
காலப் பெரு வெளியில் - ஈழக்
கதை எழுதும் இளைய தேவரீரே!
தமிழர் வாழ்வெடுக்கத் திறனாயும் பணியதனை
தரணிக்கு விட்டுச்சென்ற தமிழ்மானப் புதல்வர்களே!
வரலாறு எழுதும் வண்டமிழ்க் கோல்களுக்கு
உரமூறும் கரு தந்த காலக் கருவூலங்களே!
கருவூறும் உயிரணுவும், காடேகும் திருவுருவும்,
இருப்புக்கு மத்தியிலே இயங்கும் எவ்வுயிரும்
சிரம் தாழ்த்தி உமைத் தொழுதெழும்.
நீங்கள்
இலக்கெடுத்துப் போனகதை இதயத்தில் வலித்திடினும்,
இனவாத இதயத்தில் அறைந்த சேதி இனிக்கிறது.
வெள்ளரசின் அடியினிலே வேதாளக் கழுத்தறுத்து,
விம்மியழும் அன்னையவள் விழிநீரைத் துடைத்து விட்டீர்.
இது இனங்காக்கும் போர், ஈழ நிலங்காக்கும், மனித வளங்காக்குமெனச் சிங்களச் செழுங்கவியும் - உம் சிறப்பெடுத்துப் பாட, அவர் சந்ததிக்கும் காப்புத் தந்து, சாவணைத்துப் போனீர்கள்.
விலைபோகாத் திருமகனின் வீரப்புதல்வர்களே!
வான் கிழிக்கும் வல்லரக்கர் வடிவுடைத்துப் போட்டு,
மனக்கூன் நிமிர்த்தி, மறவேங்கை மௌனம் கலைத்து,
வலுவூட்டி வளியானீர்! வரலாற்றுத் திருவானீர்!
இனி
இதுகாலம் பிணங்குவித்த இயந்திரக் கழுகுபல
இடிந்துதிர்ந்த ஒலி, உலகின் கேளாச்செவிகளுக்கு கேட்டதென்று ஓலை வரும்
கையெடுத்துக் குலுக்கியும், கனிமுகம் காட்டியும்,
எழுதீயின் கனம் தணிக்க கட்டாயம் பலர் வருவர்.
கலிமீது கலிதூவி தமிழர் வாழ்வெங்கும் வலிதூவும் வல்லபல அரசுகளும் வாசலிலே வந்திளிக்கும்.
அரங்கிற்கு மறைவாக ஆயதவளங் கொடுத்தோரும் - தம் சிரங்கு முகம் மறைத்து சிறப்பாய்வு செய்ய வருவர்.
புலி மௌனம் கலைத்த பூகம்பச் செய்தி - இது
பொல்லாத இனவாதம் பொறி கலங்கும் முதற்படி.
இதயத்தின் மத்தியிலே இடிவிழுந்து கிடக்கும் இலங்கைக்கு இனித்தான் முடிவுரை.
இதுவே சுதந்திர ஈழத்தின் முகவுரை.