்கிறது.

இன்றும் வந்துள்ளோம்...

மௌனப்பதில்களை மட்டுமே சுமந்தபடி,
வல்லாண்மைச் சதி எங்கள்
வாழ்வு அள்ளிக் கருக்குவதை
உணர்வீர்கள் என்ற பெரு நம்பிக்கை
கொண்டே உங்கள் முன்றலில் கூடியுள்ளோம்.

ஏக்கத்தோடு பார்க்கும் உங்களிடமே
நிமிர்ந்தெழும் சக்தி கேட்க
செங்காந்தள் அள்ளிவந்து
சிரம் தாழ்த்தி நிற்கிறோம்.

எங்களைப் பார்த்து ஏமாற்றம் அடையாமல்
புன்னகைப் பூவெறிந்து நிற்கிறீர்களே,
இன்னும் அறியாமையில் துவளும் எங்கள் மேல் உங்களுக்கு இவ்வளவு பற்றுதலா?

ஏளனப்பட்டதாய் ஈழவள் ஆகலாகாதென்று
அக்கினிச் சிறகெடுத்த அவதார புரசரே!
இயலாமை எங்களின் இருப்பாகக் கூடாதென்று
கல்லறை மேனியராய் கருக்கொண்டோரே!

பெருந்தாய்த் தமிழகத்தின் உறவுக்கொடியெலாம் அணிதிரண்டு எமை அரவணைக்கும் ஒரு செய்தி இன்றுங்கள் காதுபாயும் முதல் மதுரம் ஆகிடுக.

களத்துலவும் தோழர்கள் கட்டாயம்
வெற்றிச் செய்தியோடு விரைந்தோடி வருவார்கள்.
கல்லறைத் தேவரீர்!,
உங்கள் ஏக்கத்தைத் தீர்க்கும் பெருவரம் பெற்றவர்கள் நாங்களல்ல அவர்கள்தான். - எனினும்,
புலம்பெயர்வின் மோகத்தில் அள்ளுண்டு போகாமல்இன்றுங்கள் முன்னிலையில்
மீண்டெழும் வரங்கேட்டு நிற்கிறோம்.

எங்கள் நெஞ்சக் கூட்டிற்குள்ளும்
ஆழப் புதையுண்டிருக்கும் விடுதலைப் பொறியை
உங்கள் மூச்சுக் காற்றில்
மூசும் எரிமலையாய் ஏற்றுக.

சாட்டுரைத்தே கேடுற்றர் தமிழச் சாதியென்று
எங்கள்சந்ததி சரிதம் எழுதக்கூடாது.

ஆண்டுக்கொருமுறை வந்து உங்களை
ஏக்கக் கூண்டுக்குள் அடைக்க
இனியும் எம்மால் முடியாது.
உங்கள் தாகம் தீர்க்காது ஊமைக் காயங்களுடன்
உமைவிட்டுச் செல்வது இதுவே இறுதியாகட்டும்.

அடுத்த வருகை உங்களைக் காணவெனில்
அன்னை திருமுடி தரித்த பின்னர்தான்.
இளைய தேவரீர்!
இன்றுங்கள் கோட்டத்தில் எடுக்கும்
உறுதிமொழி இதுதான்.

செவ்வாய், 25 நவம்பர், 2008

வீரத்தின் வனப்பிற்கு உவமை தந்த வரலாறே!




காரிருள் போர்த்தி நிலம்
கண்விழித்துக் காத்திருக்க,

கறுப்பு முகில் தான்கவிந்து
காணவென்று பூத்திருக்க,

ஆழிமகள் அணைக்கவென்று
ஆர்ப்பரித்து அலை எறிய,

வந்துதித்த ஆதவனே!
வாழிய நீ பல்லாண்டு.

புற்றீசல் மெட்டெடுத்துப்
புதுப்பாடல் இசைத்திருக்க,

புவி நனைத்து வர்ணமகன்
பன்னீரை வார்த்திருக்க,

நறுமலர்கள் வாடாத
நனிதிங்கள் கார்த்திகையில்

பிறப்பெடுத்த பெருமகனே!
வாழிய நீ பல்லாண்டு.

கிழக்கு முகம் சிரிக்க
எழும் ஒளியின் அடர்வே!

செம் பொன் அள்ளி
வீசிவரும் சூரியச்சுடரே!

இலக்கெடுத்துச் சுயம்
ஒடுக்கும் மானிடத்திருவே!

இலங்குபுகழ் தலைமகனாய்
வாழிய நீ பல்லாண்டு.

தாயகத்தை நெஞ்சில்
ஏற்ற தலைமைவேளே!

தனித்துவப் பண்பாட்டு
ஒழுக்கநெறிக் கோவே!

வாயோதும் நாமம் உறை
வல்லவர் வடிவே!

வரும் பகை வென்று,
வாழிய நீ பல்லாண்டு.

சீர் பூத்த படைசெய்யும்
சிருஸ்டி பிரம்மனே!

சின்னச் செம்மழலை
சிரம் காக்கும் தேவனே!

ஊழிப் பகை அழிக்கும்
உக்கிரச் சிவனே!

உலமெலாம் உனை வாழ்த்த
வாழிய நீ பல்லாண்டு.

வீரத்தின் வனப்பிற்கு
உவமை தந்த வரலாறே!

வாழ்வெடுத்துத் தமிழ் நிமிர
வழி சமைத்த வல்லமையே!

காலமகள் எமக்களித்த
காவியப் பெருந்தேவே!

கவி நெய்து வாழ்த்துகிறோம்
வாழிய நீ பல்லாண்டு.

சனி, 8 நவம்பர், 2008

நீர் ஊற்றி நிறைத்தாலும், பாலூற்றும் ஒளி நிறைத்துப் பனிநிலவு அணைத்தாலும், கார் காற்று மேனியதைக் தழுவிக் குழைந்தாலும், அணையாது அணையாது எரிகிறது..



என்னரும் மொழியே! எழில் நிறை கிளியே!
புன்னகை அழகே! பொதிகையின் அரசே!
விண்ணவர் தேவன் விரும்பும் தமிழே!
நின்னடி பணிந்தேன். தாயே!... என்னுளம் நுழைக.

முத்தாய்த் தாங்கி முன்னூறு நாட்சுமந்து
இத்தரையில் எனை ஈன்ற பெத்தவளை,

மெத்தை மடிவிரித்தென் தத்துநடை பார்த்து,
தள்ளாடி நான் விழுந்தால் தாங்கி இரசித்தவளை,

சித்தமெலாம் எனையாளும் சித்திரையின் நாயகியாம் உலக சக்தியவள் பெருந்தாயை,

நான் செத்தழிந்து போனாலும் என் சாம்பல்கூடத் தலைவணங்கும் மாவீரத் தோழர்களை,
பத்திரமாய் தொழுது,

எந்தன் தமிழுக்கு நிமிர்வு தந்த
தானைத் தலைவன் வழியதைச் சிரமேற்று,

உயிர்ப்பின் வலி உரைக்க,
எனை வனைந்த என்குருவிற்குத் தலைவணங்கி,

தாயின் மணிவயிற்று பசியென்னும் தீயணைக்க
சிறங்கை பொருள் கொடுக்கும் செந்தமிழ உறவுகளே!
சிரம் தாழ்த்தி வணங்குகிறேன்.

இது புதுவரவு.
கல்லி எடுக்கவும், களைகள் பிடுங்கவும்,
நன்னீர் பாய்ச்சி, நற்பயிர் வளர்க்கவும்
களத்து மேடு தேடிக் கால்கள் வந்துள்ளன.

கார் சூழ்ந்த பொழுதிடையே கவிவிளக்கு ஏற்றியுள்ளோம்.
ஒளி காட்டும் திசை நல்ல வழிகாட்டும் உணர்ந்திடுக.

ஏர் பூட்டி வந்துள்ளோம்.
விடுதலைத் தேரிழுக்க ஊர்கூட்ட வந்துள்ளோம்.

கார்காற்றில் தீ மூட்ட கவி நெருப்பேந்தி,
இக்களத்து மேட்டிடையே..
கண்ணீர் வைரங்களில் கனல் ஏற்றி வந்துள்ளோம்.

ஆர் ஆற்றுவார் எங்கள் ஆழ்மனதின் தீப்பிழம்பை?

நீர் ஊற்றி நிறைத்தாலும்,
பாலூற்றும் ஒளி நிறைத்துப் பனிநிலவு அணைத்தாலும்,
கார் காற்று மேனியதைக் தழுவிக் குழைந்தாலும்,
அணையாது அணையாது எரிகிறது என் தாய்மூச்சு.

எந்தையும் தாயும் கூடிய எம்மண்ணிலே
எத்தர்கள் நுழைந்தது எப்படி?

