ஞாயிறு, 27 ஏப்ரல், 2008

செவ்வாய், 22 ஏப்ரல், 2008

மானிடக் கருணையே!




ஆண்டகை அகதியாக

அல்லலுறும் பூமியிலே

மாண்ட அடிகளே!

மானிடக் கருணையே!

நீண்டதொரு சரித்திரத்தின்

நிதர்சனச் சான்றென்று

நீசர்கள் வைத்தகுறி

நேசரும்மைப் பறித்ததுவோ?

சனி, 19 ஏப்ரல், 2008

உயிர்த்துளியின் ஓரத்தில்

மனப்பையில் வார்த்தைக் கோலங்கள் பொங்கி வழிந்து, உணர்வுத் தீயின்மேல் குதித்துத் தீய்ந்து கருகி மறைய, அவற்றில் பீனிக்ஸ்களாக தவிப்புகள் பிறப்பெடுக்கின்றன. நரம்புகளின் மூலை முடுக்கெல்லாம் தாகம் பிறக்கிறது.

கண்களை மூடிக் கொண்டேன். மெல்லிய இளங்காற்று என் மேனியைத் தழுவிட, புலன்களால் இனங்காணமுடியாத ஒரு அமானுஸ்ய உணர்வு என்னை ஆக்கிரமித்தது.கவிந்த இமைகளுக்குள் நிலைத்த விழிகளுக்குள் தவிப்பும், தாகமும் விரிந்தன. மூடிய கயல்களின் ஓரங்களில் மெல்லிய ஈரக்கசிவு.எங்கோ பசுமையைச் சுமந்தபடி என் வரவிற்காய் ஏங்கியபடி காத்திருப்பதாய், எனக்குள் உணர்த்தியபடியே, புன்னகையை வீசி என்னைத் தனக்குள் ஈர்த்தது பாசம்.

அக்கினித் தகிப்பில் உடலும், உள்ளமும் எரிந்தன. பனிக்கரங்கள் அணைத்துக் குளிர்ச்சி தரும் வெளிகளில் இருக்கும் என்னிருப்பின் உணர்வுகள் காலநிலைகளைத் தாண்டி முரண்பட்டுக் கிடக்கின்றன. அடையாளங் காணப்படாத பிணங்களைப் போன்று எண்ணங்கள் அவலமுறுகின்றன.

எல்லாமே என்னிடத்தில் இருக்கின்றன. மானிடத்தின் உணர்வுகள் அடங்கிய பெரும் படைப்பு நான். உலக வாழ்வியலின் கதம்பக் கோர்வை என்னுள் வியாபித்து வாசம் வீசுவதாக எனக்குள் ஒரு மிதப்பு. இருப்பினும் ஏதோ.... ஏதோ ஒன்று

அம்மா மடியில் முகம் புதைத்து எதற்காகவோ அழவேண்டும் போல் அடிக்கடி என்னுள் ஏக்கம் வளர்கிறது. அந்த மடிக்குத்தான் என்னைப் புரியும் என்பதுபோல் எனக்குள் ஒரு பட்டிமன்றம் ஒவ்வொரு நாழிகையும் காரசாரமாக நிகழ்ந்து கொண்டிருக்கிறது. ஏன் என்ற கேள்விக்கு என் எழுதுகோலாலும் பதில் சொல்ல முடியவில்லை. எப்போதுமே கம்பீரமாக நிமிர்ந்து கர்வத்தோடு என்னை நோக்கும் இந்த எழுதுகோலும் இன்று ஏனோ என்னைப் புரிந்து கொள்ளமுடியாமல் திண்டாடித் திண்டாடி பதிவிட இயலாமல் கனத்துப் போகிறது. மனதை வசீகரிக்கும் ரம்மியமான கனவுகளும் கடன்தர மறுக்கின்றன.

மனப்பையில் வார்த்தைக் கோலங்கள் பொங்கி வழிந்து, உணர்வுத் தீயின்மேல் குதித்துத் தீய்ந்து கருகி மறைய, அவற்றில் பீனிக்ஸ்களாக தவிப்புகள் பிறப்பெடுக்கின்றன. நரம்புகளின் மூலை முடுக்கெல்லாம் தாகம் பிறக்கிறது.

இது என்ன?...
என்மனதிற்குள் புதையுண்டு கிடக்கும் பிரமாண்டம் என் மூச்சின் வெளிகளை நிரவி வானளாவ வளர்கிறது.

என் அம்மா என்னை அழைக்கிறாள். நான் போக வேண்டும். அதோ அம்மா என்னை மறுபடியும், மறுபடியும் அழைத்துக் கொண்டிருக்கிறாள் நான் போக வேண்டும். ஐயோ!.... என் தாயின் குரல் ஏன் இவ்வளவு தீனமாக ஒலிக்கிறது?...

