திங்கள், 19 ஜனவரி, 2009

நாய் ஒடுக்கி வைத்தாலும் நியாயம் கேட்கும் வல்லமைகள்!!!!!


பனிவிழும் தேசத்து பழகுதமிழ் சோதரே!
இனி வரும் காலம் எங்கள் இருப்புணர்த்தும் நேரம்.

ஆண்டுகள் சிலமுன்னர் நாம் எங்கு நிலையிருந்தோம்?
மீண்டோம் எனும் நினைப்பா... நேற்றைகளை குடித்துளது?
மாண்டு நம் உறவெல்லாம் மண்தின்னப் பார்த்திருந்தும்
கூண்டுக்குள் எமைப்பூட்டி குரல் அடங்கி கிடப்பது ஏன்?

கண்விசிக்க, மனம் வலிக்க, காலமுகம் கண்டிருந்தும்,
கங்குல் கரைத்தழிக்கும் காலம் விட்டு நிற்பது ஏன்?
கந்தகத்து முட்களிடை சொந்த நிலம் வேகுவதை - உம்
செங்குருதிப்பூ விரித்துப் பார்த்திடுக உறவுகளே!

அன்னை திருவாசல் அகலத்திறந்து நீ
முன்னை குதித்தநிலம் உன் மூத்த தாய் அல்லவா?
அவள் வண்ணத் திருமேனி வலியேந்தி நலிகிறது
கண்ணை மூடி நீ காணாது நிற்பது ஏன்?

கந்தகம் துப்பத் துப்ப நொந்தழுதோர் நாம்தானே!
வெந்துஅகம் விழிசுரக்க வேதனைகள் சுமந்தோமே!
இந்த நிலம் வந்தபின்னால் அந்த வாழ்வு மறந்தோமா?
குந்த நிலம் கண்டவுடன் கூன் முதுகு கொண்டோமா?

உன் காலுதைப்பை தன்மேல் காலமெல்லாம் தாங்கியள்
நீ கல் தடுக்கி விழுந்தாலும் காயத்தில் ஏந்தியவள்.
சூழ் கொண்ட கருவறைதான் வெவ்வேறு என்னினமே!
சேர்த்தணைத்து சுமந்தது ஈழத்தாய் மடிதானே!

வசந்தச் சோலையிலே வளவுக்குயில் பாடியதும்,
இசைந்த தெங்கிடையே தென்றல் நடம் ஆடியதும்,
கண்ணுரசும் அலையிடையே கயல்கள் விளையாடியதும்,
எண்ணிப் பார்த்திடுக என்னினமே! என்னினமே!

வாயொடுக்கி, மெய்யொடுக்கி விதியென்று கிடவென்று
வந்தோரும் போனோரும் தந்தனத்தோம் போடுகிறார்.
நாயொடுக்கி வைத்தாலும் நியாயம் கேட்கும் வல்லமைகள்
எம் தாயொடுக்கல் காணாமல் தீர்வெழுத முனைகின்றர்.

எம்மினத்தின் வேதனையை ஏன் அறியாதிருக்கின்றார்?
எண்திக்கும் எவரிருந்து எம் கழுத்தை நசிக்கின்றார்?
கண்ணில் வெண்திரையா? காரணங்கள் பலதிசையா?
எம்மிறக்கை துண்டித்து எது செய்ய நினைக்கின்றார்?

ஈழத் தமிழினமே!
உன்னி மூச்செடுத்தால் உலகெம் திசை திரும்பும். - தாய்
மண்ணுக்கு வலுவூட்ட வல்லமைக் குரல் செய்க!
எமைப் பிள்ளையெனப் பெற்றதெண்ணி ஈழநிலம் பூரிக்கும்.
பின்னாளில் போற்றும் வரலாறும் வாழ்த்துரைக்கும்.

விழவிழ எழுகின்ற வேதம் என்பதெல்லாம்
அழகாக தமிழ் தொடுத்து அரங்கேற்றும் கவிகளுக்கா?
குலம் விளங்க வாழ்ந்தமண் கும்மிருட்டில் விழி கரிக்க
கோடை வசந்தத்தில் கூத்தாடி மகிழ்வதென்ன?

பொங்கு தமிழ் குலமே!

சொந்த உறவுக்குச் சோகங்கள் தருவதற்கா
உந்திக் கிளம்பாமல் உட்கார்ந்து கிடக்கின்றீர்?
முந்திச் செய் தவறால் வெந்தநிலை போதும்
பந்தி படுக்கை விட்டு எப்போது எழுந்திடுவீர்?

அன்னை திருமேனி அந்தரித்துக் கிடக்கிறாள். - எம்மினம்
நொந்து குலையவோ? வேரடி வெம்பி மனையவோ?
எழில்தரும் பனிமுகத்தின் ஈரமலர்களே!
கண்களில் தீ மூட்டுக! ஈழம் காத்திடும் பணி ஏற்றுக!

