சுயத்தை ஒடுக்கிய
எங்கள் சூரியத் திருவே
வல்லமை சுரக்கும்
வீரப்பெரும் வரலாறே
தாயக உள்ளொளி பெருக்கும்
தர்மத்தின் உறுதியே
உலகனைத்துமான தமிழினத்தின்
வாழ்வேந்தி வனையும் வல்லமையே
பாடுகிறேன் ஒரு பல்லாண்டு.
பன்னூற்றாண்டுகளின் படிமக்கறைகளைப்
பகுத்தாய்ந்து புறஞ்செய்த காலபிரவாகமே
வல்லரச வியூகங்களை
வலுவிழக்க வைத்த வல்வையின் வனப்பே
இன்றுங்கள் பிறந்த நாள்
ஏழு கடல்களும், ஐந்து கண்டங்களும்
அதிசயித்து நோக்கும் ஆதித்த கரிகாலரே
ஈழத்திரு நிலத்தின்
ஆணி வேர் அமைதி காக்கும் அதி
சாதனைப் பொழுது இது,
அர்த்தமற்றுப் போகாது.
ஈழம் என்ற சொல்லுக்குள்
இணைபிரியாக் காவியமே
இலக்கென்ற வடிவுக்குள்
கலக்கமில்லா ஓவியமே
யாலம் உனை அழிக்காது
சத்தியத்தின் புதல்வரே
தேயு நிலை சில நாட்தான்
தீய்த்தெழும் நின் திடமே
ஆன்ம நின் மௌனமே
அவணியைப் பேச வைக்கும்
அன்னை கை விலங்குடைத்து
அழகு நகை பூண வைக்கும்.
மேன்மை நின் செயலென்று
மேதினியே மனந்திறக்கும்
மானிடத்தின் தெய்வனென
மகிழ்ந்து புகழ் விருந்தளிக்கும்.
செண்பகச் சிறகிடுக்கில்
சிறுத்தையின் சிரிப்பு எழும்
செந்நிறக் கொடி பறக்க
செவ்வாகை மலர் சொரியும்
ஈழமணித் திருநாட்டில்
இந்த நிலை வந்துதிக்கும்
இறைமையுள உன்னாட்சி
அனைத்துலகும் அறம் அணைக்கும்.
வைகறைக்கு வாழ்த்துரைக்க
வயது தேவையில்லை.
சொல்லாட்சி குறைந்திடினும்
சோதிப்பிழம்பிற்கு
பல்லாண்டு பாடுதற்குப் பஞ்சம் வராது.
வல்லமை ஒளிரும்
வரலாற்றுக்குப் பிறந்தநாள்
வாழ்த்தெடுத்து வாய் மொழிந்தேன்
ஐம்பத்து ஐந்தின் அகவை
அய்யனே நின்தன் வாழ்வில்
மங்கலம் பொங்கிப் பொழிய
மண்மகள் மகிழ்வில் விரிய
பண்புடை சொந்தம் குவிய
பாவலர் சந்தம் கவிய
பாரிடை ஈழம் ஆண்டு
வாழ்க நீ பல்லாண்டு.
கட்டுண்டு கிடக்கும் காலச்சக்கரம் தன்னியக்கம் பெறுக.
15 ஆண்டுகள் முன்பு