என் தாயின் குரலில் பெரு வலி தெரிகிறது. திடீரென்று முளைத்த தற்கால வலியாகத் தெரியவில்லையே... நீண்டகால ரணத்தின் ஒலியெழுப்பல் போலல்லவா படுகிறது.

இதென்ன?..... அண்டை அயலெலாம் உற்சாகப்படுத்த என் தாயை ஒரு கோரப்பிசாசு தன் பற்களினாலும், கோர நகங்களினாலும் காயப்படுத்தி, ஊனையும், உதிரத்தையும் சுவைத்துக் கொண்டிருக்கிறது. என்ன நடக்கிறது அங்கே?அம்மாவை ஏன் வதைக்கிறீர்கள்? வேதனையுடன் கதறுகிறேன். ஆ... அங்கே என் சகோதரன் நிற்கிறான்..... அவனாகிலும்..... சீ.... மானங்கெட்டுப் போனானே..... அன்னையின் துகிலுரிப்பில் அவனுக்கும் ஒரு பங்கா?...... மனதிற்குள் கோரப்பேயைக் காட்டிலும், அன்னை முலையில் எச்சில் பாலுண்ட கருவறைத் தோழன் கருகிப்போனான்.

எனக்குள் சீற்றம் பொங்கப் பொங்க கண்ணீரோடு கத்திக் கொண்டு என்னைச் சுமந்தவளை நோக்கி, கைகளை நீட்டி ஓடுகிறேன்.
ஆ....... குதிக்காலில் எங்கிருந்தோ வீசப்பட்ட கற்கள் தாக்க, நிலைகுலைந்து வீழ்ந்தேன் சுற்றும் பார்த்தேன். கவன்களைச் சுழற்றியபடி மனித முகமூடி அணிந்த மிருகங்கள் எக்காளமிட்டுச் சிரித்தன.

அம்மாவின் அழைப்பில் இப்போது சீற்றம் பொங்குகிறது.'வா.... மகவே!எழு!.... வா....மகவே!இது பேய் விரட்டும் நேரம் வா!.." என்று அவளின் குரலில் ஓங்காரம் ஒலிக்கிறது.

சித்திரைப் பறுவம் அம்மாவிற்கான நாள் என்று நோன்பின் விளக்கம் வானொலியில் ஒலிக்கிறது.

ஐயோ!.... வாதைகளின் மையத்திருந்து அம்மா என்னை அழைக்கிறாள். நான் போகவேண்டும்... நான் போகவேண்டும்.

'விழுதென்று என்னை வீசி எறியாது இழுத்து அரவணைத்து முந்தானைத் தொங்கலினால் முகம் திருத்தும் மனம் பெருத்த அன்னையடி நான் மாசுற்றுப் போவது எப்படி?அழுதிருக்கும் வேளையிதை அறியாது நிற்பேனோ?அன்னாய்! அணைத்துந்தன் வலி தீர்க்கும் ஓர் மகவாய்,உன் உயிர்த்துளியின் ஓரத்தில் நானிருப்பேன்."

வெள்ளி, 11 ஏப்ரல், 2008

நேசிப்பின் நிலாவரையல்ல.. நெருப்பின் உலாமுகமே நிகழ்காலத்தேவை.


கொடுங்குலத்தின் கூர்ப்புடைக்கும் மடுத்தலத்தின் மத்தியிலே
தடுத்தாட் கொள்ள என்று தமிழருக்கு இருந்த தாய்
அடங்காச் சினங் கொண்ட அநியாயச் சிங்களத்தின்
நெடுங்காலத் திட்டமதில்
மடுத்தல மாதாவும் இப்போது இடப்பெயர்வு அகதி

பரம்பொருளே!....
தடுத்தாட் கொள்ள யார் உள்ளர் உலகில்?

இருதயநாதரும் இராணுவ ஷெல்வீச்சில் சிதைவுற்று போனாராம்.
சீர்தூக்கி இறைமகனை காக்க ஒரு கையின்றி,
கட்டிட சிதைவுக்குள் கருணைக்கடல் நிற்கிறாராம்
கண்கொண்டு பார்த்து கனக்கும் இதயமெங்கே?

ஆருக்கும் எம்மினம் அவதியைக் கொடுக்கவில்லை
ஆனால் போர் வித்தை கற்கவரும் வல்லாண்மைகளின்
மானுட நேசிப்பு எம் மண்ணைக் குதறுகிறது

மானுட புதைகுழிமேல் மல்லாக்கும் ஓணான்களே!
சாணாடா?, முழமாடா சாவுக்கு இருக்கிறது?
ஏவுகணை முதல் எல்லா பரீட்சையையும்
எங்கள் மண்ணிலே கந்தகத்தால் எழுதுங்கள்.
காலன்தான் எங்கள் கண்ணெதிரே தெரிகிறானே.

