ஞாயிறு, 20 செப்டம்பர், 2009

ரொரன்டோ அமெரிக்கத் துணைத்தூதரகத்தின் முன்பாக 150 ஆவது நாளும் முழக்கப் பேரணியும்












கனடா ரொரன்டோ நகரில் 360 யூனிவேர்சிற்ரி வீதியில் அமைந்திருக்கும் அமெரிக்கத் துணைத்தூதரகத்தின் முன்பாக தமிழ் மக்களால் நடாத்தப்பட்டுவரும் கவனயீர்ப்பு நிகழ்வு 19 - 9 - 2009 சனிக்கிழமை தொடர்கவனயீர்ப்பின் 150 ஆவது நாளை நிறைவு செய்தது. இந்தக்கவனயீர்ப்பின் 150 ஆவது நாளையொட்டி ரொரன்டோ மத்திய பகுதி வீதிகளில் முழக்கப்பேரணியும் இடம்பெற்றது. இப்பேரணியானது யூனிவேசிற்ரி வீதியின் பாதையோரமாக வலது புறமாக அணிவகுத்து கொலிச் வீதியின் பாதையோர நடைபாதையினூடாக யங் வீதியில் வலதுபுறமாக நகரும்போது அதிகரித்த மக்கள் தொகையினால் ரொரன்டோ காவற்றுறையினர் யங் வீதியின் வாகன போக்குவரத்தின் ஒரு பாதையை நிறுத்தி அதனூடே பேரணியை நகர்ந்து செல்ல உதவி வழங்கினர். யங் வீதியின் போக்குவரத்ததுப் பாதையில் நகர்ந்த பேரணி மீண்டும் ப்ரொன்ட் வீதியில் வலது புறமாகத் திரும்பி யூனிவேர்சிற்ரி அவெனியு வீதிக்கு வந்து ஆரம்பித்த இடத்தை வந்தடைந்தது. ரொரன்டோ நகர மத்தியில் விடுமுறை நாட்களின் சனநெரிசல் நிறைந்த நேரமான மாலை ஐந்தரை மணிக்கு ஆரம்பமாகிய இப்பேரணி 8 மணியளவில் ஆரம்பித்த இடத்தை வந்தடைந்து சிங்கள இனஅழிப்பில் பலியான மக்களுக்கும் போராளிகளுக்கும் சுடர்வணக்கம் செய்து நிறைவுற்றது. இத் தொடர் கவனயீர்ப்பு தாயகத்தில் வதைமுகாம்களுக்குள் வாடும் தமிழ் மக்களி மீள தத்தம் சொந்த இடங்களில் குடியமர்த்தப்படும்வரை தொடர்ந்தும் தினசரி நடாத்தப்படும் என்று அறிவிப்போடு நிறைவுபெற்றது.

சனி, 19 செப்டம்பர், 2009

வரலாற்றுப் பதிவாகும் 150ஆம் நாள் கவனயீர்ப்பு (கனடா)







கனடா ரொரன்டோ நகரின் மத்தியில் 360 யூனிவேர்சிற்றி அவெனியு வீதியில் அமைந்திருக்கும் அமெரிக்கத் துணைத்தூதரகத்தின் முன்பாக 149 நாட்களைக் கடந்தும் தொடரும் கவனயீர்ப்புப் போராட்டம்.

நாளாந்தம் காலை 8 மணிக்கு ஆரம்பமாகும் இக்கவனயீர்ப்பு மாலை 9 மணிக்கு சிறீலங்கா


அரசினால் படுகொலை செய்யப்பட்ட அனைத்துத் தமிழ் மக்களுக்காக மெழுகுவர்த்தி ஏந்திப் பிரார்த்தனை செய்து நிறைவுபெறுகின்றது.

150ஆம் நாளான 19 - 9 - 2009 சனிக்கிழமை நண்பகல் 12 மணியிலிருந்து மாலை 9 மணிவரை இக்கவனயீர்ப்பு நிகழ்வு நிகழும் எனவும் அத்தோடு மாலை ரொரன்டோ மத்திய பகுதியில் பேரணியும் இடம்பெறும் என்பதை தொடர்ந்து அங்கு இக்கவனயீர்ப்பை நடாத்திவரும் தன்னார்வத் தொண்டர்கள் அறிவித்தூள்ளார்கள்.

