செய்!  செருக்கை மற!!
செய்! அல்லாவிடின் செத்துமடி!!
இது போரியல் வேதம்!  தமிழீழ விடுதலை வேண்டிக்களத்தில் நிற்கும் வேங்கைகளின் உயிர்வாக்கு! தானை நடாத்தும் தலைவனின் உறுதியுள்ள ஆணை. தமிழீழத்தின் கம்பீரமே இந்த அத்திவாரத்தில் இருந்துதான் ஆரம்பமாகிறது.  இக்கம்பீரம் பொருளாதாரத்தால் நலிவடையலாமா? மக்கள் வாழ்வும், மனநலமும் ஏழ்மைக்குள் மாய்ந்துபிடி அரிசிக்காய் வேகும் நிலைக்கே இன்றைய உலகம் ஈழத்தமிழினத்தை தள்ளிச் செல்கிறது.  புலம் பெயர்ந்து வாழும் நாம் என்ன செய்யப்போகிறோம்?  எங்களை நோக்கி இக்கேள்வி பூதாகரமாக எழுந்து நிற்பது எண்ணங்களை அசைக்கவில்லையா? போரை விதைத்து,  சிங்கள இனவாதம் எங்கள் பூமியின் வளங்களைச் சிதைத்து, எங்கள் வாழ்வியலை வறுமையென்னும் கோரப்பிடிக்குள் தந்திரமாகத் திணித்து,  தங்கள் காலடியில் போட்டுமிதிக்கலாம் என்று கனவு காணுகிறது. எங்கள் பிரச்சினைகளைத் தீர்க்கப் பொருளாதாரம் தடையாக இருக்கிறதென உலகமெல்லாம் கையேந்தி, தம் தரப்பை வலுப்படுத்தி, இன்னும் எம்மை நலியவைத்து நாடாள நினைக்கிறது.  போர் உப கரணங்களாலும், இராணுவ அணிகளாலும் கடந்த காலங்களில் அரச பயங்கரவாதம் பலப்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கும் வேளைகளை அறிந்திருந்தும் சுதந்திரகாலம் பற்றிய சுகமான கனவுகளோடு புலம்பெயர் நாடுகளில் அமுக்கவேளைகளை அமைதி நாட்களாக காட்சிப்படுத்திய மாயவலைக்குள் மயக்கத்தில் கிடந்து,  இப்போது இடியோசை கேட்டு நடுங்கிப் பேதலித்து நாளைநோக்கி நகரும் திராணியற்று விக்கித்து நிற்பதால் ஏதும் மாறிவிடப் போவதில்லை.  வன்னிப் பெருநிலத்தில் ஆரம்பிக்கப்பட்ட அரச கட்டமைப்பு, தமிழீழம் எங்கும் விரிவுபடுத்தி நிலைப்படுத்தக்கூடிய உடல், உள வளங்கள் தமிழீழ மக்களிடம் நிறையவே இருக்கிறது. ஆனால் பொருளாதார வளம் அவர்களை ஏளனப்படுத்தி நகைக்கிறது.  உதவுவதற்கு யாருமில்லாத இத்தகைய காலப்பகுதியில் புலம் பெயர்ந்து வாழும் எங்கள் உறவுகள் குறுகிய மனப்பான்மை கொண்டவர்களாக நான் என்றும், எனது ராசாங்கம் என்றும் தங்களுக்காக தனியே ஒரு குழு என்ற சிறு வட்டத்திற்குள் தத்தம் விவேகங்களைத் தொலைத்து விட்டு திணறிக் கொண்டிருக்கிறார்கள்.  "என்னை முன்நிறுத்தி மதிப்புத் தா!  எல்லாம் செய்கிறேன்."  என்பது போன்ற எண்ணங்களும், வாதங்களும் இன்றைய காலகட்டத்தில் வேண்டாதவை.   நான், நீ எவருமே பெரிதல்ல,  நாம் என்ற எங்கள் இணைப்புத்தான் பெரியது.  தாயகத்தை மனதில் பூசிக்கிற எவருமே தனக்கு என்ற குறுகிய வட்டத்திற்குள் நிற்கமாட்டார்கள்.  பெற்றவள் புண்பட்டு இற்றுக்கொண்டிருக்க உற்றிருக்கும் பிள்ளைகட்குள் பேதங்கள் எழாது.  பாசத்துடிப்பு கைகளை இணைத்து அன்னையைக் காக்கும் வலிமையாய் மாறும்.  செய்!  பின்னர் செய்தேன், செய்தேனென்று செருக்கடையாதே!  இன்னும் நீ செய்ய வேண்டியவை அளப்பெரியன.  தேசத்தின் தேவை விசாலமானது.  ஒருவரால், இருவரால் பூர்த்திசெய்யக்கூடியதல்ல.  எல்லோரும் இணைந்து நிரவவேண்டிய பள்ளம். எனக்கும்,  உனக்கும் போட்டி என்பதை இன்றோடு விட்டுவிடுவோம்.  நான் உனக்கும்,  நீ எனக்கும் தோழர்கள் ஆவோம்.  இறுக இணைக்கும் எங்கள் கரங்களால் தேசத்திற்கு வலிமை சேர்ப்போம்.  
செய்!  செருக்கை மற!!  இதை உனக்கும் எனக்கும் உரிய வேதமாக மாற்றுவோம்!  
நில்!
நீயும், நானும் குறுகிய வட்டத்திற்குள் மறுபடியுமா? புரியவில்லையா?
செய்!  செருக்கை மற!
இது புலம்பெயர்ந்த ஈழத்தமிழரின் வேதமாகட்டும்.
கட்டுண்டு கிடக்கும் காலச்சக்கரம் தன்னியக்கம் பெறுக.
16 ஆண்டுகள் முன்பு
 
 
 

2 கருத்துகள்:
தமிழ்மணத்திற்கு உங்களை வரவேற்கிறேன் வல்வை சகாறா
நன்றி வரவனையான்.
முதன் முதல் என்னை தமிழ் மணத்தின் ஊடாக வரவேற்ற உங்கள் பண்புக்குத் தலை வணங்குகிறேன்.
கருத்துரையிடுக