கந்தகம் தினம் தினம் காற்றிலே பூத்து
காலனை அழைத்தது எப்படி?

வந்தேறு குடியென்று வந்தவன் விரட்டிட
வேர் நொந்து போனது எப்படி?

அந்தரித்து அந்தரித்து அவலத்தைச் சுமந்து
அகிலத்தில் பரந்தது எப்படி?

வந்தரை ஏற்று விருந்தோம்பி நின்றதில்
வந்தது தந்தது வேதனை.

எந்தையர் விரட்டியே எம்நிலம் பிடித்திட
திணித்தனர் இனவாதத் தீதினை.

சிங்களத்தரசுகள் செந்தமிழ் தீய்த்ததில்
கந்தகம் விழுந்தது எம் கைகளில்.

நின்றாடும் துணிவின்றி நம் வட்டம் சிறுத்ததனால் அந்தரித்துலகினில் தலைவதாய் வாழ்வணை.

முடிந்ததா நம்மால்?....
வேர் பிடுங்கி எங்களை வேற்றுநிலம் நட்ட பின்பும்..
ஊர் நினைப்புதானே உள்ளுக்குள் எரிகிறது.

அன்னை திருமேனி அந்தரிக்க அந்தரிக்க
கண்ணை அயரவிட எண்ணங்கள் மறுக்கிறதே...

போர் மூசும் பெருங்காற்றில் ஊர்கிழித்து விழுகிறதாம்
ஒரு மூச்சில் நாற்பது செல்கள்.

கார் கிழித்து வான் வெளியில் கரணங்கள் போட்டு,
வண்டி பருத்தவரும், வாய் முகப்பு நீண்டவரும்
குந்தி எழும்பினாலே...
ஆழக் கிணறு வெட்டும் வேலை மிச்சமாம்.

நச்சரவம் ஒருபுறம்,
நாசத்திரவம் மறுபுறம்...
எத்தனை நாள் தாங்குவர் எம் உறவுகள்?

காட்டு வெளிகளிலே காஞ்சோண்டி செடியிடையே, நாயுருவி முத்தமிடும் நாணற்புதரிடையே,
பாறிச் சரியுதடா பாசத் தோள்கள்.

ஈரவயிற்றுள்ளே கோரப்பசி விழிதிறக்க,
பித்தச் சுனையிடையே எரிமலைகள் குமுறுதடா.

சேறெடுத்த மண்ணிடையே பாய் விரிக்க முடியுமா?
தோள் சாயும் இடந்தானே படுக்கையாய் கிடக்கிறது.

ஈரவிழிகளெல்லாம் இலக்கேந்திக் கிடக்கின்றன.
ஓரவிழி கசிய....
தூரத்து வெளிகளிலே துயர் துடைக்கும் உறவுண்டு எனும் பாரிய நினைவோடு உயிர் வலிக்க நிமிர்கின்றன.

ஓரவிழி கசிகிறதா?
ஈரக்குலை அசைய உள்ளிழுக்கும் மூச்சில்
ஆழத்து அகம் விரித்து அழுகை எழுகிறதா?

உறவுக் கொடியெல்லாம் ஓடிவந்து அணைப்போமென்று ஊர் போகும் காற்றிடையே உறுதி மொழி சொல்லிவிட பாவி மனம் கிடந்து பாடாய் படுகிறது.

வாருங்கள்.....
ஆவி துடிக்கும் இக்கவி கேட்டு தாவி உறவெல்லாம் நாமுள்ளோம், நாமுள்ளோம் என்றுரைத்தால் போதும்.
எம்மினம்.... போரின் அனலிடையே வேகாது.
விதியென்று சாகாது.

எண்திக்கு உறவுகளும் வேர் மடிக்கு நீர் பாய்ச்சும்
எனும் வீச்சில் மூசியெழும்.

தற்காப்பு நிலையென்று உட்கார்ந்த நிலை உடைத்து
உக்கிர மூச்செடுத்து உலைக்களத்தில் நிமிரும்.

படலைக்குள் நின்றாடும் யுத்தச் சாத்தானைப்
பந்தாடிக் காலிடையே பிழியும்.

ஊர் போகும் காற்றிடையே.....
'நாமுள்ளோம் அஞ்சற்க.. நாமுள்ளோம் அஞ்சற்க' எனும் உறுதி மொழி சொல்ல... உரத்து கூறுக.
நாமுள்ளோம் அஞ்சற்க..... நாமுள்ளோம் அஞ்சற்க.