திங்கள், 26 பிப்ரவரி, 2007

இருப்பினும் நம்பினோம்!

இந்திய தேசமே இனியும் எம்மினம் உன்னில் பற்று வைப்பது எப்படி? அமைதிப்படை தந்த ஆறாத வடுக்கள் இன்னும் எங்கள் தேகத்திலும், துயரமாய் இதயத்திலும்…… இருப்பினும் நம்பினோம்! தமிழகத்து உறவுகளின் ஆளுமை….., பாரத தேசத்தை ஈழத்தின் திசையில் நேசக்கரம் நீட்ட வைக்குமென்ற எங்கள் நம்பிக்கை காலங்காலமாக இடிக்கப்படுகிறதே. போரின் வலி சுமந்த எங்களுக்குப் போதையூறும் வசனம் பேசத் தெரியாது. பரம்பரைக் குடி நிலங்களைப் பறிக்கும் சிங்களத்தின் கொடுஞ்செயலால் - இன்று சொந்த நிலத்திலும் உலகெங்கிலும் அகதிகளாக அடுத்த தலைமுறையின் வாழ்வுக்கான அத்தனையும் தொலைய அவலப்படுகிறோம். உதவி செய்ய வேண்டாம். எதிரியை ஊக்குவித்து எங்கள் உறுதியை உரசிப் பார்க்க வேண்டாம். உறவுக்கார நிலமென்ற உணர்வு வலிக்கிறது.
தென்னகத்து சினிமா நாயகர்களே! உங்களை ரசித்தோம் வளர்த்தோம். அநீதிக்கு எதிரான உங்களின் ஹீரோத்தனங்களுக்கு உள்ளங்களை பரிசளித்தோம். என்ன?, நீங்களெல்லாம் கோல விளக்கொளியில் கோலோச்சும் பொய்முகங்கள் என்று சிந்திக்க மறந்து விட்டோம்.
உறவுகளுக்குக் கரங் கொடுக்கும் தமிழகத்து உன்னத உள்ளங்களே! உங்களுக்குத் தலை வணங்குகிறோம்.செகிடன் காதிலூதிய சங்கின் நிலை உங்களுக்கு புரிந்து கொண்டுள்ளோம். புலரும் திசைநோக்கி நடக்கின்றோம். இருள் நிறைந்த எங்கள் பயணிப்பில் உங்களின் குரல் எங்களின் காதுகளுக்கு அண்மையில் கேட்கும் பொழுதுகளில் ஆசுவாசப்படுகிறோம்.
தொடரும் எங்கள் தாயக மீட்பில் இருப்பவர் யார் ? இறப்பவர் யார்? என்பது தெரியாது…… அநீதியான ஆதிக்கப் போருக்கு எதிராக முகங்கொடுக்கும் முகப்பில் நிற்கிறோம். சர்வதேசச் சூதாட்டம். எங்கள் மண்ணைக் குதற நேரங்குறித்து நகர்கிறது. வாழ்வோம் என்றாலும், வீழ்வோம் என்றானாலும் தாயகத்தின் மண்ணிற்கு உரமாகி வாழ்வோம். புலம் பெயர்ந்தோர் என்றாலும் தாயகச் சூடு தணியா கனலாவோம்.
தமிழக உறவுகளே!தாய்மானம் காக்க நாங்கள் போரிடுகிறோம்.தமிழ் மானம் காக்க நீங்கள் தோள் கொடுங்கள்!

2 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

எல்லாமே புரியுது. எங்க பிரச்சனையே தனி. நாங்கள் சகதி அரசியலிலும்,
தொப்புள் சினிமாவிலும் மூழ்கிவிட்டோம். ஒரு கூட்டம் பில் கேட்க்கு
பொறந்த்வங்க. அந்த்ப் பசங்களுக்கு ஈழத்தில் நாட்டமில்லை.
அப்படி யாராவது பேசினா உள்ளே போட்டுடுவாங்க.

புள்ளிராஜா

வல்வை சகாறா சொன்னது…

புள்ளிராயா,
ஈழத்தைப் பற்றிப் பேசினா உள்ள போட்டுவாங்கன்னா...இந்திய நாட்டுக்கு ஈழத்தமிழினம் ஆகாத உறவுகளா?