உறவுகளே தொடர்ந்து 150 நாட்களாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் இக்கவனயீர்ப்பு ஒரு வரலாற்றுப் பதிவாகிக் கொண்டிருக்கிறது.

எல்லாத்திக்கிலிருந்தும் யூதர்கள்போல் ஒன்றிணையவேண்டும் என்ற கருத்து வரும் அளவிற்கு சொல்கின்ற வாய்களோ எழுதுகோல்களோ செயலாற்றவில்லை என்றே தோன்றுகிறது. புலம்பெயர்ந்த தெருக்களில் கவனயீர்ப்புகள் செய்யும் மக்களைச் சோர்வடையச் செய்யும் உத்திகளுக்கு விலைபோகாமல் தொடர்ந்தும் எங்கள் மக்களின் அறவழிப்போராட்டங்கள் வெளிநாடுகளில் தொடர்ச்சியாக நிகழ்த்தப்படுவதன் மூலமும் வதை முகாம்களுக்குள் வாடும் எம் மக்களை விடுவிக்க வெளிநாடுகள் எடுக்கும் முயற்சிகளுக்கு நெம்புகோலாக மாறலாம்.

இன்றைய திலீப நினைவு நாட்களின் தொடர்ச்சியில் நாமும் எல்லாத் திக்கிலும் எம்மக்களின் அவலவாழ்வை வெளிக் கொணர்வதே காலத்தின் தேவை.
பார்வையாளர்களாக, விமர்சகர்களாக இல்லாமல் புலம்பெயர் மக்கள் போராட்டங்களில் பங்காளிகளாக மாறுங்கள். மக்கள் சக்தி சாதித்தே தீரும்.

வியாழன், 17 செப்டம்பர், 2009

மனைகளின் முகப்புகளையே மயானங்களாக்கி சிதைகளை மூட்டிய வரலாறு எமக்குண்டு


விழுகை என்பது விதிப்படியும்
எழுகை என்பது வினைப்படியும்
நிகழ்ந்தே ஆகவேண்டும்.

நேற்றொரு நாள்
சத்திய வேள்வியில் திலீப சொரூபம் தீய்ந்த போது
கண்ணீரில் கருத்தரித்தது கால நெருப்பு

இந்தியப்பூதத்தின் பொம்மலாட்டம், புனைவெல்லாம்
விடுதலைத் தழலில் வெந்து போயின.

சத்திய வேள்வி சாகாவரம் பெற்றது.
இந்தியத்தை விட்டு
காந்தீயம் கப்பலேறிக் காணாமல்போனது.

இனத்தின் நித்திய வாழ்வுக்கு
நிம்மதியைக் கேட்ட சத்தியத்தேவன்
சருகாய் உலர்ந்து உயிர் களைந்தான்.

பிராந்திய வல்லரசின் சூழ்ச்சி
தோற்றதன் எதிரொலியை
ஈழத்தின் முற்றம் வடுக்களாய் ஏந்தியது.

மக்களின் தோள்களே மண்மீட்பைச் சுமந்தன.

ஒப்பாரியின் உள்ளொலியில்
பறைகளும் முரசுகளும் அதிர்ந்தன.

கால நெருப்பை ஏந்திய கண்களே
காவல் தெய்வங்கள் ஆயின.

அடைக்கலம் தந்த உறவுகளே
ஆற்றல்களையும் வழங்கின.

இன்னலைச் சுமந்த இருப்புகளே
ஈழத்தை மனதில் ஆழப்படுத்தின.

முகாரிகளை இசைத்தபடியே
புல்லாங்குழல்கள் பூபாளத்தை நோக்கி நகர்ந்தன.

பிணம் புழுத்த வீதிகளிலேயே
பிரசவங்களும் உதிரத்தைப் பாய்ச்சின.

மனைகளின் முகப்புகளையே மயானங்களாக்கி
சிதைகளை மூட்டிய வரலாறுகள் தோன்றின.

எண்ணிக்கையற்ற வலிகளைச் சுமந்தும்
எழுகையே எங்களின் இருப்பை வனைந்தது.

இன்றைகள் மட்டுமேன்....
துருவ முனைகள் வரைக்கும்
உறைந்து கிடக்கிறது மூளா நெருப்பு!

