வெள்ளி, 4 ஏப்ரல், 2008

குருதி பெருக்கெடுக்கும் இறுதிவேண்டுகை தாயே!

உலகத் திசையெங்கும் உழலும் தமிழ் விழுதுகளின் வேர்மடிக்கும் தாய்மடியே!

உறுதி குலையாத உரம் அன்றுதந்து, விடுதலையின் பொறி வளர்த்த பெருந்தாய் தமிழகமே!

ஊற்றுவாய் பிளந்தாற்போல் உணர்வோட்டம் பொங்கக்காற்று வழி கேட்கும் வள்ளுவக் கோட்டமே!

எம்திசை பார்த்தொருகால் உன் பூந்தாழ் திறவாயோ?
வார்த்தெடுத்துப் புனைந்து கவி சொல்ல வரவில்லை
வற்றாத வரலாற்று வரைவுகளால் இவ்வழி வந்தோம்.

ஆர்த்து, அணைத்து, ஆர்ப்பரித்துப் பேசிடவும்,
பார்த்துப் பசியாறி, பல்லாங்குழி ஆடிடவும்,
கோர்த்துக் கைகுலுக்கிக், கொவ்வையிதழ் விரித்திடவும்,
ஈர்ப்பு இருக்கிறது,....
எனினும் இப்போது முடியவில்லை.

கண்ணீர் பெருக்கெடுக்க,
உப்புக் காற்றின் உறவோடு தனித்தபடி,
கூப்பிடு தொலைவில்த்தானே...
எம்தேசம் கும்மிருட்டில் கிடக்கிறது.

ஆற்ற ஒரு நாதியின்றி, - எம்மினத்தின்
அவலத்தைத் தேற்ற ஒரு தேசமின்றி,
அம்மா!.......உன் கையணைக்கும் தூரத்திலல்லவா...
எம்பூமி காயம்பட்டுச் சிதைகிறது.

வாதைகள் பல சுமந்து,
கந்தகக் காலனின் குடியிருப்பில்,
குடி சுருங்கி,
கொப்பளிக்கும் குருதிவழி குலைசிதற,
இடிதாங்கி, இடிதாங்கி.... அடிதாங்கும் நிலை கூட...
இன்னும் உன் கண்களுக்குத் தெரியாமல் மறைப்பதென்ன?
உன் விழிமணிகள் மீதமர்ந்த வெண்சவ்வா?
இல்லாவிடின் வேண்டா உறவென்ற விளங்காக் கொள்கையா?

கட்டாய வலி வந்து,
கால் அகட்டிக் கிடக்கையிலே
ஆடைச் சரிவிற்குள் அந்நியர்கள் பார்வை...
எங்கள் தொப்புள் கொடிக்கான தொடர்பந்தம் நீதானே....
எப்படித் தனிக்க விட்டாய்?
ஏதிலியாய் தவிக்கவிட்டாய்?

சாவின் விளிம்பினிலே,
கூவிக் குளறி எம்தேசம் அழுகையிலே,
ஆவி துடித்தெழுந்து...
தாவி அணைக்கும் தாய்மடி நீதானே!

வாரியணைத்தெம் புவியின் வண்ணமுகம் பார் தாயே! - எவ்
வல்லமையும் உடைக்க முடியாத் தாய்மைவேதம் நீதானே!

தாயே!......
குமுறும் எம் உள்ளக் கோபுரத்தை வருடி எப்போது ஆற்றுவாய்?
தனித்த எம் வேர்மடிக்குத் தாங்கும் வலுவாய் தோற்றுவாய்?

அம்மா!
இது குருதி பெருக்கெடுக்கும் இறுதிவேண்டுகை தாயே!
பாராமுகம் வேண்டாம்.
வா!... பக்கத்துணையாய் இரு!

வேற்று மருத்துவச்சி வேண்டவே வேண்டாம்.
எம்புவியின் பேற்று மருத்துவச்சியாய்
நீயே பிள்ளைக் கொடி அறு!

1 கருத்து:

உலவு.காம் (தமிழர்களின் தளம் வலைபூக்களின் களம் - ulavu.com) சொன்னது…

அருமை அருமை

தொடர்ந்து எழுத வாழ்த்துக்கள்