திங்கள், 20 அக்டோபர், 2008

தாயின் மடியில் தமிழ்ப்பாலுண்ட கோடி நெருப்பொன்றாய் தகிக்கக் கண்டோம்.
கருணைப் பெருங்கடலே!
கன்னல் சுவையூறும் தமிழ் பூத்த திருநாடே!
உண்மை ஒளி குன்றா உறவின் பெருங்கொடியே!
திண்மை கொண்டெழுந்த உங்கள் திடல் தோளில்
சிறிது சாய்ந்து இளைப்பாறிக் கொள்கிறோம்.

தாயின் மடியில் தமிழ்ப் பாலுண்ட
கோடி நெருப்பொன்றாய் தகிக்கக் கண்டோம்.
வீசும் தமிழ் காற்றும், உணர்வின் அலையும்
தீய்ந்து கருகும் எங்கள் வாழ்வை ஆற்றும்.

உக்கித் தனிமரமாய் துயர் சுமந்த எங்களுக்கு
உயிர்ப்பின் கொடி பிடித்து அரவணைக்கும் உறவுகளே!
தெக்கும் உணர்விடையே உயிர்ப்பூ கசிகிறது.
தேம்பும் விம்மலொலி சிறிதடங்கிக் கிடக்கிறது.

பால் வாசம் வீசும் மார்பிடையே அணைத்தவளே!
பனித்த விழிகளால் பாசத்தைப் பொழிபவளே!
மனித்த பிறவியதன் மாபெரும் தத்துவத்தின்
தனித்துவம் காக்கும் மா.. தாய் நீயல்லவா.

தொப்புள் கொடி உறவு துணை வந்து நிற்கிறது.
தொய்வின்றி எம் பயணம் விடுதலைக்காய் தொடரும்.
அர்ப்பணிப்பு எங்களதாய், அரவணைப்பு உங்களதாய்
காலமகள் இணைத்துவிட்டாள்...
சற்றுக் களிக்கின்றோம் உறவுகளே.

வள்ளுவன் வாழ்ந்த வானளந்த தமிழகமே!
உள்ளிருந்து எழுகின்ற எம் நன்றிக்கு அளவில்லை
உப்புக் காற்றுரசும் ஊமைக்காயங்களுடன்
அக்கினி வீச்சுகளை மென்றுமென்று நீர் குடித்தோம்.

கோடிக்கரையிருந்து கொடியொன்று தெரியாதா?வான்முட்டும் உறவுகளின் வல்லமைக் குரல்கேட்டு வாரணம் வழி விடாதா?
ஆனமட்டும் ஏங்கியது நேற்றைய கதையாக, இன்று
நெக்குருகி கொஞ்சம் இளைப்பாறும் வரம் பெற்றோம்.

ஈரக்குலை பிழிய உயிர் இன்னும் துடிக்கிறது
காரணம் பலவுண்டு கடந்த காலம் நகைக்கிறது
பூரணப் பிரசவமே வேண்டும் எங்கள் வலிகளுக்கு
புன்னகையைக் கடனாக புதுப்பிக்க முடியாது.

தேமதுரம், பால், பழமும் தெவிட்டாத தெள்ளமுதும்
நாவுக்கு வாழ்வு தரும், நலத்திற்கு மீள்வு தரும்.
பாவியர் ஏவும் சாவுக்கு மாள்வு தர
பனிக்கும் உறவுகளே!.. பாரினில் வழி செய்க.

காலப் பெரு வெளியில் கடந்தவைகள் எத்தனையோ..
கண்ணில் நீர் வழிய, இழந்தவைகள் எத்தனையோ...
விழி கசியும் உறவுகளே!.. வாழக் கேட்கின்றோம்
வழி மறிக்கா நிலை ஒன்றை வனைந்து தருக.

1 கருத்து:

பெயரில்லா சொன்னது…
இந்த கருத்து வலைப்பதிவு நிர்வாகியால் நீக்கப்பட்டது.