கார்காலம், கனத்தமழை, போர்த்தெழுந்த பெருவெள்ளம்
சேறேற்றி புதைக்கிறது சனத்தை...
போர்வாழ்வு ஒரு பக்கம், பொல்லாத உலகத்தின்
சுண்ணாம்புத் துப்பல்கள் சுவாசத்தின் மறுபக்கம்.
பாரெங்கும் நிமிர்தெழும் பனங்கூடல்களே!
வேர்மடியின் உடலெங்கும் பரந்தோடி உறைகிறது ரத்தாறு,
உயிர் கரைக்கும் வாசகங்கள் எவருக்கு வேண்டும் சொல்!

நாளாந்த மரணமல்ல, நாழிகையே மரணமென
சாவாழ்வு சரசமிட, பாதாள நரகமடா பைந்தமிழ் வாழ்வு
தாளாத வீரமடா தாங்கி நிற்கிறது.
தமிழ் மகவே!... உயிர் அகவே!
தேம்பாதே! தேங்காதே!...
விரி திசையின் மையத்தை தாங்கு!

நேசிப்பின் நிலாவரையல்ல...
நெருப்பின் உலாமுகமே நிகழ்காலத் தேவை.

வெள்ளி, 4 ஏப்ரல், 2008

குருதி பெருக்கெடுக்கும் இறுதிவேண்டுகை தாயே!

உலகத் திசையெங்கும் உழலும் தமிழ் விழுதுகளின் வேர்மடிக்கும் தாய்மடியே!

உறுதி குலையாத உரம் அன்றுதந்து, விடுதலையின் பொறி வளர்த்த பெருந்தாய் தமிழகமே!

ஊற்றுவாய் பிளந்தாற்போல் உணர்வோட்டம் பொங்கக்காற்று வழி கேட்கும் வள்ளுவக் கோட்டமே!

எம்திசை பார்த்தொருகால் உன் பூந்தாழ் திறவாயோ?
வார்த்தெடுத்துப் புனைந்து கவி சொல்ல வரவில்லை
வற்றாத வரலாற்று வரைவுகளால் இவ்வழி வந்தோம்.

ஆர்த்து, அணைத்து, ஆர்ப்பரித்துப் பேசிடவும்,
பார்த்துப் பசியாறி, பல்லாங்குழி ஆடிடவும்,
கோர்த்துக் கைகுலுக்கிக், கொவ்வையிதழ் விரித்திடவும்,
ஈர்ப்பு இருக்கிறது,....
எனினும் இப்போது முடியவில்லை.

கண்ணீர் பெருக்கெடுக்க,
உப்புக் காற்றின் உறவோடு தனித்தபடி,
கூப்பிடு தொலைவில்த்தானே...
எம்தேசம் கும்மிருட்டில் கிடக்கிறது.

ஆற்ற ஒரு நாதியின்றி, - எம்மினத்தின்
அவலத்தைத் தேற்ற ஒரு தேசமின்றி,
அம்மா!.......உன் கையணைக்கும் தூரத்திலல்லவா...
எம்பூமி காயம்பட்டுச் சிதைகிறது.

வாதைகள் பல சுமந்து,
கந்தகக் காலனின் குடியிருப்பில்,
குடி சுருங்கி,
கொப்பளிக்கும் குருதிவழி குலைசிதற,
இடிதாங்கி, இடிதாங்கி.... அடிதாங்கும் நிலை கூட...
இன்னும் உன் கண்களுக்குத் தெரியாமல் மறைப்பதென்ன?
உன் விழிமணிகள் மீதமர்ந்த வெண்சவ்வா?
இல்லாவிடின் வேண்டா உறவென்ற விளங்காக் கொள்கையா?

கட்டாய வலி வந்து,
கால் அகட்டிக் கிடக்கையிலே
ஆடைச் சரிவிற்குள் அந்நியர்கள் பார்வை...
எங்கள் தொப்புள் கொடிக்கான தொடர்பந்தம் நீதானே....
எப்படித் தனிக்க விட்டாய்?
ஏதிலியாய் தவிக்கவிட்டாய்?

சாவின் விளிம்பினிலே,
கூவிக் குளறி எம்தேசம் அழுகையிலே,
ஆவி துடித்தெழுந்து...
தாவி அணைக்கும் தாய்மடி நீதானே!

வாரியணைத்தெம் புவியின் வண்ணமுகம் பார் தாயே! - எவ்
வல்லமையும் உடைக்க முடியாத் தாய்மைவேதம் நீதானே!

தாயே!......
குமுறும் எம் உள்ளக் கோபுரத்தை வருடி எப்போது ஆற்றுவாய்?
தனித்த எம் வேர்மடிக்குத் தாங்கும் வலுவாய் தோற்றுவாய்?

அம்மா!
இது குருதி பெருக்கெடுக்கும் இறுதிவேண்டுகை தாயே!
பாராமுகம் வேண்டாம்.
வா!... பக்கத்துணையாய் இரு!

வேற்று மருத்துவச்சி வேண்டவே வேண்டாம்.
எம்புவியின் பேற்று மருத்துவச்சியாய்
நீயே பிள்ளைக் கொடி அறு!