பூபாளத்தை மறந்து புல்லாங்குழல்கள்
முகாரிகளையே முழுமை என்கின்றனவே!!!

ஒலியை இழந்தால்
பறைக்குப் பெருமையில்லை

பாதி வழியில் நின்று விட்டால்
பயணத்தில் முழுமையில்லை

விதியென்று ஓய்ந்து விட்டால்
மதியிருந்தும் பலனில்லை

விழல் என்று முடிவெடுத்தால்
விடுதலைக்கு இடமில்லை

நித்திய வாழ்வுக்காய்
நிம்மதியைக் கேட்ட இனம்
சத்திய வாழ்வின் சருகாகிக் கிடப்பது
காலநீட்சியின் காட்சி ஆதல் கூடாது

மாற்றமே இல்லாதது மண்மீட்பு.

மீட்சியின் திசையில் காற்றெழும் காலமுணர முடியாமல்
தத்தளித்து நிற்பது எவருக்கும் இயல்புதான்

கடந்த காலத்தின் நீட்சியை ஒரு கணம்
காட்சிப்படுத்தல் காலத்தின் அவசியம்.

மீண்டும்…..
கண்ணீரில் கருத்தரிக்கட்டும் காலநெருப்பு.

வெள்ளி, 4 செப்டம்பர், 2009

கனடாவில் அமெரிக்கத் துணைத்தூதரகத்தின் முன்பாக 135 ஆம் நாள்

கனடா ரொரன்டோ மத்தியில் 360 யூனிவேர்சிற்றி அவெனியூ வீதியில் அமைந்திருக்கும் அமெரிக்கத் துணைத்தூதரகத்தின் முன்பாக 135 ஆம் நாளாகத் தொடரும் கவனயீர்ப்பு தினசரி காலை 8 மணியிலிருந்து மாலை 9 மணிவரை நிகழ்ந்து சிங்களத்தால் கொல்லப்பட்ட மக்களுக்கும் போராளிகளுக்கும் மெழுகுவர்த்தி ஏந்திய பிரார்த்தனை நிகழ்வுடன் நிறைவு பெறுகிறது. காட்சிப்படுத்தல்கள் சில...







நாளாந்தம் காலை 8 மணியிலிருந்து மாலை 9 மணிவரை இக்கவனயீர்ப்பு தொடர்ந்து நடைபெறும் என்பதை அக்கவனயீர்ப்பில் கலந்து கொள்ளும் மக்கள் அறிவித்துள்ளனர்.

கனடாவில் "உண்மையைப் பேசவிடு" ஆர்ப்பாட்ட ஒன்று கூடல்












'உண்மையைப் பேசவிடு' ஆர்ப்பாட்ட ஒன்றுகூடல்

கனடியத் தமிழர் சமூகமும் கனடிய மாணவர் சமூகமும் இணைந்து 'உண்மையைப் பேசவிடு" என்ற ஓர் ஆர்ப்பாட்ட ஒன்றுகூடலை 250 Front streetல் அமைந்துள்ள CBC ஊடக மையத்தின் முன்பாக செப்ரெம்பர் 4 ந்திகதியான இன்று மாலை 3 மணியிலிருந்து 8மணிவரை முன்னெடுத்திருந்தனர். பல நூற்றுக்கணக்கான மக்கள் இவ் ஆர்ப்பாட்ட ஒன்று கூடலில் கலந்துகொண்டனர். எழுச்சியுடனும், கோபத்துடனும் மக்கள் உண்மைகளை உரத்துக் கூற ஊடகத்துறையினருக்கு அழைப்பு விடுத்ததுடன் சிறீலங்கா அரசின் நீதித்துறையால் 20 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்ட ஊடகவியலாளர் திசநாயகத்தையும் விடுவிக்க ஊடகத்துறை சார்ந்தவர்கள் முன்வரவேண்டும் என்றும் கேட்டு கொண்டனர். கனடிய தமிழர் சமூகமும், கனடிய மாணவர் சமூகமும் முன்னெடுத்த இந்நிகழ்வை மாணவர் சமுதாயமே மிக முனைப்புடன் நின்று முன்னெடுத்தமை குறிப்பிடத்தக்கது