சனி, 17 ஜனவரி, 2009

எமக்கான வாழ்வுக்காகக் குரல் கொடுத்தும், தமை வருத்தியும் வாழும் தமிழக உறவுகளுக்கு புலம்பெயர்ந்து வாழும் ஈழவள் ஒருத்தியின் உள்ளப்பதிவு.





கடந்த மூன்று தசாப்தங்களாக மிகப்பாரிய அளவில் சிங்கள அரசுகளின் இன அழிப்பு முன்னெடுக்கப்பட்டு, இப்போது வன்னி நிலப்பரப்பினை ஆக்கிரமிக்கும் உச்ச நடவடிக்கையாக கிட்டத்தட்ட ஐந்து இலட்சம் தமிழ் மக்களை ஒரு குறுகிய நிலப்பரப்பிற்குள் நெருக்கித் தனது இன அழிப்பின் உச்சக்கட்டத்தை சிங்கள அரசு நிகழ்த்திக் கொண்டிருக்கிறது.

உணவுத்தடை, மருந்துத்தடை என அடிப்படை வாழ்வாதாரங்களை மறுத்து, அத்தோடு நாளாந்தம் விமானக்குண்டு வீச்சுகளுக்கும், பல்குழல் எறிகணைக் குண்டு வீச்சுகளுக்கும் இரையாக்கப்பட்டும், உடலின் பாகங்கள் சிதைக்கப்பட்டும், அதே நேரம் காயம்பட்டவர்களுக்கு கிடைக்கக்கூடிய ஆகக்குறைந்த முதலுதவியையும் கிடைக்காத அளவுக்கு மீண்டும் மீண்டும் தொடர்ச்சியாக குற்றுயிராகக் கிடக்கும் மக்கள் மேல் குண்டு வீச்சுகளை மேற்கொண்டும், மருத்துவமனைகளையும் இலக்கு வைத்துத் தாக்கிச் சேதப்படுத்தியும் இன்று ஈழத்தில் நடாத்தப்படும் இன அழிப்பை வெளி உலகம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பது வேதனையளிக்கிறது.

ஏழு நாடுகளின் கூட்டு இராணுவ முன்னெடுப்புகளுடன் மேற்கொள்ளப்பட்டுக் கொண்டிருக்கும் இவ் இன அழிப்பு சர்வ தேசங்களாலும் தடை செய்யப்பட்டிருக்கும் கொத்தணி குண்டுகளாக, நாளாந்தம் உயிர்காக்க ஓடியோடி அல்லலுற்றுக் கொண்டிருக்கும் மக்களின் தற்காலிகக் குடியிருப்புகள் நோக்கி வீசப்பட்டு, வயது வேறுபாடின்றியும், சிதறி உடல் அடையாளமின்றியுமாக எம்மினம் அழிக்கப்படுகிறார்கள். கேட்பாரற்று கிடந்துழலும் பிணங்கள் போல் எங்கள் வாழ்வு சிகிலமாகி சிதைகிறது. எங்கள் உயிர் ஓலங்களின் மேலும் பிணக்குவியல்களின் மேலும் சிங்களம் உட்கார்ந்து கொண்டு உலக உலா வருகிறது. இந்த இன அழிப்பாளர்களுக்கு ஆயுதம் வழங்க அனைத்தும் அறிந்த அயல்நாடுகளே போட்டி போடுவது வேதனையாக இருக்கிறது. அதிலும் எங்கள் தொப்புள் கொடி உறவுகளால் உரம்பெற்றிருக்கும் இந்திய நடுவன் அரசும் முன்னணியில் நிற்பது எமக்கு விரக்தியையே வழங்குகிறது.

இருப்பினும்,

தமிழ்நாட்டுத் தொப்புள்கொடி உறவுகள் மட்டும் எங்களுக்காக தங்களை வருத்தும் அறப்போராட்டங்களை நடாத்தி தமிழினத்தின் இருப்பை உலகிற்கு உணர்த்திக் கொண்டிருக்கிறார்கள். கண்கள் பனிக்கின்றன. நாங்கள் தனித்தவர் இல்லையென்று நாளாந்தம் புலரும் பொழுதுகளில் கிடைக்கும் தென்னகத்தாரின் அரவணைப்பும் குரலொலிப்பும் எங்கள் மனவலிகளுக்கு மருந்திடுகின்றன. பரந்த உலகின் பனிக்காடுகளுக்குள்ளும், இயந்திர வயல்களுக்குள்ளும் எங்களின் வாழ்வு உருத்தெரியாமல் அழிவடைந்து கொண்டு செல்கிறது. என்றோ ஒருநாள் எங்கள் தாயக மடியில் உயிர் துறக்கும் வரம் எமக்குள்ளதாக நம்பிக்கை மட்டுமே எம்மிடையே நிலைத்திருக்கிறது.

