வியாழன், 27 செப்டம்பர், 2007

சாத்வீகச் சின்னம்


கத்தியின்றி இரத்தமின்றி
யுத்தமொன்று செய்தவன்
செத்து நின்ற இந்தியத்தை
முத்தமிட்டு நின்றவன்
பித்தம் கொண்ட வல்லரசைப்
பேதலிக்க வைத்தவன்
கத்தும் கடல் சூழ்ந்திருந்த
காசினியில் உதித்தவன்

வேலவனின் காலடியில் - தமிழ்
வேதனைகள் சொன்னவன்
காலனையும் இங்கிருத்திக்
கதைகள் பல கேட்டவன்
ஞாலமிங்கு தலைகுனியும்
கோலமதில் வென்றவன்
காலமது பார்த்துத் தன்
காரியத்தைச் செய்தவன்

வேங்கையரின் பாதையிலே இவன்
வெகுண்டெழுந்த சன்னம் - இன
வேதனையைத் தான் சுமந்த
சாத்வீகச் சின்னம்
காந்தியவர் மண்டியிடும்
காவியம் இவன் திண்ணம்
காய்ந்த இவன் நா உதிர்த்த
வார்த்தை இனி மின்னும்.

கருத்துகள் இல்லை: