திங்கள், 26 நவம்பர், 2007

தெய்வீக புருசர்களே!...நீங்கள் தவழ்ந்தும், தாவியும் விளையாடி மகிழ்ந்த அமிழ்த மடியும், அன்பீந்த தோளும் துவண்டு நிற்குதய்யா! துயர் துடைக்க வாருங்களேன்!


கார்த்திகைப் பேரொளியில், விழியோரக் கசிவோடு
மீட்பர்களே!.....
நீங்கள் விதையான தாய்மடிநோக்கி உமைநாடி அணி வகுத்தோம்.
பார்த்தொருக்கால் விழிதிறந்து உம் பூத்தமலர் முகங்காட்டிபுன்னகைத்துக் கதைபேசி கண்மணிகாள் உறங்குங்கள்.
நெஞ்சப் பெருவெளியில் நினைவெல்லாம் விக்கிநிற்கஅஞ்சாத் தேவர்காள் அகமெல்லாம் நிறைகின்றீர்!
வெஞ்சமர்க் களமாடி வேர்மடிக்குக் காப்புடுத்தி காயத்தை மறைத்து கண்மறைத்து கரைந்தோரே!

காற்றின் வழி எங்கள் மூச்சின் சுழல்களுக்குள் வீச்செடுத்து உலவுகின்றீர்! உணர்கின்றோம்..... உவக்கின்றோம்.

கண்ணுணராப் பொருளாக எம்கடிமனதில் உறையும்
காவல் தெய்வங்களே! கடுங்கோபங் கொள்ளாதீர்!
கண்மீறி வழிகின்ற ஈரத்தின் உப்பினை வடிகட்டி நிறுத்த கண்ணிமைக்குத் தெரியவில்லை. எண்ணெடுத்து பார்க்கின்றோம். எத்தனை ஆயிரமர் மண்மடிக்குள் உரமானீர்!

பண்ணெடுத்து பாடிடவும், பருவகாலம்போல் மாவீரர் மலரடிக்கு மலர்தூவி வணங்கிடவும்
இவ் யென்மம் போதாதென இதயப்பூ கசிகிறது.

காலப் பெரு வெளியில், கார்த்திகைப் பேரொளியில்,
ஆர்த்தெழும் மூச்சின் வளியில் முகங்காட்டும் முறுவலரே!
ஆரத்தழுவி உங்கள் அன்பு சொல்லிச் சென்றபோதும்
ஊணுருகி, உயிர்கசிய உறுதி மொழிபேச.....
இந்த மாவீரர் கோட்டத்திற்கு மலரோடு வருவோமென்று கூறுகெட்ட மனம் குறிபுணர்ந்து கொள்ளலையே!

அம்மாவிடம் சுகம் சொல்லு!,
அப்பாவிடம் சுகம் சொல்லு!,
அண்ணாவிடம் சுகம் சொல்லு!,
அக்காளிடம் சுகம் சொல்லு!
எத்தனை சுகங்களை எம்மிடையே சொல்லிவிட்டு
கண்மலர்ந்த சிரிப்போடு கந்தகம் சுமந்து சென்றீர்.

வந்திடுவீர், வந்திடுவீர் என்றும்மை எதிர்பார்த்த
அம்மையும், அப்பனும் இன்றிங்கே வந்துளரே!
எழுந்து வந்து பேசய்யா! எழுந்து வந்து பேசம்மா!

தெய்வீக புருசர்களே!...
நீங்கள் தவழ்ந்தும், தாவியும் விளையாடி மகிழ்ந்த
அமிழ்த மடியும், அன்பீந்த தோளும் துவண்டு நிற்குதய்யா!
துயர் துடைக்க வாருங்களேன்!

பால்மாச், சீனி, பனங்கட்டியும், அடிபட்டு உண்ட சொக்லேட் வகையும்,
அம்மா தந்த நிலாச் சோறும்,
அண்ணன் தம்பி உறவின் இறுக்கமும்
மெல்லென விசித்த உற்றார் உறவுகளும்
பாசச்சுழலில் கசிந்து கசிந்து உங்களைத் தேடி இங்கு வந்துளரே!
உன்னத தேவரே!
உங்கள் உறவுக்கொடிகளை அணைத்து தேற்றி ஆறுதல் வார்த்தை ஒருமுறை சொல்லி மறுபடி நீங்கள் உறங்குங்கள்!
கிட்டிப்புல்லும், கிளித்தட்டும்,
எட்டிப்பிடிக்கும் தொட்டாத் தொட்டும்
கொட்டும் மழையில் கப்பல்விட்ட
ஆசைத்தோழரும் இங்குளரே!
பள்ளிக்கூடப் பிரிந்த நட்பும்,
பருவத்தில் காதல் கொண்ட உறவும்
ஊர்பேர் அறியா உவந்த தோழரும் உருகித் தவிக்கிறார் பாருங்கள்!

ஒரு முறை வந்து திருமுகம் காட்டி
உருகும் தோழரின் உளத்தை தேற்றிவருகிறேன்
என்றொரு வார்த்தையைக் கூறி விதைகுழிகுள்ளே ஓய்வெடுங்கள்.

காலப் பெருவெளியில், கார்த்திகைப் பேரொளியில்,
ஆர்த்தெழும் மூச்சின் வளியில் வருவீர் என்றொரு நம்பிக்கை சுமந்து நாட்களைக் கடந்து நாம் செல்வோம்.
உருகிய பனியென, உணர்வுகள் அலையிட,
உறங்கும் உமக்கோர் உறுதி தந்தோம்.
எவ்வழி பற்றி எம்மிடை பிரிந்தீர்.
அவ்வழிபற்றி எம்நடை தொடர்வோம்.

கருத்துகள் இல்லை: