திங்கள், 29 ஜூன், 2009

ஒதுங்கவும் உள்ளுடுத்தவும் வழியின்றி பெண்மை கறையுற்று நனைகிறது.

அந்த அகதிமுகாம்கள் இல்லையில்லை
மீட்பர்களற்ற வதைமுகாம்கள்
மின்சார முட்கம்பிகள் சூழப்பட்ட
அந்தகாரத்தில் மூழ்கிக் கிடக்கின்றன.

பசி மயக்கத்தில் கேட்பாரற்று
உறவுகளைத் தவறவிட்ட அவலத்தில்
சருகாகின தனிமைக் கூடுகள்.

அட்டதிக்கிலும் முற்றுப்பெறாத ஒப்பாரிகள்
உயிரைப் பிசைந்து உணர்வைக் கரைக்கின்றன.

கூடி அழ ஆளின்றி
மானிட மரணங்கள் மலினப்படுகின்றன.

தன் பிறப்பை மறந்த அன்னையைப் பார்த்து
சிசு கதறிக் கதறி விதி வலிக்கக் கிடக்கிறது.

ஒதுங்கவும் உள்ளுடுத்தவும் வழியின்றி
பெண்மை கறையுற்று நனைகிறது.

மறைப்புகள் அற்ற திறந்த வெளி
இருட்டில் மட்டுமே மானத்தைக் காக்கிறது

அகரத்தை எரிக்கும் அசிட் திரவத்தை
அடிவயிற்றை கிழித்து மிருகங்கள் உமிழ்கின்றன.

நைந்த ஆடையின் கிழிசல்களுக்குள்ளால்
வதையின் ரணங்களை வானமே பார்க்கிறது.


வற்றிய உடல்களை விரித்தும் ஒடுக்கியும்
சுவாசம் பிடிவாதமாய் ஒட்டி அசைக்கிறது.

அக்கினிச் சிறையுடைக்கும் மீட்பர்களுக்காக
மானுட உய்வு காத்துக் கிடக்கிறது.

2 கருத்துகள்:

வரவனையான் சொன்னது…

எப்போதும் இன எதிரிக்கெதிராய் எழும் உங்களின் கந்தகம் கமழும் கவிதை வரிகள் இம்முறை கடமை மறந்த தமிழினத்திற்கு குடிக்க கொடுத்திருக்கிறது ஒரு கோப்பை நிறைய திராவகத்தை.

யாழ் களத்தில் இந்த கவிதையை படித்த பொழுதிலேயே திராவகம் குடித்த உணர்வு.


:(

வல்வை சகாறா சொன்னது…

வரவனையான் மெளனிக்க முடியவில்லை. நித்தியவலிகளாக, காதுகளிலும் கண்களிலும் சிக்கும் செய்திகள் புண்களாகி இதயத்தை இரணப்படுத்துகின்றன. யாராவது எங்கள் உறவுகளை மீட்டு வாழவைக்க மாட்டார்களா? என்ற நப்பாசை முகமே அறியாத மனிதர்களிடம் மண்டியிட வைக்கிறது. எந்த அவலத்தை எவரெவர் அனுபவிக்கிறார் என்று பிரித்துக் கூற முடியாத அளவுக்கு அரச பயங்கரம் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது. இந்த ஒரு கவிதையே கந்தகத் திராவகத்தைக் குடிப்பதுபோல் உணர்த்துகிறதென்றால் எங்கள் வதைகளை.....