இன்று விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பின் தலைவர் அண்ணன் தொல். திருமா அவர்கள் இந்திய நடுவன் அரசிடம் ‘வன்னியில் வாழும் ஐந்து இலட்சம் மக்கள் மீதான இராணுவத் தாக்குதல்களை நிறுத்துவதற்கு ஆவன செய்யக் கோரி’ சாகும் வரையிலான உண்ணாநிலை அறப்போராட்டத்தை முன்னெடுத்து மூன்று நாட்களைக் கடந்து கொண்டிருக்கிறார். எங்கள் உறவுகளில் உயிர்ச்சிதைப்பில் எழும் ஓலங்களை மனித காருண்யத்துடன் நோக்கும்படி எங்களுக்காக தமை வருத்தும் தமிழகச் சோதரர்களே! உங்களுக்கு நாங்கள் என்ன கைமாறு செய்யப் போகிறோம்? உங்களுக்குத்தான் எங்களுக்காகப் பேசுவதையிட்டு எத்தனை வாய்ப்பூட்டுகள்? எங்களுக்காக நீங்கள் எழுச்சியுடன் பேசினால் உங்களை வரவேற்க அகலத் திறக்கும் சிறைக்கூடங்கள்.

எங்களுடைய மக்கள் போராட்டத்தின் இன்னொரு வடிவம் தென்னக உறவுகளின் கைகளில் உரமேறிக் கொண்டிருப்பது எங்கள் மக்களின் இன்னலற்ற அன்றாட வாழ்வுக்கு அத்திவாரமிட்டுக் கொண்டிருக்கிறது. பெருந்தாய் தமிழக உறவுகளே! எங்கள் வாழ்வுக்காக உங்களை வருத்தும் உங்கள் போராட்டம் வெற்றிபெறவேண்டும். இந்திய நடுவன் அரசிடம் அறப்போராட்டத்திற்கு எத்தகைய மதிப்புள்ளது என்று நாங்கள் ஏற்கனவே ‘திலீபன்’ என்ற தியாகச்செம்மலையும், ‘அன்னை பூபதி’ என்ற தியாகத் தாயையும் இழந்து அறிந்துள்ளோம். அத்தகைய நிலை உங்களுக்கு வராவண்ணம் உங்கள் நடுவன் அரசு உங்கள் அறப்போராட்டத்திற்கு மதிப்பளிக்கவேண்டும் என்பதே எங்களின் வேண்டுகோள். எங்களுக்கான உங்கள் அறப்போராட்டத்தில் நீங்களும் இழப்புகளை சந்திக்கக்கூடாது என்பது எங்கள் அவா. அண்ணன். தொல். திருமா அவர்களே உங்களுக்குக் கிடைக்கும் வெற்றி எங்கள் மக்களின் இன்னல் குறைக்க எடுக்கப்படும் முதற்கட்ட நடவடிக்கையாக இருக்கும் என்ற நம்பிக்கையுடன் காத்திருக்கிறோம்.

சனி, 10 ஜனவரி, 2009

உலக வல்லாதிக்கத்தின், அவலம் உணராக் கோட்பாடுகளும், ஆயுதப் பரீட்சிப்பும் தொடர்கதையாக எம்மீது எழுதப்படுகின்றன.



மரணத்தை மீறி எழுகிறது எம்வாழ்வு



ஓ..மனிதமே!
இது ஈழத் தமிழினத்தின் இக்காலக்கதை
கண்ணெதிரே இனவாதம் கடித்துக் குதறும்
ஓரினத்தின் குருதி தோய்த்தெழுதும்
எழுதுகோல் கொந்தளிக்கும் உண்மைக்கதை

உலக வல்லாதிக்கத்தின்,
அவலம் உணராக் கோட்பாடுகளும்,
ஆயுதப் பரீட்சிப்பும் தொடர்கதையாக
எம்மீது எழுதப்படுகின்றன.

தொடரும் போரும்,
கந்தகத்தோடு உழலும் வாழ்வியலும்
பொருத்தமில்லாச் சமன்பாடுகளும்
எம்மை நோக்கித் திணிக்கப்படுகின்றன.

எங்கள் சுயமும், எமக்கான வாழ்வும்
மறுக்கப்படுகின்றன.
குரல்கள் ஒடுக்கப்படுகின்றன
ஒரு இனவாதத்தின் படர்கை
எம் வரலாறுகளை தீய்த்து மறைக்கிறது.

முற்றுப் பெறாத கால நீட்சியில்
எம்மினத்தின் வாழ்வு ஏளனத்திற்குள்ளாகிறது.
வெற்றிக் களிப்பில் கூத்தாடும் எதிரியின் ஆட்டம்
உசுப்பி எம்மை உக்கிரப்படுத்துகிறது.

ஒடுக்குதற்கெதிரான நிமிர்வு
வியாபித்து எங்கும் நிறைகிறது.
விடுதலைச் சுடரின் ஒளியில் சுதந்திர வாசனையை
எம் வாசல் நோக்கி அள்ளி வருகிறது காற்று.

அற்றதொரு பொருளுக்குள் புதையும் சுயம்
அடங்காச் சினமாக அவதாரம் எடுக்கிறது.
வெறுமையும் விரக்தியும் வைரம் பாய
மரணத்தை மீறி எழுகிறது எம்வாழ்வு.