கடந்துவந்த வாழ்வியலை மீட்டிப் பார்க்கும் ஒரு தொடர்பதிவு இந்த மௌனங்கள் கலைகின்றன. எனக்குள் புதையுண்டு கிடக்கும் அனைத்தையும் வரிகளாக்கி இந்த பதிவை படைக்க உள்ளேன்.
முகட்டு ஓடு
பத்து வயது தாண்டினாலே பெண்பிள்ளைகளை வீடுகளில் அடக்க ஒடுக்கமாக இரு என்று பெரியவர்கள் முணுமுணுக்க ஆரம்பித்து விடுவார்கள் என்பது தாயகத்தில் வளர்ந்த அனைவருக்கும் விளங்கும். எங்கள் வீட்டிலும் அப்படித்தான். ஆனால் ஆண்சகோதரர்களுடன் பிறந்து வளர்ந்ததாலோ... அல்லது ஆண்பிள்ளைகள் போன்றே அரைக்காற்சட்டை சேர்ட்டையே அதிகம் அணிவித்து வளக்கப்பட்டதாலோ என்னவோ இந்தப் பெண்பிள்ளையின் அடக்க ஒடுக்கம் என்பது எனக்கு என் சுதந்திரத்தை முடக்குவதாக இருந்தது. இருந்தாலும் வீட்டில் நான் கடைக்குட்டியானதாலும், ஒரே பெண்பிள்ளையானதாலும் நான் செல்லப் பிள்ளையாகியிருந்தேன். அதுவே பெண் என்ற விம்பத்திற்கு திணிக்கப்படும் ஒடுக்கங்களை எனக்கு இல்லாமல் ஆக்கியது. சமூகம் எதிர்பார்க்கும் அடக்க ஒடுக்கங்கள் என்னிடம் இல்லாததால் அயலவர்கள் ஆண்சிங்கி என்ற பட்டத்தையும் எனக்கு வழங்கியிருந்தார்கள். இதை ஏன் எழுதுகிறேன் என்றால் என் 'முகட்டு ஓடு" நினைவுகளை உங்களுடன் பகிரும் போது சில யதார்த்தங்கள் அதனை வாசிக்கும் உங்களைத் துணுக்குறச் செய்யும்.
வாடைக்காற்று வீசும் காலம், நானும் என் இளைய அண்ணனும் நாளில் முக்காலவாசி நேரம் குடியிருப்பது வீட்டின் முகட்டு ஓட்டில்தான். பன்னிரண்டு பதிமூன்று வயதில் நான் மட்டுந்தான் என்வீட்டு முகட்டு ஓட்டின் அரசி. அண்ணன்மார் வெளியே உலாவப் போய்விடுவார்கள். எனக்கு விளையாட வழியில்லை அதனால் முகட்டு ஓடு எனக்கு பிரியமான தோழியாக மாறியது.
கிணற்றடி மூலை மதிலில் பாய்ந்து ஏறி கப்பித்தூணில் காலூன்றி தண்ணீர் தாங்கியில் ஏறி மினசார வயர்களின் கீழாக புகுந்து பிளாட்டிற்குத் தாவினால் வீட்டு ஓட்டிற்கு ஏறிவிடலாம்.
முகட்டு ஓட்டில் நின்று சூழ உள்ளவற்றை பார்த்து ரசிப்பது ஒரு சுகமான அனுபவம்.வீட்டைச் சுற்றிலும் தென்னை மரங்களும் அதன் ஓலைகளில் நர்த்தனமிடும் காற்றும், மாமரத்தில் இருந்து துணைகளைத் தேடிக் கூவும் குயில்களும், பட்டதென்னம் பொந்தில் குடியிருக்கும் கிள்ளைக் குடும்பங்களும், ஒரு திசையில் நிறைந்த வாழைகளும், பிரிதொரு பக்கம் கண்சிமிட்டும் மலர்ச்சோலையும் அதில் தேனெடுக்கும் சிட்டுக்களும், பிளாட்டில் படந்த மல்லிகைகொடியின் மலர்களில் மயங்கிய வண்டுகளும், இன்னொரு திசையில் வான் முட்டும் கடலும் பார்க்கப் பார்க்கத் தெவிட்டாத காட்சிகள். கோயிற்கோபுரம், வாசிகசாலை, வீதிவெளி என்று ஓரிடத்தில் நின்றே ரசிக்க வரந்தந்ததுதான் இந்த முகட்டு ஓடு, அதிலும் வாடைக்காற்றுக் காலமென்றால் வெளவால் ஏற்றுவது எனக்குப் பிரியமானது. அம்மாவின் தையல் இயந்திரத்தில் கொழுவியிருக்கும் இருக்கும் நூல் காற்றில் பறக்கும் வெளவாலுக்கும் எனக்குமான உறவுக் கொடியாக மாறியிருக்கும். வாடைக்காற்று அற்ற காலத்தில் முகட்டு ஓடு கடலையும், வானையும், முகிலின் ஓவியங்களையும் நான் இருந்து ரசிக்கும் சிம்மாசனமாக இருந்தது.
இவையெல்லாம் என் பதின்ம வயதின் ஆரம்ப நாட்கள்.
ஒரு நாள் அதிர்ந்த பெருவெடியின் ஓசை கேட்டு அகதிகளாக ஓடிவிட்டோம். இருவாரங்களாக எங்கள் வீட்டை வந்து பார்க்கமுடியா நிலை.... எங்கள் அயலில் உள்ள வீடுகளை இராணுவம் எரித்துவிட்டதாகத் தகவல்கள் காதிற்கு எட்ட எட்ட அம்மா அரற்றத் தொடங்கி விட்டார். அம்மாவை ஆசுவாசப்படுத்த எங்களுடைய வீட்டுக்கு ஒன்றும் நடக்கவில்லையாம் என்று அப்பாவும் , அண்ணன்மாரும் பொய் புனைந்தார்கள் தற்காலிகப் பொய் எத்தனை நாளைக்கு?
வீட்டிற்கு வந்தோம்....வீட்டைப்பார்த்ததும் அம்மா கதறி அழுதார்.அப்பாவும் , அண்ணன்மாரும் கண்கள் கலங்கக் கலங்கத் துடைத்தபடி நிற்க, நான் மட்டும் உறைத்துப் போனேன். பிளாட்டில் படர்ந்த மல்லிகைக் கொடி கருகிக் கிடந்தது. என் வீட்டின் மலர்சோலையும் கரிய புகைபடிந்து பச்சையத்தைத் தொலைத்திருந்தது. தென்னோலைகள் தீயால் எழுந்த வெம்மையில் பொசுங்கி இருந்தன.
என்னுடைய சிம்மாசனம்.....எரிந்த வீட்டின் சாம்பலுக்குள் தன் செம்மையை இழந்து கரிக்கட்டிகளாகச் நொறுங்கிக் கிடந்தது...எரிந்த வீட்டில் மெல்லக் கால் வைத்து நடந்தபோது காற்பதிவுகளில் வெம்மை தன்னை உணர்த்தியது. நொறுங்கிய என் சிம்மாசனத்தைத் தொட்டுத் தடவி கைகளில் தூக்கிய போது அதன் அடியில் எனது பாடசாலைப் புத்தகங்களும், வெள்ளைச் சீருடையும் பாதி எரிந்தும், கருகியும் தீக்காயங்களுடன் என்னைப் பரிதாபமாகப் பார்த்தன. உறைத்துப் போன எனக்கு அவற்றின் பரிதாபப்பார்வை புரியவில்லை.
என் முகட்டு ஓட்டுச் சிம்மாசனம் தகர்ந்ததோடே என் பள்ளிவாழ்வும் என்னிடமிருந்து பறிக்கப்பட்டுப் போனது. அன்று இராணுவத்தால் எரியூட்டித் தகர்க்கப்பட்டது என்முகட்டு ஓட்டுச் சிம்மாசனம் மட்டுமல்ல, என் கல்விக் கண்ணின் கனவுகளுந்தான்.