வெள்ளி, 3 ஜூலை, 2009

தேடற்கவியின் உழல்வை இதயக்குழி உள்வாங்க உயிர்ப்பின் மூச்சு ஓசோன் ஓட்டையாக…




தேடற்கவியின் உழல்வை
இதயக்குழி உள்வாங்க
உயிர்ப்பின் மூச்சு
ஓசோன் ஓட்டையாக…

காலம் எழுதியின் கவனப்பிழை
கருப்பைச் சுவர்களில் விசமுட்களாய்…
தரித்த குளவியின் பாதி உடல்
சீழ்கட்டிப் போய் சிகிலமாக…
பிணவாடை, கொள்ளை கோமாரி
ஐயோ….
பச்சை உடம்புக்காரி படுக்கையிலே….

காலம் எழுதியை அழைத்து வருவீர்.
வனையும் சூட்சுமத்தை வசீகரித்து
கால் செருப்பாக்கி
கொப்பளிக்கும் கானல் வெளியில்
கிடந்துழலும் மனிதர்களின்
வேதனையை உணர்த்த வேண்டும்.

பாழும் உலகிடையே வாழக் கேட்டு
வெட்கங்கெட்டுக் கிடக்கும் ஆறாம் அறிவு
தேவையற்றதாகத் தீர்மானிக்கப்பட்டாயிற்று.

த்தூ…..
மண்ணாங்கட்டிகளே! குந்தியிருந்து
மணிக்கணக்காப் பேசுக.

எங்கே எவர் தலையில்
குண்டுகளைக் கொட்டலாம்?

இன்னும் குற்றுயிராய், குலையுயிராய்
துடிதுடிக்க வதைத்தழித்து
மந்தைப் பட்டிக்குள் போட்டு மேய்க்க
எந்தச் சனியனுக்குத் திட்டமிருக்கோ
அங்கின போய்க் கொஞ்சிக் குலவுக.

பொட்டைடைக்கண்களுக்கு
அசோக மலர்களிடம் அடங்காத ஆசையோ?
இத்தொப்பி எவருக்கென்று
தொல்பொருள் ஆராய்ச்சி தேவையில்லை

காலம் எழுதிதான் கவனப்பிழை விட்டானென்றால்
கந்தறுந்த மனிதமுமா கண் கெட்டுக் கிடக்கிறது?

கோல விளக்கொளியில் கோலோச்சி வந்த மக்கா!
ஆட்சிக் கதிரைக்கு ஆளாய் பறந்து
அன்னை தமிழுக்கு ஆலவிசம் தந்தனையே….
போதுமப்பு உன் நடிப்பு.,

எல்லை தாண்டி வந்த கேடி
உயிரறுத்து துவசம் செய்தான்.
பள்ளி முதல் பங்கர்வரை
பாழ்படுத்திப் போனான்.
உயிர் கிடந்து உழன்றதனால்
ஊனத்துடன் அழுதலைந்தோம்.
விட்டானா?...
கந்தகக்குண்டுகளில் நஞ்சிருத்தி
கொன்றொழித்தான்
சந்ததி முழுவதையும்
சகதிக்குள் புதைய வைத்தான்.
மந்தைகளாய் அடைத்துள்ளான்.

அவன் சமபந்தி வைப்பானாம்.
சந்தர்ப்பம் பார்த்து சர்ப்பங்கள் ஆடுகின்றன.

வெந்து கிடக்கிறது உள்ளம்.
மீளத் தெளிவு
மிடுக்கெடுத்த நிமிர்விற்காய்
காலமுட்கள் கைநீட்டுகின்றன.

உயிர்த்தெழுக.
பீனிக்ஸ்ஸின் பிறப்புக்கு நாள் குறித்தாயிற்று.

2 கருத்துகள்:

வரவனையான் சொன்னது…

//கோல விளக்கொளியில் கோலோச்சி வந்த மக்கா!
ஆட்சிக் கதிரைக்கு ஆளாய் பறந்து
அன்னை தமிழுக்கு ஆலவிசம் தந்தனையே….
போதுமப்பு உன் நடிப்பு., //

savukkadi

CitiSiva சொன்னது…

கண்ணீரையும் சினத்தையும் ஒருங்கே வரவழைக்கிறது. இது கவிதை அல்ல. வலியின் வரிகள்.

தம்பியின் தம்பி சிவா