சனி, 3 நவம்பர், 2007

தூர் முட்டும் தீயின் ஓரத்தில் வீசிய சில்லென்ற நதிக்காற்றே!


போர் முற்றம் நின்று பூங்கொத்து ஏந்திய
புன்னகை மன்னவனே!
தூர் முட்டும் தீயின் ஓரத்தில் வீசிய
சில்லென்ற நதிக்காற்றே!
ஆர் சுற்றம் பிரித்தறியா ஈழத்தின் உறவான
இன்முகத் தமிழெ ழிலே!
பார் சுற்றி தாய் முற்றக் கதைசொல்லிப் பயணித்த
பண்புநிறை தமிழ்செல்வா!

உலகின்............
தீர்வற்ற நெடுங்கதைக்கு தீர்வெழுதி முடிக்கவா,
நீ தூங்கிப் போய்விட்டாய்?
ஊர் முற்றம் அணைத்த இதமான அணைப்பிலா,
நீ உறங்கி ஓய்வெடுத்தாய்?
நாரோடு மலர் தொடுத்து நாடு சூடும் வேளையிலா,
நயனத்தை மூடிக் கொண்டாய்? - எங்கள்
நாயகனின் தோளான நல்லதொரு தோழனே!
நம்மைவிட்டு ஏன் பிரிந்தாய்?

யார் குற்றம் செய்தோம்?
விழிநீர் முட்டிக் காயாத விதி வாங்கி உழல்கின்றோம்.
மதி மழுங்கிக் கூர்கெட்டு மனிதத்தின்
மௌனத்தில் உறைத்துக் கிடக்கிறது உலகம்.
சிகிலமாய் உடல் கிழித்து உயிர் குடித்து,
விண்ணேகும் வான்கழுகின் விதிகிழித்த கதைமறந்து,
வேதாளம் எம் மண்ணில் வேட்டைக்குத் திரிகிறது.

வான் கிழிக்கும் வல்கழுகை இனி
வரவிட்டு வீழ்த்தவேண்டும்.
பல்லிளிக்கும் சிங்களத்தின் பலம்
ஆய்ந்து சரிக்கவேண்டும்.
கூன் எங்கு இருக்கிறது
குறிப்பெடுத்துக் கண்டுபிடி!
குன்றாத திடமேற்றுக்
கொற்றவைக்குக் கொடியேற்று!

கண்மூடிக்கிடக்கும் திடல்தோள் தமிழா!
கடல்தாண்டிக் கிடக்கும் உன்
கண்களுக்குள் தீ ஏற்று!
படக்கடைக்கு செய்யென்று முதலீடு கேட்கவில்லை எம்படை களத்தில் முதலாக,
உன் பங்களிப்பைக் கொடு!

எடுகோள்கள் என்று எல்லாவற்றுக்கும்
பழங்கதைகள் சொல்லிப் பஞ்சாங்கம் சிலர் படிப்பர்.
விடு!, வேதனையின் மடி கிடந்து விதியென்று மடிகின்ற வெட்டித்தனமெல்லாம் வெந்தணலில் போட்டு எரி!

வாழ்விற்காய் தினமோடி வாழாமல் வேசமிடும்
வலி உனக்குள் பெருத்து வழி மறைத்து நிற்கிறது.
வையத்தில் பரவி வாழ்கின்ற தமிழினமே!
வாழ்விற்குள் என்ன கண்டாய்?
அல்லலுறும் அகதி வாழ்வு, அகவை பல தேய்ந்தாலும் இணையமுடியா உறவுத் தொடர்கள்,
இறப்புக்குக் கூட உந்தன் வாழ்வில்
இரவல் நிலத்து இறுதிப் பயணம், மிச்சமென்ன?

குந்தி நீ கொண்டாடும் குடிநிலமே, - உன்னை
வந்தேறு குடியென்றே வரைவெழுதி வைக்கும்.

துணி!சொந்தநிலம் மீட்க வேண்டும்.
சோகத்தின் மூச்சுகளில் தேசத்தீ கனலவேண்டும்.
வந்து வணங்கிநின்று வீரப்புதல்வர்கட்கு 'bye' காட்டி, போவதெல்லாம் இந்த மணித்துளியே
இழிவென்று தூக்கி எறி!

எந்த மண்ணிலே இவர் தூக்கம் கொண்டனரோ..,
எந்த மண்ணிலே எழுபரிதி தெரிகிறதோ!
அந்தமண் மீட்க அத்தனையும் நீ வழங்கு!
அப்போதே மறைந்த இம்மாவீரர் மனம் சாந்தி கொள்ளும்.

கருத்துகள் இல்லை: